கிரீமிலேயர் வரம்பு: வேளாண் வருமானம் சம்பளத்தை கணக்கில் சேர்க்கக் கூடாது! டாக்டர் இராமதாஸ் வலியுறுத்தல்..!! - Seithipunal
Seithipunal


கிரீமிலேயர் வரம்பு விவகாரத்தில் வேளாண் வருமானம் சம்பளத்தை கணக்கில் சேர்க்கக் கூடாது என மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தேசிய அளவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு  இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்தி விட்டு, அதில் வேளாண்மை வருமானம், சம்பளம் ஆகியவற்றையும் சேர்க்கும் பழைய திட்டத்தையே செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்கும் வகையிலான மத்திய அரசின் இந்த திட்டம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது; இது மாற்றப்பட வேண்டும்.

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சாதி அடிப்படையிலான சமூக நிலை தான் இட ஒதுக்கீட்டுக்கு அடிப்படை என்பதால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அனைவருக்கும் இந்த இட ஒதுக்கீட்டு வழங்கப்பட வேண்டும். ஆனால், சமூகநீதி தத்துவத்திற்கு முற்றிலும் எதிராக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கும் சொல்லப்படாத கிரீமிலேயர் தத்துவத்தை இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் திணித்தது. அதன்படி வேளாண் வருமானம், சம்பளம் ஆகியவை இல்லாமல், பிற ஆதாரங்களிலிருந்து ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் கிரீமிலேயர்கள் என்று அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இன்றைய நிலையில் ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வருவாய் ஈட்டுபவர்கள் கிரீமிலேயர்களாக கருதப்பட்டு, அதற்கும் குறைவாக வருமானம் ஈட்டுவோருக்கு மட்டுமே  ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டு 4 ஆண்டுகள் ஆகி விட்டதால், அதை உடனடியாக ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

ஆனால், கிரீமிலேயர் வரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்துவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், கீரிமிலேயரை கணக்கிடுவதில் வேளாண் வருமானத்தையும், சம்பளத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற பி.பி சர்மா குழுவின் பரிந்துரையை மத்திய அரசு இன்னும் நிராகரிக்கவிலை; அது இன்னும் மத்திய அரசின் ஆய்வில் இருக்கிறது என்று தெரிகிறது. இது உண்மையாக இருக்குமானால் அது ஓபிசி இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை கடுமையாக பாதிக்கும்.

கிரீமிலேயர் வரம்பை தீர்மானிப்பதில் வேளாண் வருமானம், சம்பளம் ஆகியவற்றையும் கணக்கில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் செய்திகள் வெளியான போது, அதை கடுமையாக எதிர்த்து 21.02.2020 அன்று நான் தான் முதன்முதலில் அறிக்கை வெளியிட்டேன். பிற கட்சிகளும் இதை எதிர்த்ததைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அதன்பின்னர், கிரீமிலேயர் வரம்பை தீர்மானிப்பதில் வருமானவரிக்கு கணக்கு காட்டப்படும் வருமானம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்; வேளாண் வருமானம் சேர்க்கப்படாது என்று மத்திய அரசு கூறியது. பிற பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும், கிரீமிலேயர் வரம்பு ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்; வேளாண் வருமானமும், சம்பளமும் சேர்க்கப்படக்கூடாது என்று பரிந்துரைத்தது. ஆனால், அதை மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை. மாறாக கிரீமிலேயர் வரம்பை தீர்மானிப்பதில் சம்பளம், வேளாண் வருமானத்தை சேர்ப்பதற்கு பரிசீலிப்பது நியாயம் ஆகாது.

கிரீமிலேயர் வரம்பு தொடர்பான அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் சர்மா குழுவின் அபத்தமான பரிந்துரைகள் தான். கிரீமிலேயர் குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட, அக்குழுவின் பரிந்துரைகள் புதிய பிரச்சினைகளை எழுப்புவதையும், ஓபிசி இட ஒதுக்கீட்டு உரிமை பறிக்கப்படுவதற்கு துணை போவதையும் அனுமதிக்க முடியாது. சர்மா குழு பரிந்துரைகளை அரசு நிராகரிக்க வேண்டும்.

மண்டல் ஆணைய பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தாலும், அது இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இப்போது தான் முதல் தலைமுறையினர் மத்திய அரசு வேலை மற்றும் உயர்கல்வியை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். பல நேரங்களில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் கிரீமிலேயரை காரணம் காட்டி, தகுதியான ஓபிசிக்கள் நிராகரிக்கப்படுகின்றனர். பின் அந்த இடங்கள் உயர்சாதியினரை கொண்டு நிரப்பப்படுகின்றன. மத்திய அரசு இப்போது செயல்படுத்தப்படவிருக்கும் திட்டத்தால் இத்தகைய அநீதிகள் அதிகரிக்கும்; ஓபிசி இட ஒதுக்கீடு மறைமுகமாக மறுக்கப்படும்.

கிரீமிலேயர் வரம்பு ரூ.16 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்; அதில் சம்பளம், வேளாண் வருமானம் ஆகியவை சேர்க்கப்படக் கூடாது என்பது தான் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நிலைப்பாடு ஆகும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன் குறித்து முடிவெடுக்கும் போது, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கருத்துகளுக்கு உரிய மதிப்பளிக்கப்பட வேண்டும். எனவே, கிரிமீலேயர் வரம்பை நிர்ணயிப்பதில் வேளாண் வருமானமும், சம்பளமும் சேர்க்கப்படாது என்றும், கிரீமிலேயர் வரம்பு 15 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்க கிரீமிலேயர் முறையை அகற்றுவது குறித்தும் ஆராய வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலன் தொடர்பாக அமைக்கப்படும் குழுக்களில் முழுக்க முழுக்க சமூகநீதியில் அக்கறை கொண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டுமே இடம்பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Statement about OBC Reservation Creamy Layer Issue 3 August 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->