சித்தூர் 6 வழிச்சாலை பணிகளால் விவசாய நிலங்கள் பாதிப்பு - மாற்றுப்பாதையில் அமைக்க டாக்டர் இராமதாஸ் வலியுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


சித்தூர் 6 வழிச்சாலை பணிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றுப் பாதையில் அதனை அமைக்க வேண்டும் என மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " திருவள்ளூர் மாவட்டம் தச்சூரில் தொடங்கி ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ஆறுவழிச்சாலை அமைக்கும் திட்டத்தால் வேளாண் விளைநிலங்கள் பாதிக்கப்படும்; அதனால் அத்திட்டத்தை தரிசு நிலங்கள் வழியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உழவர்கள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கை குறித்து பேச அழைப்பு விடுத்த அதிகாரிகள் அவர்களை அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

பொன்னேரி அடுத்த, தச்சூரில் இருந்து, ஆந்திரத்தின் சித்தூரை இணைக்கும் வகையில், 133 கி.மீ தொலைவுக்கு ஆறு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. சென்னையிலிருந்து பெங்களூருக்கு அமைக்கப் படும் விரைவுச் சாலை தச்சூர் வழியாக அமைக்கப்படும் நிலையில், அந்த சாலையையும், சித்தூரையும் இணைக்கும் வகையில் இந்த ஆறுவழிச் சாலையை அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.  தச்சூரில் தொடங்கி மஞ்சங்காரணை, வடமதுரை, சென்னங்காரனி, வடதில்லை, மாம்பாக்கம், போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம் வழியாக சித்தூருக்கு செல்லும் இந்த சாலையை அமைப்பதற்காக ஆந்திரத்தில் 2,186 ஏக்கர் நிலங்களும், தமிழ்நாட்டில் 889 ஏக்கர் நிலங்களும் கையகப்படுத்தப்படவுள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 44 கி.மீ தொலைபுக்கு நெடுஞ்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களில் பெரும்பாலானவை முப்போகம் விளையும் நிலங்கள் என்பதால் அவற்றை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரு ஆண்டுகளாக உழவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊத்துக் கோட்டை பகுதியில் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் உழவர்களுடன் பேச்சு நடத்துவதற்காக அவர்களை ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும்படி நில எடுப்பு மாவட்ட வருவாய் அதிகாரி அழைப்பு விடுத்திருந்தார். அதையேற்று உழவர்கள் பேச்சுக்கு வந்திருந்த நிலையில், மாவட்ட வருவாய் அதிகாரி உரிய நேரத்திற்கு பேச்சு நடத்த வராமல் விவசாயிகளை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அதைக் கண்டித்தும், ஆறுவழிச் சாலைத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த வலியுறுத்தியும் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் பொது மக்களும் விவசாயிகளும் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை எண் 716 என்று அழைக்கப்படும் தச்சூர் - சித்தூர் ஆறுவழிச் சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையையும், சென்னை - பெங்களூர் விரைவுச் சாலையையும் இணைக்க முடியும். சென்னை எண்ணூர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் ஆகியவற்றுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கும் இந்த ஆறுவழிச்சாலைத் திட்டம் வசதியாக இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. வளர்ச்சிக்கு வழி வகுக்கும் திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், அத்திட்டங்கள் வேளாண்மையை அழிப்பவையாக இருக்கக் கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும்.

தச்சூர் - சித்தூர் நெடுஞ்சாலைத் திட்டம் அதன் இப்போதைய வடிவில் செயல்படுத்தப்பட்டால், திருவள்ளூர் மாவட்டம் தும்பாக்கம், பருத்திமேனி குப்பம், பேரண்டூர், பனப்பாக்கம், தொளவேடு, காக்கவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கர் நன்செய் நிலங்கள் கையகப்படுத்தப்படும்; அதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்; பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்று கூறப்படுகிறது. விவசாயத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து விட்டு இந்த ஆறுவழிச் சாலைத் திட்டத்தை இப்போதைய வடிவத்திலேயே நிறைவேற்ற வேண்டுமா? என்பதை மத்திய, மாநில அரசுகளும், அதிகாரிகளும் மனித நேயத்துடன் சிந்திக்க வேண்டும்.

சித்தூர் ஆறுவழிச் சாலையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் விவசாய நிலங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் அமைக்க முடியும். உழவர்களின் கோரிக்கையும் அது தான். எனவே, சித்தூர் ஆறுவழிச் சாலை திட்டத்தை அதன் இப்போதைய வடிவிலேயே செயல்படுத்த வேண்டும்; அதற்காக எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் உழவர்களின் நிலங்களை கையகப்படுத்தியே தீருவோம் என்று பிடிவாதம் பிடிக்காமல், தரிசு நிலங்கள் வழியாக மாற்றுப் பாதையில் தச்சூர் & சித்தூர் ஆறுவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Request to Take Another Way Extension 6 Land Road Process Thiruvallur to Chittoor


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->