இழந்தவை போதும்: மூன்றாவது அலையில் இருந்து தப்ப கட்டுப்பாட்டை கடைபிடிப்போம்! மருத்துவர் இராமதாஸ்...!! - Seithipunal
Seithipunal


மூன்றாவது அலையில் இருந்து தப்ப கட்டுப்பாட்டை கடைபிடிப்போம் என மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பரவும் வேகம் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 68 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால், அடுத்த சில வராங்களில் கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்து விடும் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்த வேளையில், தினசரி பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா இரண்டாவது அலை, மே மாதம் 22&ஆம் தேதி, தினசரி தொற்று 36,184 ஆக உயர்ந்து உச்சத்தை அடைந்தது. அதன்பின் 68 நாட்களாக படிப்படியாக குறைந்து கடந்த ஜூலை 28&ஆம் தேதி 1756 என்ற அளவை அடைந்தது. ஆனால், 29&ஆம் தேதி 1859, 30&ஆம் தேதி 1947, 31&ஆம் தேதி 1986, ஆகஸ்ட் ஒன்றாம் நாளாக நேற்று 1990 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் சென்னையில் தொற்று எண்ணிக்கை 4 நாட்களாக அதிகரித்தாலும் கூட, கடந்த இரு நாட்களாக படிப்படையாக குறைந்து 175 என்ற எண்ணிக்கையை அடைந்திருப்பது ஓரளவு திருப்தியளிக்கிறது.

தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் குறைந்து வந்தாலும் கோவை, ஈரோடு, தஞ்சாவூர் உள்ளிட்ட 26&க்கும் கூடுதலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. இது கண்டிப்பாக கவலையளிக்கக்கூடிய தகவல் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இரண்டாவது அலைக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து நம்பிக்கையுடன் சிந்தித்துக் கொண்டிருந்த நாம், மூன்றாவது அலை வந்து விடுமோ? என்று அஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கடந்த இரு மாதங்களில் கணிசமாக குறைந்ததற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களும், காவல்துறையினர், துப்புறவுப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற முன்களப் பணியாளர்களும் தான் காரணம் ஆவர். அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட சேவை போற்றத்தக்கது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்திருப்பதற்கு பொதுமக்களாகிய நம்மில் பெரும்பான்மையினர் காட்டிய அலட்சியமும், அத்துமீறல்களும் தான் காரணம்.

தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது; வெளியில் வந்தால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்; மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் இரட்டை முகக்கவசம் அணிய வேண்டும்;  பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்தது. அவற்றை பின்பற்றி நடக்கும்படி மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தின. இது தொடர்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் குறைந்தது 100 முறையாவது அறிக்கைகள், டுவிட்டர்கள் மற்றும் முகநூல் பதிவுகளை வெளியிட்டு நான் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பேன். ஆனால், எதிர்பார்த்த பயன் இல்லை.

கொரோனா பாதிப்புகளும், உயிரிழப்புகளும் உச்சத்தில் இருந்த போது மட்டும் மனத்தளவில் அஞ்சி, வெளியில் வராமல் இருந்த பொதுமக்கள், கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியவுடன் எந்த அச்சமும் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியில் நடமாடத் தொடங்கினார்கள். முகக்கவசம் அணிய வேண்டும்  என்ற அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கையைக் கூட அவர்கள் பின்பற்றவில்லை. சென்னையில்  குடிசைப் பகுதிகளில் 41% மக்களும், குடிசைகள் அல்லாத பகுதிகளில் 47% மக்களும் தான் முகக்கவசம் அணிவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மீன் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள், கடைகள்,   துக்க நிகழ்வுகள், சுப நிகழ்வுகள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றில் சமூக இடைவெளியை சற்றும் மதிக்காமல் கூட்டம், கூட்டமாக மக்கள் கூடியதன் விளைவாகவே கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தும், கொரோனா விதிகளை மக்கள் பின்பற்றி நடக்கக் கோரியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் செய்திருக்கும் எச்சரிக்கை உண்மையானது தான். பொதுமக்கள் விழிப்புடனும், கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றியும் நடக்காவிட்டால் தமிழ்நாட்டில் மூன்றாவது அலையை தடுக்க முடியாது.

கொரோனா முதல் அலையிலும், இரண்டாவது அலையிலும் நாம் இழந்தவை ஏராளம். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களின் உயிர் நண்பர்கள், நெருங்கிய உறவுகளில் குறைந்தது ஒருவரையாவது   கொரோனாவுக்கு பலி கொடுத்திருக்கிறோம். அரசுக்கும், தனிநபர்களுக்கும் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள்  மதிப்பிட முடியாதவை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகளுக்குச் செல்லாமல் குழந்தைகள் மன அளவில் அனுபவித்து வரும் கொடுமைகள் வர்ணிக்க முடியாதவை. மூன்றாவது அலையின் பாதிப்புகள் இன்னும் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கப்படும் நிலையில், நாமே அதற்கு அழைப்பு விடுக்கக்கூடாது.

கொரோனா மூன்றாவது அலையைத் தடுப்பது அரசின் கைகளிலும், பொதுமக்களின் கைகளிலும் தான் உள்ளது. அரசு அதன் கடமையை சரியாக செய்து வரும் நிலையில், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டும் தான் பாதிப்புகளைத் தடுக்க முடியும். எனவே, பொதுமக்கள் இனியாவது தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக அனைவரும் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் ஓர் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதை நாம் தவிர்க்க வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Request to Peoples Avoid 3 rd Wave of Corona Virus 2 August 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->