நாசுக்காக நச்சென கோரிக்கை வைத்த மருத்துவர் இராமதாஸ்.. செய்வாரா முதல்வர் மு.க ஸ்டாலின்?..!! - Seithipunal
Seithipunal


மதுக்கடைகள் மூடல் விவகாரத்தில், கடந்த அரசிடம் தி.மு.க. வலியுறுத்தியதை செய்ய வேண்டும் என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியும் கூட, மதுக்கடைகளை மூடுவதற்கான ஆணை இப்போது வரை பிறப்பிக்கப்படவில்லை. கொரோனாவை தடுப்பதை விட மது விற்பனை செய்வதில் அரசு அதிக ஆர்வம் காட்டுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பட்டியலிட்டால் அதில் முதலிடம் அளிக்கப்பட வேண்டியது மதுக்கடைகளை மூடும் முடிவுக்கு தான். காரணம்.... கொரோனா வைரஸ் பரவுவதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று மது ஆகும். மதுக்கடைகளில் மது வாங்குவதற்காக கூட்டம் முண்டியடிக்கும் போது, அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால், அது அங்கு நெருக்கமாக இருக்கும் அனைவருக்கும் எளிதாக பரவி விடும். அதுமட்டுமின்றி, மது அருந்தும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் கொரோனா வைரஸ் மிகவும் எளிதாக தாக்கி விடும் என்பதால், மது குடிப்பதை தடை செய்ய வேண்டும் என்று உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதனால், தான் மதுக்கடைகளை மூட ஆணையிடுமாறு கடந்த ஒரு மாதமாக தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன்.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பிருந்த நிர்வாகம் மது வணிக நேரத்தை ஒரு மணி நேரம் மட்டுமே குறைத்தது. தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு பிந்தைய நிர்வாகம், வணிக நேரத்தை குறைப்பதாகக் கூறி, மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு மாற்றாக காலை 8.00 மணிக்கே திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புதிய அரசு இன்று காலை தான் முறைப்படி பொறுப்பேற்றுள்ளது என்றாலும் கூட, மதுக்கடைகளை காலை 8.00 மணிக்கு திறக்கும் முடிவை இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கலந்தாய்வு நடத்தி அவரது ஒப்புதலுடன் தான் அதிகாரிகள் எடுத்ததாக அறிகிறேன். இந்த முடிவு கொரோனா பரவலைத் தடுப்ப்பதற்கு பதிலாக அதிகரிப்பதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மது வணிக நேரத்தை குறைப்பதாகக் கூறுவதெல்லாம் ஏமாற்று வேலை தான். தமிழகத்தில் மதுக்கடைகள் தினமும் 10 மணி நேரம் திறந்திருந்தாலும், 3 மணி நேரம் மட்டுமே திறந்திருந்தாலும் விற்பனை குறையாது என்பதை தமிழகத்தின் மது வணிகம் குறித்த நுட்பம் தெரிந்தவர்கள் அறிவர். மதுக்கடைகளுக்கு இரு நாள் விடுமுறை விடப்பட்டால் அதற்கு முந்தைய நாளில் வணிகம் மும்மடங்கு அதிகரிப்பதும், ஒரு நாள் விடுமுறை விடப்பட்டால் அதற்கு முந்தைய நாளில் மது வணிகம்  இரு மடங்கு அதிகரிப்பதும் இந்த சூத்திரத்தின் அடிப்படையிலானது தான். தமிழகத்தில் இப்போது மது வணிக நேரம் 9 மணியிலிருந்து 4 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்றாலும் விற்பனை குறையாது. மாறாக, 9 மணி நேரத்தில் மது வாங்குபவர்கள் அனைவரும் 4 மணி நேரத்தில் குவிந்து மதுப்புட்டிகளை வாங்கிச் செல்வர் என்பதால் மதுக்கடைகள் கொரோனா பரவல் மையங்களாக மாறும்.

அதனால் தான் கடந்த ஆண்டில் கொரோனா முதல் அலை தொடங்கிய போதும், இப்போது இரண்டாம் அலை தொடங்கிய போதும் மதுக்கடைகளை முதலில் மூடுங்கள் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டேன். ஆனால், மளிகை, காய்கறி கடைகளைத் தவிர வேறு எந்த கடைகளையும் நேற்று திறக்கக்கூடாது  என்று ஆணையிட்ட தமிழக அரசு, மதுவை மட்டும் அதி அத்தியாவசியப் பொருளாக கருதியோ, என்னவோ மதுக்கடைகளை காலை 8.00 மணிக்கே திறக்க அனுமதித்திருக்கிறது. பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் என கருதமாட்டார்கள்.

கடந்த காலங்கள் நினைவுக்கு வந்தால், இந்த உண்மையை இன்றைய முதலமைச்சர் ஸ்டாலினாலும் உணர்ந்து கொள்ள முடியும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது மதுக்கடைகளை மூடுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. உடனடியாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா பரவல் குறைந்து விட்டதாகக் கூறி மே 7-ஆம் தேதி, அதாவது கடந்த ஆண்டு இதே மாதம் இதே நாளில் சென்னை தவிர்த்த மாவட்டங்களில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது. திமுக இன்னும் ஒரு படி கூடுதலாக மதுக்கடைகள் திறக்கப்படுவதை எதிர்த்து கடந்த ஆண்டு இதே நாளில் அறப்போராட்டம் நடத்தியது.

சென்னையில் தமது வீட்டுக்கு முன்பாக,‘‘அடித்தட்டு மக்களுக்கு ஐந்தாயிரம் வழங்கு. கொரோனா காலத்தில் டாஸ்மாக் எதற்கு?’’ என்ற பதாகையை ஏந்தி போராட்டம் நடத்திய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர், இன்று முதலமைச்சராகியுள்ள நிலையில் அதே அக்கறை மற்றும் பொறுப்புணர்வுடன் தமிழ்நாட்டில் உடனடியாக முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்; தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும்; அடித்தட்டு மக்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை  இன்றே வெளியிட வேண்டும்; அவ்வாறு அவர் வெளியிடுவார் என்று நம்புகிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramdoss Request to Close Tasmac TN Tamilnadu CM DMK MK Stalin Close it 6 May 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->