மத்திய, மாநில அரசுகளின் பச்சைத்துரோகம் - சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு.!! - Seithipunal
Seithipunal


மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்சிஜன் உற்பத்தியெனும் பெயரில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது மண்ணின் மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, " நாடு முழுக்க நிலவும் அசாதாரணமான சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்வதாய்க் கூறி, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முனையும் வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகளும், எதிர்க்கட்சிகளும் துணைபோயிருப்பது வேதனையளிக்கிறது. பராமரிப்பிற்காக ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்த நிலையில், அது நிறைவேறாத சூழலில் ஆக்சிஜன் தயாரிப்பு எனும் போலியான காரணத்தை முன்வைத்து தனது காரியத்தைச் சாதித்துக் கொள்ள முனைப்போடு களமிறங்கிய வேதாந்தா குழுமம், அதற்குத் தனது பணபலத்தையும், அதிகார நெருக்கத்தையும் பயன்படுத்தி ஆலையைத் திறக்க முன்னெடுப்புகளைத் தொடங்கியிருப்பதும், அதற்கு நாட்டையாளும் ஆட்சியாளர்கள் ஒட்டுமொத்தமாக விலைபோயிருப்பதும் வன்மையான கண்டனத்திற்குரியது.

சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், கோவா, ராஜஸ்தான், ஒரிசா, கர்நாடகா என வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஆலைகள் நாடெங்கிலும் இருக்கிறபோதும் அங்கெல்லாம் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஆலையைத் தர முன்வராத வேதாந்தா குழுமம், தூத்துக்குடி நிலத்தில் மட்டும் விடாபிடியாய் நின்று உச்ச நீதிமன்றம்வரை சென்று ஆலையைத் திறக்க முயற்சிப்பதன் மூலம் அவர்களது உள்நோக்கம் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஆக்சிஜன் உற்பத்திக்கும், உருவாக்கத்திற்கும் எத்தனையோ வழிகளும், வாய்ப்புகளும் இருக்கும்போதும் ஸ்டெர்லைட் ஆலையைவிட்டால் வேறு வாய்ப்பே இல்லை என்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, அதுகுறித்தான கருத்துருவாக்கத்தைச் செய்து ஆலையைத் திறந்துவிடத் துடிக்கும் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் மண்ணின் மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும்.

ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதும், அதனைப் பகிர்ந்தளிப்பதும் நடைமுறையில் மிகக்கடினமானது என்பதையும், அதன் மூலம் பெருமளவு சுவாசக்காற்று உற்பத்திசெய்து பயனடைய சாத்தியமே இல்லை என்பதையும் தமிழக அரசே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிறகு, ஆலையைத் திறக்க முன்வந்திருப்பது கேலிக்கூத்தாகும். உள்ளூர் மக்களைக் கொண்ட ஒரு குழு ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தியைக் கண்காணிக்கும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், உள்ளூர் மக்களைக் கொண்டு கண்காணிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது வேதாந்தா குழுமம். இதன்மூலம், அவர்களது நோக்கம் ஆக்சிஜன் உற்பத்தியில்லை; மீண்டும் தாமிரத் தயாரிப்புக்கான முன்னோட்டம் பார்ப்பதே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இத்தோடு, உற்பத்தியாகும் ஆக்சிஜன் மத்தியத் தொகுப்புக்குத்தான் அனுப்பப்படும் எனவும், அதில் தமிழகத்திற்கு எவ்வித முன்னுரிமையும் இல்லை என்று மத்திய அரசு நேற்றையதினம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது தமிழர்களின் உணர்வைச் சீண்டி, நிலத்தின் நலனைச் சுரண்டி கொழுக்கும் தமிழர் விரோதப்போக்காகும். இவ்வாறு தமிழர்களுக்கு எவ்விதப் பயன்பாட்டையும் தராத ஸ்டெர்லைட் ஆலையை, தமிழர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி எதற்காகத் திறக்க வேண்டும்? அதனை நிறைவேற்றச் சொல்லி அதிகார வர்க்கத்தினருக்கு அழுத்தம் கொடுப்பது யார்? அதற்காகக் கொடுக்கப்பட்ட விலையென்ன? பேசப்பட்ட பேரமென்ன? என்பதெல்லாம் ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம்.

நச்சு ஆலை என்று உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட, 750 கோடி சுங்க வரி ஏய்ப்புக்காக ஆலையின் துணைத் தலைவரே கைதுசெய்யப்பட்ட பின்னணியையும், பின்புலத்தையும் கொண்ட வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையைக் கொண்டு மக்களுக்குத் தேவையான சுவாசக்காற்றை உற்பத்தி செய்வதாகக் கூறுவது மிகப்பெரும் மோசடித்தனம். 14 உயிர்களின் மூச்சுக்காற்றை நிறுத்திய ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் சுவாசக்காற்றை உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளிப்பதாகக் கூறுவது அபத்தம்; வெட்கக்கேடு. மக்களுக்கு விரோதமான ஒரு நச்சு ஆலையைக் கொண்டு ஆக்சிஜனை உற்பத்தி செய்வதாகக் கூறுவதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் தங்களது கையாலாகத்தனத்தையும், நிர்வாகத்திறமையின்மையையும் வெளிப்படையாக ஒத்துக்கொள்வது அவமானகரத்தின் உச்சமாகும்.

ஆகவே, ஆக்சிஜன் உற்பத்திக்கு மாற்று வழிகளையும், வாய்ப்புகளையும் நாடாமல், எத்தனையோ தொழில்நுட்பங்கள் இருந்தும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைத் தொடங்காமல், பேரிடர் கால நெருக்கடிச் சூழலை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக மாற்ற முனைவதும், தமிழர்களுக்கும், தமிழர் நிலத்துக்கும் தீங்கையும், சூழலியல் கேட்டையும் தந்து, தமிழர்களின் உயிர்களைக் குடித்த ஸ்டெர்லைட் ஆலையை, ஆக்சிஜன் உற்பத்தி எனும் பெயரில் செயல்பாட்டுக்குக் கொண்டுவர துணைநிற்பதும் மன்னிக்கவே முடியாத வரலாற்றுப்பெருந்துரோகமாகும். இதனைச் செய்திட்ட அதிமுக, திமுக எனும் இரு கட்சிகளுக்கும் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எச்சரிக்கிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK Seeman Condemn to TN Govt and State Govt about Thoothukudi Sterlite oxygen Production 28 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->