நிலக்கரி தட்டுப்பாடு: தமிழ்நாட்டில் நிலைமையை சமாளிக்க அவசர கால திட்டம் தேவை..! டாக்டர் இராமதாஸ்.!! - Seithipunal
Seithipunal


அதிகரிக்கும் நிலக்கரி தட்டுப்பாட்டினை சமாளிக்கவும், தமிழ்நாட்டில் நிலைமையை சமாளிக்கவும் அவசர கால திட்டம் தேவை என மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் நிலக்கரித் தட்டுப்பாடு அபாயக் கட்டத்தை எட்டிவிட்டதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி விட்டன. மின்னுற்பத்தி நிலையங்களில் போதிய அளவு நிலக்கரி இருப்பதாகவும், கவலைப்பட எதுவுமில்லை என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வந்தாலும் கூட, மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர்களை அழைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தியிருப்பதிலிருந்தே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள முடியும். இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும்.

வெளிநாடுகளில் உற்பத்திக் குறைவு காரணமாக நிலக்கரி விலை கணிசமாக உயர்ந்திருப்பதும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலக்கரி உற்பத்தியும்,   உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கரியை மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு கொண்டு செல்லும் பணியும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதும் தான் நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணமாகும். உலகின் பெரும்பாலான நாடுகளில் இதே நிலை தான் காணப்படுகிறது. நிலைமையை சமாளித்து விட முடியும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வரும் போதிலும், கள நிலைமை வேறுவிதமாக உள்ளது. இந்தியாவில் மொத்தமுள்ள 135 அனல் மின் நிலையங்களில், சுமார் 80%, அதாவது 106 அனல் மின் நிலையங்களில் இருப்பில் உள்ள நிலக்கரி, 5 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என மத்திய மின்சார ஆணையத்தின் இணையதள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

அதுமட்டுமின்றி, மராட்டியத்தில் 13 அனல் மின் நிலையங்களும், பஞ்சாபில் 3 அனல் மின் நிலையங்களும் நிலக்கரித் தட்டுப்பாட்டால் மூடப்பட்டிருக்கின்றன. கேரளம், கர்நாடகம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலக்கரித் தட்டுப்பாட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. பல மாநில அரசுகள் அடுத்த சில நாட்களில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் நிலைமையை சமாளிக்கத் தயாராக இருக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளன. இது தான் எதார்த்தமாகும்.

தமிழ்நாட்டில் 2.40 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், ஒரு நாளைக்கு 56 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், 60,000 டன் நிலக்கரி வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர், அதனால் தமிழகத்தில் ஒரு வினாடி கூட மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சரின் விளக்கம் நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்தாலும் கூட, கள நிலைமையை கருத்தில் கொண்டு, நிலக்கரித் தட்டுப்பாடோ, அதனால் மின்சாரத் தட்டுப்பாடோ ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்கான திட்டத்தை வகுத்து தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும்.

விரைவில் இருளில் தத்தளிக்கப்போகும் இந்தியா?.. சீனாவை போல மோசமான நிலைக்கு  வாய்ப்பு.! - Seithipunal

பன்னாட்டு அளவிலும், இந்திய அளவிலும் நிலவும் சூழல் தமிழ்நாட்டை இரு வகைகளில் பாதிக்கக் கூடும். முதலாவதாக தமிழ்நாட்டில் இருப்பில் உள்ள நிலக்கரி 4 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாகும். தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரி வந்து கொண்டிருந்தாலும் தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால், நிலக்கரி வரத்து எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை. நிலக்கரி இந்தியா நிறுவனத்திடம் இன்றைய நிலையில் 4 கோடி டன் நிலக்கரி உள்ளது. இது இயல்பான சூழலில் 22 நாட்களுக்கு போதுமானது. ஆனால், இன்றைய சூழலில் இந்த நிலக்கரியை உரிய காலத்தில் மின் நிலையங்களுக்கு  கொண்டு செல்வதில் சிக்கல் உள்ளது. இந்த சிக்கல் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டும் பட்சத்தில் அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டிலும் நிலக்கரித் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அடுத்ததாக நிலக்கரிப் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகளை விட, நேரடி மின்சாரப் பற்றாக்குறையால் இன்னும் கூடுதலான பாதிப்புகள் ஏற்படும். தனியார் மின் நிறுவனங்கள் பெரும்பாலும் இறக்குமதி நிலக்கரியை நம்பியுள்ளன. நிலக்கரி இறக்குமதி குறைந்து விட்டதால் தனியார் நிறுவனங்களின் மின்சார உற்பத்தி பெரிதும் குறைந்து விட்டது. அதனால் தனியாரிடமிருந்து சராசரியாக 4000 மெகாவாட்டுக்கும் கூடுதலான மின்சாரத்தை வாங்கிக்கொண்டிருந்த தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது 1500 மெகா வாட்டுக்கும் குறைவான மின்சாரத்தையே கொள்முதல் செய்கிறது.

விரைவில் இருளில் தத்தளிக்கப்போகும் இந்தியா?.. சீனாவை போல மோசமான நிலைக்கு  வாய்ப்பு.! - Seithipunal

அதனால் ஏற்படும் பற்றாக்குறையை காற்றாலை மின்சாரம் தான் ஈடு செய்கிறது. வழக்கமாக காற்றாலை மின்னுற்பத்தி அக்டோபர் மாதத்  தொடக்கத்தில் குறைந்து விடும். ஆனால், நல்வாய்ப்பாக காற்றாலை மின்சாரம் இப்போதும் அதிகமாக கிடைக்கிறது. நேற்று கூட 6 கோடி யூனிட் காற்றாலை மின்சாரம் கிடைத்துள்ளது. இதே நிலை எப்போதும் நீடிக்காது. ஒருவேளை அடுத்த சில நாட்களில் காற்றாலை மின்னுற்பத்தி குறைந்தாலும், தனியார் நிறுவனங்கள் வழங்கும் மின்சாரம் குறைந்தாலும் தமிழகம் மின்தட்டுப்பாட்டை சந்திக்கும் ஆபத்துள்ளது.

எனவே, கள நிலைமையை உணர்ந்து கொண்டு, மின்பற்றாக்குறை ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கான அவசர காலத் திட்டத்தை தயாரித்து தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசும், தமிழ்நாடு மின் வாரியமும் உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Request to TN Govt about Coal Issue and Electricity Supply Problem 12 Oct 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->