எம்மண்ணின் வளக்கொள்ளையை தடுத்து நிறுத்து., இல்லையேல்... தமிழக அரசுக்கு சீமான் உச்சகட்ட எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, " கன்னியாகுமரி‌ மாவட்டத்தில் களியல் தொடங்கி ஆரல்வாய்மொழிவரை அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலையினுடைய ஒரு பகுதியின் அடிவாரத்தில் முறையான அனுமதியின்றியும், அனுமதியுடனும் கல்குவாரிகளிலிருந்து சட்டத்திற்குட்பட்டும், உட்படாமலும் பாறைகள் உடைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட அளவைவிடப் பலமடங்கு அதிகப் பாரம் ஏற்றப்பட்டுக் கற்கள், பாறைப்பொடி, சல்லி, மணல், பாறைகளை உடைத்து உருவாக்கிய செயற்கை மணல் ஆகியவற்றை கேரள மாநிலத்திற்கு இரவும் பகலுமாகக் கடத்துகிற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.

மேற்குத்தொடர்ச்சி மலையானது அரபிக்கடலிலிருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து சரியான‌ நேரத்தில் பருவ மழையைத் தருகின்ற காரணத்தால்தான் இப்பகுதி மிகவும் செழிப்புடன் இருக்கிறது. ஆனால், இம்மலையின் அடிவாரப்பகுதிகளில் செயல்பட்டுவரும் கல்குவாரிகளால் பருவமழை பொய்த்தல், நிலத்தடி நீர்மட்டம் குறைதல், பல்லுயிர் வளம் பாதித்தல், வேளாண்மை பாதித்தல், மூச்சுத்தடை மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்ப்பாதிப்புக்கு உட்படல் போன்ற பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் தொடர்ந்து ஆளாகி வரும் நிலையிலும், இம்மலையையே சிறிது சிறிதாகப் பாறைகளாகப் பெயர்த்தெடுத்து, பெருமுதலாளிகளின் இலாப வேட்டைக்காக முழுமலையையே அழித்துவிடும் அளவிற்குச் சென்றுள்ள கொடியச்சூழலிலும், அதனைக் கண்டுகொள்ளாது அலட்சியப் போக்கோடு வளக்கொள்ளையை அனுமதித்து வேடிக்கைப் பார்க்கும் ஆளும் வர்க்கத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

குறிப்பாக, ஆரல்வாய்மொழி, சுங்கான்கடை, சித்திரங்கோடு, சுருளகோடு, அயக்கோடு, குலசேகரம், அருமனை போன்ற பகுதிகளிலிருந்து தினமும் நாள் ஒன்றிற்கு ஏறத்தாழ 600 க்கும் மேற்பட்ட அதிகனரக வாகனங்களில் களியக்காவிளை மற்றும் மாவட்டத்தின் பிற சோதனைச்சாவடிகளின் வழியாகக் கனிமவளப்பொருட்கள் கேரளாவிற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த இரண்டு ‌மாதத்தில் மட்டும் அனுமதியின்றிக் கனிம வளங்களை கேரளாவுக்குக் கொண்டு செல்ல முயன்றதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து, 40 இலட்ச ரூபாய்வரை அபராதம் விதித்துள்ளார்கள். இருந்தும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வருவாய் கிடைப்பதால் அரசியல் தலையீடு, அதிகாரிகளின்‌ பரிந்துரை, இலாபவெறி வேட்டை ஆகியவை காரணமாகக் கனிம வளக்கொள்ளை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக 9 அலகுவரை (மொத்தம் 60 டன்கள் ) கனரக வாகனங்களில் கல் பாரம் கொண்டு செல்வதால் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் சேதமாகி விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

