கனடாவின் அதிரடி அறிவிப்பு.. வியந்துபோன நாம் தமிழர் சீமான் நெஞ்சார்ந்த பாராட்டு..!! - Seithipunal
Seithipunal


"தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை" சட்டமாக்கிய கனடா நாட்டின் ஒன்டாரியோ (Ontario) மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நன்றியுடன் நினைவுகூரும் என சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, " ஈழத்தில் சிங்கள பேரினவாத அரசால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இந்நூற்றாண்டின் பாரிய இனப்படுகொலைக்கு உரிய நீதியைப் பெறமுடியாமல் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உலகத்தமிழினம் போராடிவருகிறது. ஈழ மண்ணில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பிறகு ஈழத்திலும், தமிழர்களின் மற்றுமொரு தாய்நிலமான தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் தமிழினப்படுகொலைக்கு நீதி கோரியும், ஈழத்தாயக விடுதலைக்காவும் தமிழர்கள் அரசியல் உள்ளிட்ட பல தளங்களிலும் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகின்றனர்.

ஈழத்தில் தற்போதைய கையறு நிலையில், பல்வேறு தமிழ்த்தேசிய அமைப்புகள் வேறுவழியின்றி தேர்தல் அரசியல் களங்களில் பங்கேற்று மக்கள் பிரதிநிதிகளாக இலக்கை நோக்கி மெல்லப் பயணிக்கின்றன. அதைப்போலவே தமிழகத்திலும் கடந்த பத்தாண்டிற்கும் மேலாக "ஈழவிடுதலையே இனத்தின் விடுதலை" என்ற இலட்சிய தாகத்தோடு துவக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி இனப்படுகொலைக்கான நீதியைப் பெறுவதில் ஐநா மனித உரிமைகள் அவை உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தனது பங்களிப்பைச் செய்துவருவதுடன், உலகத்தமிழர்களை அரசியல் ரீதியாக ஒன்றிணைப்பதையும் முன்னெடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி அதன்மூலம் ஈழவிடுதலையைச் சாத்தியமாக்குவதற்கான தனது இடைவிடாத தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் இலட்சிய இலக்கை நோக்கி முன்னேறுவதில் வெற்றிக் கண்டும் வருகிறது.

இந்நிலையில் தமிழர்கள் பெருமளவில் புலம்பெயர்ந்த நாடுகளில் ஒன்றான கனடா, தொடக்கக்காலம் முதலே தமிழினத்திற்கு அடைக்கலம் தந்து பெருத்த ஆதரவினை வழங்கி வருவதோடு, பன்னாட்டு அரங்கிலும் இலங்கை அரசிற்கு எதிராகப் பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்து ஆதரித்துள்ளது. அதுமட்டுமின்றி அந்நாட்டின் அரசியலிலும் தமிழர்களுக்கு உரியப் பிரதிநிதித்துவம் வழங்கியதோடு, தைப்பொங்கல் வரும் ஆங்கில மாதத்தினைத் தமிழ்ப் பண்பாட்டு மாதமாக அறிவித்து அரசியல் மற்றும் பண்பாட்டு ரீதியாகத் தமிழினத்திற்குப் பல்வேறு அங்கீகாரங்களை வழங்கி சிறப்பித்துள்ளது கனடா அரசு.

அந்தவகையில் தற்போது ஈழத்தில் இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் துள்ள துடிக்கக் கொல்லப்பட்டு, தமிழினப்படுகொலை நிகழ்ந்தேறிய மே மாதத்தின் இரண்டாவது வாரத்தினை "தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரமாக" கடைப்பிடிக்கும் 104வது சட்டவரைவினை நிறைவேற்றி, நீண்டகாலமாக தமிழர்களின் நெஞ்சங்களில் ஆறாது கனன்றுகொண்டிருக்கும் காயத்திற்குச் சிறு ஆறுதலை அளித்துள்ளது கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாண சட்டமன்றம்.

கனடா வாழ் தமிழரான அருமைத் தம்பி விஜய் தணிகாசலம் அவர்களால் கொண்டுவரப்பட்ட இச்சட்டவரைவினை நிறைவேற்றியதன் மூலம் ஒன்டாரியோ மாகாணத்தில் இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் மே 18-க்கு முந்தைய ஒருவார காலம் ஈழ இனப்படுகொலை குறித்து அங்குள்ள அனைத்து கல்விக்கூடங்களிலும் கற்பிக்கப்பட்டு, விவாதங்கள் நடத்தப்படும். மேலும் தமிழ் குழந்தைகள் மட்டுமல்லாது அங்கு வாழும் பிற இனங்களின் குழந்தைகளும் அறிந்துகொள்ளும் வகையில் மறைக்கப்பட்ட ஈழ இனப்படுகொலை குறித்த செய்திகள் தொடர்ந்து கற்பிக்கப்படும். இதன்மூலம் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட மாபெரும் அநீதி அடுத்தத் தலைமுறைக்கும் கடத்தப்பட்டு, இனப்படுகொலைக்கு நீதி கோருவதற்கான முன்னெடுப்புகள் வேகம்பெறவும், ஈழத்தாயக விடுதலை நெருப்பினை அணையாமல் அடைகாக்கவும் முடியும்.

இவ்வரலாற்றுப் பெருமதிமிக்கச் சட்டவரைவினை கொண்டுவந்த விஜய் தணிகாசலம் அவர்களுக்கும், அதனை நிறைவேற்றி தந்த ஒன்டாரியோ மாகாண அரசிற்கும் உலகத் தமிழர்களின் சார்பாக உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர்களின் நீதி கோரும் நெடும் பாதையில் உங்களின் பாரிய பங்களிப்பை உலகத்தமிழினம் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரும்.

எதிர்காலத்தில் தமிழகத்தில் தமிழ்த்தேசிய அரசு அமையும்போது, இன்றைக்கு நாம் தமிழர் கட்சியால் நினைவுகூரப்படும் தமிழினப்படுகொலை மாதமும் தமிழக அரசின் சார்பாக "தமிழினப்படுகொலை அறிவூட்டல் மாதமாக" அறிவிக்கப்பட்டு, தமிழகத்தின் அனைத்துக் கல்விக்கூடங்கள், மக்கள் மன்றங்கள், ஊடகங்கள் என அனைத்து தளங்களிலும் தமிழினப்படுகொலை குறித்து ஒவ்வொரு தமிழிளம் தலைமுறையினருக்கும் கற்பிக்கப்பட்டு ஈழவிடுதலையை நோக்கி வெகு வேகமாக முன்னோக்கிப் பாய வழிவகைச் செய்யும் என்றும் உறுதி கூறுகிறேன் " என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK Seeman Thanks to Canada Ontario Govt 8 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->