வன்னிய செம்மலர் தொடர்ந்தனூர் வேலுவின் தாயார் ஜனகம் மறைவு - டாக்டர் இராமதாஸ் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகி வன்னிய செம்மலர் தொடர்ந்தனூர் வேலுவின் தாயார் ஜனகம் மறைவுக்கு மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், " 1987-ஆம் ஆண்டு வன்னியர் இட ஒதுக்கீட்டு தொடர்சாலை மறியல் போராட்டத்தின் போது காவலர்களால் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட வன்னிய செம்மலர் தொடர்ந்தனூர் வேலுவின் தாயார் ஜனகம் அம்மையார் முதுமை மற்றும் உடல்நலகுறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

மாவீரன் தொடர்ந்தனூர் புரட்சியாளன். வன்னிய செம்மலர் என்று என்னால் போற்றப்பட்டவன். அவனை ஈன்றெடுத்த தாய் ஜனகம் அம்மையாரின் வீரமும், தியாகமும் ஈடு இணையற்றவை. 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் வீரத்துடன் முழக்கமிட்டுக் கொண்டிருந்த தொடர்ந்தனூர் வேலுவை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டனர். ஆனாலும் உயிரிழக்காத அந்த 22 வயது இளைஞர் உடலில் குண்டுகளுடன் எழுந்து போராட முனைந்துள்ளான். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத காவலர்கள், வேலுவை ஒரு பர்லாங் தொலைவுக்கு இழுத்துச் சென்று, முதலில் தரையில் போட்டு தாக்கியுள்ளனர்; அத்துடன் நிற்காமல் அவனை வாகனத்துக்குள் போட்டும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அப்போதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருந்தால், தொடர்ந்தனூர் வேலு உயிர் பிழைத்திருப்பான். ஆனால், காவல்துறையினர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக அடுத்த நாள் வரை உயிருடன் இருந்த வேலுவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், காவல்துறை வாகனத்தில் வைத்தே தொடர்ந்து தாக்கினார்கள்.

அப்போதும் அசராத வேலு ‘‘ காயம்பட்டு, சாகக் கிடக்கும் எங்கிட்ட உங்க கைவரிசையை காட்டுறீங்களே; ஆம்பிளையாக இருந்தால் என் கைகளிலும் ஒரு துப்பாக்கியை கொடுங்கடா.... இல்லேன்னா ஒண்டிக்கு ஒண்டியா நின்னு பாருங்கடா. ஒரு வேலுவை நீங்கள் சாகடிக்கலாம். ஆனால், ஒரு லட்சம் வேலுவை எங்கள் டாக்டரால  உருவாக்கிப் போராடவைக்க முடியும்’’ என்று வீர முழக்கம் எழுப்பினான் வேலு. ஒரு கட்டத்தில் உயிருக்கு போராடிய வேலு தண்ணீர் கேட்டான். ஆனால், காவல்துறையினர் தண்ணீர் கூட தருவதற்கு தயாராக இல்லை; உறவினர்களையும் தண்ணீர்கொடுக்க காவல்துறை அனுமதிக்கவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வேலு உயிரிழந்தான். அவனது மரணம் என்னை மிகவும் பாதித்தது. ஆனாலும் கூட அவனைப் பெற்ற தாயார் அப்போதும் கலங்காமல் தமது மகனின் வீரத்தையும், தியாகத்தையும் எண்ணி பெருமிதப்பட்ட புறநானூற்றுத் தாயாக உயர்ந்து நின்றவர் தான் ஜனகம் அம்மையார். பா.ம.க. மீது பற்றும், என் மீது மிகுந்த மரியாதையும் கொண்டிருந்தவர் அந்தத் தாய்.

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் நான்கு வீரத்தாயார்களை நாம் இழந்திருக்கிறோம். பிப்ரவரி மாதத்தில் கோலியனூர் கோவிந்தனின் தாயார் சின்னப்பொண்ணு, ஏப்ரல் மாதத்தில் கயத்தூர் முனியனின் தாயார் அன்னலட்சுமி, மே மாதத்தில் கயத்தூர் முத்துவின் தாயார் பொற்கிலை அம்மாள் ஆகியோரை இழந்த நாம், இப்போது ஜனகம் அம்மையாரை இழந்திருக்கிறோம். அவரது மறைவுச் செய்தியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஜனகம் அம்மையாரின் வாழ்க்கை நமது தலைமுறைக்கு வீரவரலாறு ஆகும்.

புறநானூற்றுத் தாயார் ஜனகம் அம்மையாரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பாட்டாளி சொந்தங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் சின்ன நெற்குனம் கிராமத்தில் இன்று (18.06.2021) மாலை 04 மணிக்கு நடைபெறவுள்ள இறுதிச் சடங்கில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜனகம் அம்மையாருக்கு மரியாதை செலுத்துவர் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Regret to Viluppuram Thodarnthanur Velu Mother Janagam Passed Away 18 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->