உள்ளங்களை, உள்ளாட்சிகளை வெல்வோம்.. இலக்கு நோக்கி தடம் பதிப்போம்! டாக்டர் இராமதாஸ் மடல்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டு அரசியலில் நமது இலக்கு மிகவும் உயர்ந்தது. அந்த இலக்கை நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்த இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டியது மிகவும் அவசியம் என மருத்துவர் இராமதாஸ் பாட்டாளிகளுக்கு மடல் எழுதியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கத்தின் நிறுவனர், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமாகிய மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள பாட்டாளிகளுக்கான மடலில்,

" என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே...!

ஆயிரம் மாடி கட்டிடமாக இருந்தாலும் அடித்தளம் மிகவும் முக்கியம். அதை விட உயரமான ஜனநாயகத்தின் அடித்தளம் தான் உள்ளாட்சிகள் ஆகும். மக்களுக்க்கான ஆட்சியை, மக்களைக் கொண்டு, மக்களே வழங்கும் ஜனநாயகத் தத்துவம் செம்மையாக கடைபிடிக்கப்படுவது உள்ளாட்சிகளில் தான். அதனால்  தான் உள்ளாட்சிகளில் கிராம சுயராஜ்யம் மலர வேண்டும் என்று மகாத்மா காந்தியடிகள் வலியுறுத்தினார்.

இன்று மகாத்மா காந்தியடிகளின் 152-ஆவது பிறந்த நாள்.

காந்தியடிகள் விரும்பிய கிராம சுயராஜ்யம் அமைப்பதற்கான உள்ளாட்சித் தேர்தல்கள் தான் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகள் அமைக்கப்பட்டு விடும். அந்த உள்ளாட்சிகளில் எல்லாம் மகாத்மா காந்தி கனவு கண்ட கிராம சுயராஜ்யம் மலருமா? என்பது நீங்கள் வாக்களிக்கும் கட்சியைப் பொறுத்தே உள்ளது.

‘‘கிராம சுயராஜ்யம் என்றால்  ஒவ்வொரு கிராமமும் முழுமையான குடியரசாக இருக்க வேண்டும். அதன் அடிப்படைத் தேவைகளுக்கு அண்டை ஊராட்சிகளை சார்ந்திருக்காமல் தற்சார்பு பெற்று இருக்க வேண்டும். அதே நேரத்தில் எந்தெந்த தேவைகளுக்கு எல்லாம் பிறரை சார்ந்திருக்க வேண்டுமோ அதற்கெல்லாம் மற்ற கிராமங்களை சார்ந்திருக்க வேண்டும். அது தான் கிராம சுயராஜ்யம்’’ என்றார் காந்தியடிகள். உள்ளாட்சிகள் அமைக்கப்பட்டாலும், அவற்றை காந்தி கனவு கண்டதைப் போன்று மாற்றுவது நம்மால் மட்டுமே சாத்தியம். ஏனென்றால், கிராமப்புற வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையும் பாட்டாளிகளுக்கு மட்டுமே உண்டு. கடந்த இரு ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நாம் இம்முறை தனித்துப் போட்டியிடுவது என்று நான் முடிவெடுத்ததற்கு காரணமே...

பாட்டாளிகளாகிய உங்கள் நலன் கருதி தான்.....

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை முன்னேற்ற வேண்டும் என்ற பொது நலன் கருதி தான்....

கிராம சுயராஜ்யம் அமைக்கப்பட வேண்டும் என்ற மக்கள் நலன் கருதி தான்...

இந்த முடிவின் காரணமாக கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் மிக அதிக எண்ணிக்கையில் போட்டியிடுகிறோம். நாம் போட்டியிடும் இடங்களில் மிக அதிக அளவில் நாம் வெற்றி பெறப் போவது உறுதி. இந்த உண்மையை உணர்ந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தல்களில் களப்பணியாற்ற வேண்டும்.

மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றிலிருந்து உள்ளாட்சித் தேர்தல்கள் மாறுபட்டவை. இந்தத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு சில சிறப்புத் தகுதிகள் தேவை. உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதலில் தாங்கள் போட்டியிடும் உள்ளாட்சியை நேசிப்பவர்களாகவும், அதன் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை வகுத்து செயல்படுபவர்களாகவும் இருக்க வேண்டும். தாங்கள் போட்டியிடும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தொகுதியாக இருந்தாலும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தொகுதியாக இருந்தாலும், ஊராட்சியாக இருந்தாலும், ஊராட்சி வார்டாக இருந்தாலும் வெற்றி பெற்ற பிறகு அதை மாதிரி உள்ளாட்சியாக மாற்றுவதற்குத் தேவையான திறமையும், தகுதியும், பண்பும், உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். உள்ளூர் மக்களால் மதிக்கப்படுபவர்களாகவும், நேசிக்கப் படுபவர்களாகவும், உள்ளூர் பிரச்சினைகளுக்காக மக்களைத் திரட்டி போராடுபவர்களாகவும், இவற்றுக்கெல்லாம் மேலாக சிறந்த பண்பாளர்களாகவும் இருக்க வேண்டும்.

