தமிழக அரசின் அலட்சிய நடவடிக்கை.. சரமாரி கேள்வியெழுப்பும் நா.த.க சீமான்.! - Seithipunal
Seithipunal


நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய இணையவழி பதிவு முறையை ரத்து செய்து, நடமாடும் நெல்கொள்முதல் நிலையங்களை அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, " அறுவடை செய்த நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்க இணைய வழியில் முன்பதிவு செய்யவேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே போதிய அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்றி விளைந்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில், எவ்வித முன்னறிவிப்புமில்லாத இந்த திடீர் உத்தரவு தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேட்டையே வெளிப்படுத்துகிறது.

அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், அறுவடை செய்த நெல் மூட்டைகள் நீரில் மூழ்கி வீணாகிவிடுமோ என்று வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆண்டுக் கணக்கு முடிப்பினை காரணம் காட்டி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், நிலையங்களுக்கு வெளியே அறுவடை செய்த நெல் மூட்டைகளோடு விவசாயிகள் காத்துக் கிடக்கும் அவல நிலையும் நிலவுகிறது.

எனவே மூடப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க விரும்பும் விவசாயிகள் இணையம் வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும், வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும் என்ற முறையை அவசரகதியில் நடைமுறைக்கு கொண்டுவரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முடிவு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

படிக்காத பாமர விவசாயிகள் உடனடியாக இணையம் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும் என்பது எளிதானதல்ல என்பதோடு, பதிவு குறித்த விவரங்களும், நெல் கொள்முதல் நிலையத்திற்கு வரவேண்டிய தேதியும் குறுஞ்செய்தி மூலம் கைபேசிக்கு வருமென்பதும் கிராமத்து ஏழை விவசாயிகளுக்கு இன்றளவும் எட்டாக்கனி என்பதைத் தமிழக அரசு கவனிக்கத் தவறியது ஏன்? அரசு கொடுக்கும் தேதியில் மழை பெய்தால் விவசாயி எப்படிக் நெல்மூட்டைகளை கொண்டுவர இயலும்? அத்தேதியைத் தவறவிட்டால் மீண்டும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்?

அதுவரை நெல் மூட்டைகளை எங்கே பாதுகாத்து வைத்திருப்பார்கள்? அதற்குச் செய்துள்ள முன்னேற்பாடுகள் என்ன ? இந்த நடைமுறை சிக்கல்களை அரசு அறியாதது ஏன்? விவசாயிகள் தொடர்புடைய இத்தகைய அதிமுக்கிய அறிவிப்பில் அவர்களை கலந்தாலோசித்து கருத்துக்களைக் கேட்கத் தமிழக அரசு தவறியது ஏன் ? நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதி என்னவானது என்ற கேள்விகளுக்கு அரசிடம் பதிலுள்ளதா ?

எனவே இணைய வழி முன்பதிவு முறையில் உள்ள நடைமுறை சிக்கலைக் கருத்தில்கொண்டு தற்காலிகமாக அந்த முறையைத் தமிழக அரசு திரும்பப்பெறுவதோடு, மூடப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும். மேலும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்தபடி, தேவைப்படும் இடங்களில் கூடுதலாக நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, ஈரப்பதத்தைக் கணக்கில் கொள்ளாமல் போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK Seeman Request to TN Govt about Paddy Purchase Issue 3 Sep 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->