உலகில் பல்லுயிர்வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையும் ஒன்று. சுமார் 500 வகைப் பூக்கும் தாவரங்கள், 139 வகைப் பாலூட்டிகள், 508 வகைப் பறவைகள்,176 வகை இருவாழ்விகள்,332 இன பட்டாம்பூச்சி, 290 வகை மீன்கள்,203 வகை ஊர்வனவைகள் என அனைத்திற்கும் உறைவிடமாக மேற்குத்தொடர்ச்சி ‌மலையே உள்ளது. இம்மலைத்தொடரை பாரம்பரிய சின்னமாகக் கடந்த 2012ஆம் ஆண்டு யுனெஸ்கோ அங்கீகரித்து அறிவித்தது. குமரி மாவட்டத்தின் நீராதாரமே இம்மலைகள்தான். இம்மலைகள்தான் குமரி மாவட்டத்தின் பல அணைகள், ஆறுகளின்‌ தாயாக விளங்குகிறது. இதற்குமுன் குமரி மாவட்டத்தில் 10 முதல் 30 அடிக்குள் கிடைத்துக் கொண்டிருந்த நிலத்தடி ‌நீர்‌ பல இடங்களில் 700 அடிக்குக் கீழ்தான் கிடைக்கின்றது. மண்ணின் வளங்கள் மக்களுக்கே எனும் நியதிக்குட்பட்டு தரை மட்டத்தின் கீழ் காணப்படும் பாறைகள், குழிப்பாறைகளை விதிகளின்படி எடுத்து மாவட்ட மக்கள் அவர்களது தேவைக்குப் பயன்படுத்துவதில் பெரும் சிக்கலிலில்லை. ஆனால், தரைமட்டத்திற்கு மேலுள்ள மலைகளை உடைத்துக் கடத்துவதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்பட்டு, எழில்கொஞ்சும் நிலம் பாலைநிலமாகும் பேரபாயம் ஏற்பட்டிருக்கிறது. மலைகளின்‌ நாடாகத் திகழும் கேரளாவில் எந்தக் கனிமவளக்கொள்ளையும் நடைபெறுவதில்லை எனும்போது அவர்கள் இயற்கைக்குக் கொடுக்கும் முதன்மைத்துவத்திலிருந்து கற்றுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். தமிழ்நாட்டிலிருந்தே மிக அதிகமான கனிமவளங்கள் கேரளாவிற்குச் செல்கின்றன. ஏறத்தாழ 15 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த மேற்குத்தொடர்ச்சி மலையின் பாறைகளை உடைத்தெடுத்து இயற்கை அன்னைக்குத் தீங்கு விளைவிப்பது என்பது மானுடக்குலத்தின் அழிவின் தொடக்கமாகவே கருத இயலும்.

மலையை அழித்துவிட்டால் அதனை எந்தத் தொழில்நுட்பத்தின் உதவியோடும் உருவாக்கிட முடியாது; எந்த அதிகாரத்தைக் கொண்டும் நிறுவிட முடியாது. குமரி‌ மாவட்டம் சோமாலியா நாட்டைப் போலப் பாலைவனக்காடாகி மக்கள் வறுமையில் சிக்குண்டு, வாழ வழியின்றித் தவிக்க நேரிடும் எனும் பெரும் ஆபத்து நிலை உருவாகும். கடல் இருந்தும் மலையில்லையென்றால் மழைப்பொழிவினைப் பெற இயலாது. கடந்த சூலை 16 அன்று விதிமுறைகளை முற்றாக மீறி கனிமவளங்களை கேரளாவுக்குக் கொண்டு சென்ற கனரக வாகனங்களை மக்கள் இராணுவமான நாம் தமிழர் கட்சியினர், சிறைப்பிடித்துத் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வைத்தனர்.

மேலும், தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள், கருத்துப்பரப்புரைகள் எனப் பல்வேறு போராட்ட வடிவங்களிலும், கோரிக்கைகளை முன்வைத்தும் நாம் தமிழர் கட்சியினர் மண்ணின் வளங்களைக் காப்பாற்றத் தங்கள் உயிரைக் கொடுத்து போராடி வரும் நிலையில் உடனடியாக, இதில் அரசு தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்பதே மண்ணின் மக்களின் ஒட்டுமொத்த உளவிருப்பமாக இருக்கிறது. ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சீரியக் கவனமெடுத்து மேற்குத்தொடர்ச்சி மலையில் நடந்தேறும் வளக்கொள்ளையைத் தடுத்து நிறுத்த முன் வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் செய்வோமென எச்சரிக்கிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK Seeman Condemn about Kanyakumari to Kerala Sand Smuggling Issue 23 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->