நடிகர் விஜய் எப்படி அரசியலுக்கு வர வேண்டும்?... சீமான் யோசனை..! - Seithipunal
Seithipunal


வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு மற்றும் பேராசிரியர் தொ.பரமசிவன் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பல கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்தார்.

இது குறித்து அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், " பெண் என்றால் பூவினும் மெல்லியவள்; வெட்கி, நாணி, தலைகுனிந்து நடப்பதுதான் பெண்மையின் பேரழகு என்று பேசிக்கொண்டிருந்த காலத்தில், கணவனை இழந்த கைம்பெண் வீட்டுக்குள்ளே முடங்கி அடங்கி ஒடுங்கி கிடப்பதுதான் விதி என்னும் சதியின் முகத்தில் காரி உமிழ்ந்த மானமறத்தி! பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி! - என்ற பெரும்பாவலன் பாரதியின் பாட்டுக்கு அன்றே பொருளாய் வாழ்ந்த மாதரசி! 

அடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும் வேலும் ஏந்தி போர்க்களம் புகுந்த புரட்சிக்காரி! இழந்துவிட்ட நிலத்தை மீண்டும் அடித்து மீட்ட எங்கள் குல மாதரின் குலவிளக்கு! தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு 224ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று 25-12-2020 காலை 10 மணியளவில் தலைமை அலுவலகம், இராவணன் குடிலில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு மற்றும் மறைந்த முதுபெரும் தமிழறிஞர், தொல் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர், எழுத்தாளர், தமிழ்த்துறை பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வில் சீமான் அவர்கள் பங்கேற்று இருவரது திருவுருவப்படத்திற்கு முன் நினைவுச் சுடரேற்றி மலர்வணக்கம் புகழ் வணக்கம் செலுத்தினார் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " நடிப்பது மட்டுமே நாடாளுவதற்கான தகுதி என்பதை நாங்கள் ஏற்கவில்லை. அது எங்கள் கோட்பாடு. மக்களுக்கானப் போராட்டக்களத்தில் நிற்பவர்களின் தியாகங்களை திரைவெளிச்சம் கொண்டு மறைப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்கமுடியாது. எங்கள் முன்னவர்கள் காமராசர், கக்கன், ஜீவானந்தம், சமகாலத்தில் ஐயா நல்லக்கண்ணு இவர்களை தாண்டிய அரசியல் தலைவர்கள் உண்டா? தமிழர்களுக்கு முன்மாதிரியை ஏன் வெளியில் தேட வேண்டும்? தலைவர்களே இல்லாததுபோல், எம்ஜியார் போல், ரஜினி போல், கமல் போல் வரவேண்டும் என்று ஏன் கூற வேண்டும்?

நடிகர் விஜய் என் தம்பி, அவன் மீது பேரன்பு எனக்குண்டு. குறைந்தபட்சம் தம்பி சூர்யா போல் அவரும் சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அவர் அரசியலுக்கே வரக்கூடாது என்று கூறவில்லை. தன்னுடைய புகழ் வெளிச்சத்தை கொண்டு மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, அவர்களுக்காக உடன் நின்று களத்தில் நின்று போராடி அரசியலுக்கு வாருங்கள், வெறும் திரை கவர்ச்சியை மட்டுமே வைத்து அரசியலுக்கு வராதீர்கள் என்றுதான் கூறுகிறோம். அது தம்பி விஜய்க்கும் பொருந்தும் என்றுதான் கூறுகிறோம். ஆனால் ரஜினியை நாங்கள் எதிர்ப்பது, மன்னர் காலத்தில் மராட்டியர்கள் எங்களை படையெடுத்து வந்து ஆண்டனர், மக்களாட்சி காலத்தில் ரஜினி படமெடுத்து வந்து ஆளவேண்டும் என்று நினைக்கிறார். மக்கள் எங்களை அங்கீகரித்துள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலில் கணிசமான வாக்கு பெற்றுள்ளோம். அங்கீகாரத்தை எதிர்பார்த்து மட்டுமே நாங்கள் அரசியல் செய்யவில்லை. மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல் என்பது எங்கள் கடமை. இந்த அரசியலை செய்வது ஆன்ம அளிக்கிறது. எம்ஜியார் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று வைகோ கூறுகிறாரென்றால் பிறகு ஏன் அவர், அதிமுகவில் சேராமல் திமுகவிலேயே இருந்தார்?

தமிழ்நாட்டில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்பதை எதிர்க்கிறேன். ஸ்டாலின், எடப்பாடிக்கு இல்லாத தகுதி, அன்புமணி, திருமாவளவனுக்கு இல்லாத தகுதி, ரஜினிக்கு மட்டும் இருக்கிறதா? அவர் வந்துதான் அனைத்தையும் சரி செய்ய வேண்டுமா? எந்த மாநிலத்தையும் யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்று சொல்லும் இந்த இந்திய கட்சிகள், முதலில் தங்கள் கட்சிக்கு தமிழக தலைவர்களாக வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களை முடிந்தால் நியமிக்கட்டும். கட்சிக்கே மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றால் ஆட்சிக்கு எப்படி ஏற்க முடியும். தமிழக சட்டமன்றத்தில் 48 பேர் பிறமொழியாளர்கள் உள்ளனர். எங்களைப்போல் பேரன்பும், பெருந்தன்மையும் ஆகப்பெரும் சனநாயகமும் கொண்ட இனத்தை உலக வரலாற்றிலேயே நீங்கள் காட்டமுடியாது.

தமிழரின் தேசிய விழாவான பொங்கலைக்கூடச் சொந்த செலவில் கொண்டாட முடியாத அளவுக்கு ஏழ்மை வறுமையில் மக்களை வைத்திருப்பது என்பது மாபெரும் கொடுமை. உயிர்த்தேவை உணவுப்பொருளான அரிசியை ஒரு ரூபாய் கூட கொடுத்து வாங்க முடியாத ஏழ்மை வறுமையில் எங்களை வைத்தது யார்? நாம் தமிழர் ஆட்சியில் கல்வி, மருத்துவம், தூய குடிநீர் மட்டுமே இலவசம். வேறு எதற்கும் இலவசம் தேவைப்படாத அளவுக்கு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவோம். வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK Seeman Pressmeet 25 December 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->