இந்தத் தகுதிகள் அனைத்தையும் மொத்தமாகக் கொண்டவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியினர் தான். ஊரக மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எந்தப் பிரச்சினை என்றாலும் உடனடியாக களத்தில் இறங்கி போராடுவது பாட்டாளிகள் தான். மக்களைக் காக்கும் பிரச்சினையாக இருந்தாலும், மானம் காக்கும் சிக்கலாக இருந்தாலும் உடனடியாக தலையிட்டு தீர்வு காண்பதும் பாட்டாளிகள் தான் என்பது மக்களுக்குத் தெரியும்.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பிரதிநிதித்துவம் பெற முடியாமல் சமுதாயப் படிநிலையில் அடிமட்டத்தில் சிக்கித் தவித்தவர்கள் பாட்டாளிகள். பள்ளிக்கல்வியைத் தட்டுத்தடுமாறிக் கடந்தாலும் கல்லூரிக்கல்வி அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. அரசு வேலைவாய்ப்புகளைப் பற்றியோ அவர்களால் நினைத்துப் பார்ப்பதற்குக் கூட முடியாது. வயல் வரப்புகளில் வாழ்க்கையைக் கழிப்பதும், குடிசைகளையே மாளிகையாகக் கருதி மனநிறைவு அடைவதுமே அவர்களுக்கு விதிக்கப்பட்டதாக இருந்தது. அதைத்தாண்டிய வாழ்க்கை அவர்களுக்கு இல்லை.

அந்த நிலையை மாற்றியமைத்தது பாட்டாளி மக்கள் கட்சி தானே. கல்லூரிகளை கனவில் மட்டுமே காண முடிந்த நிலையில் இருந்த பாட்டாளிகளை, சமூக நீதியை வென்றெடுத்துக் கொடுத்ததன் மூலம் இப்போது கல்லூரிகளை கல்வியால் ஆளும் நிலைக்கு முன்னேற்றியிருக்கிறோம். வன்னிய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.50% இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்தது வரலாற்றுச் சாதனையாகும்.  இந்த இட ஒதுக்கீடு சும்மா கிடைத்து விடவில்லை; இடைவிடாத போராட்டங்களின் மூலமே சாத்தியமானது.

நாம் வென்றெடுத்துக் கொடுத்த சமூகநீதியின் மூலம் ஓராண்டில் 6000 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டால் அவர்களில் குறைந்தது 630 பேர் வன்னியர்களாக இருப்பார்கள். ஓராண்டில் 10 ஆயிரம் அரசு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களில் 1050 பேர் வன்னியர்களாக இருப்பார்கள். ஒரு காலத்தில் வன்னியர்கள் அரசு அலுவலகங்களில் நுழையவே முடியாத சூழல் இருந்தது. ஆனால், இப்போது வன்னியர்கள் இல்லாமல் அரசு அலுவலகங்கள் இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்திய விடுதலைக்குப் பிந்தைய 75 ஆண்டுகளில் இது சாத்தியமாகவில்லை. நாம் போராடா விட்டால் இன்னும் 7,500 ஆண்டுகள் ஆனாலும் இந்த நிலை மாறியிருக்காது. எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் வன்னியர்களுக்கு தானாக முன்வந்து சமூகநீதியை வழங்கியிருக்க மாட்டார்கள். வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் எவரும் காத்துக்கொண்டு இருக்கவில்லை. அதற்கான கட்டாயத்தை ஏற்படுத்தியதால் தான்  வழங்கினார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் வலிமையும், போராட்டங்களும் தான் இதை சாத்தியமாக்கின.

வன்னியர்களுக்கு மட்டும் தான் என்றில்லை... அனைத்து சமுதாயங்களுக்கும் அனைத்து நிலைகளிலும் ஏராளமான நன்மைகளை நாம் செய்திருக்கிறோம். சமூகநிலையிலும், கல்வியிலும் பின்தங்கிய நிலையில் இருந்த இஸ்லாமியர்களுக்கும், அருந்தியர்களுக்கும் உள் ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்தது பா.ம.க. தான் என்பதை அந்த சமுதாயத்தினர் நன்றாக அறிவார்கள். உள்ளூர் அளவில் ஏற்படும் பிரச்சினையாக இருப்பினும், மாநில அளவில் ஏற்படும் சிக்கலாக இருந்தாலும் அதை பாட்டாளி மக்கள் கட்சியால் தான் தீர்க்க முடியும் என்று அனைத்து மக்களும் நம்மை நாடி வருவதே நம் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு சாட்சி.

நம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தான் நமது சொத்து ஆகும். ஆகையால் உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், அவர்களுக்காக பணியாற்றும் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் வீடு வீடாக சென்று நமது சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும்; பா.ம.க. வெற்றி பெற்றால் தான் உள்ளாட்சிகளில் நல்லாட்சி மலரும் என்பதை விளக்க வேண்டும். அதன் மூலம் மக்களின் உள்ளங்களை வெல்ல வேண்டும்; உள்ளாட்சிகளில் வெற்றியை அள்ள வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல்கள் மற்ற கட்சிகளை விட நமக்கு மிகவும் முக்கியமாகும். தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிப்பது நாம் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிப்பதற்கான வாய்ப்பு இந்தத் தேர்தல் ஆகும். தமிழ்நாட்டு அரசியலில் நமது இலக்கு மிகவும் உயர்ந்தது. அந்த இலக்கை நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்த இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டியது மிகவும் அவசியம். வெற்றி மட்டும் தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். இதை உணர்ந்து பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் கடுமையான உழைத்து வெற்றிக் கனியை பறித்து வரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Letter to Pattalis about Local Body Election 2 Oct 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->