தனது தலைமுடியை விற்று குழந்தைகளின் பசியை போக்கியுள்ள தாய்! - Seithipunal
Seithipunal


சேலத்தில் கந்துவட்டி கொடுமையால் கணவர் தற்கொலை செய்து கொண்டதால் வருமானத்திற்கு வழியில்லாமல் வறுமையின் பிடியில் சிக்கிய பெண், தனது 3 குழந்தைகளின் பசியை போக்க தன் தலைமுடியை விற்பனை செய்து குழந்தைகளுக்கு உணவு வழங்கியுள்ளார்.

சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம்(37). இவரது மனைவி பிரேமா(31). இவர்களுக்கு மூன்று மகன்கள். கடந்த 2015 ஆம் ஆண்டு வீமனூர் பகுதியில் செங்கல் சூளையில் பணியாற்றியபோது, உரிமையாளரிடம் செல்வம் கடன் வாங்கியுள்ளார். இதேபோல் செல்வம் பல இடங்களிலும் 4.50 லட்சம் மேல் கடன் வாங்கியுள்ளார், கடன் வாங்கியவர்களிடம் அதை திருப்பித்தர முடியாத நிலையில் மனமுடைந்து செல்வம் 7 மாதங்களுக்கு முன்பு  தீக்குளித்து  தற்கொலை செய்து கொண்டார்.  

கணவரின் தற்கொலைக்கு பின்னர் பிரேமா வீமனூரில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இதனிடையே,  பிரேமாவின் கணவனுக்கு கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு பிரேமாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பிரேமா கடந்த வாரம் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது சூளையில் இருந்தவர்கள் வேலை பார்ப்போர் அவரை காப்பற்றினர். பசியால்பிரேமாவின் 3 குழந்தைகளும் துடித்துள்ளன. இதனால் பிரேமா மொட்டை அடித்து தனது தலைமுடியை 150க்கு விற்று தனது மூன்று குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார். இதையறிந்த அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பிரேமாவை சந்தித்து உணவுக்கு ஏற்பாடு செய்தனர். 

பின் அந்த சமூக ஆர்வலர் கடன் கொடுத்தவர்களிடம் பேசி, பணத்தை கொடுக்கும் நடவடிக்கை மேற்கொண்டர். இதுகுறித்து சமூக ஆர்வலர் பாலா அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இந்த செய்தியை சமூகவலைத்தளங்களின் பார்த்தோர் உதவி செய்ததன் மூலமாக 1 லட்சத்திற்கு மேல் பணம் கிடைத்துள்ளது. மீதமுள்ள பணத்தை பாலா மற்றும் அவரது நண்பர்கள் ஏற்பாடு செய்து, பிரேமாவுக்கு கடன் கொடுத்தவர்களிடம் வழங்கியுள்ளனர்.

இந்த செய்தி மிகவும் கவலை கொள்ள வைக்கிறது. திருமணங்களில் ஒரு இலைக்கு 1500, 2000 என்று செலவு செய்து பல ஆயிரம் மதிப்பிலான உணவு வீணாக குப்பையில் வீசப்பட்டு வரும் இதே சமூகத்தில், ஒரு வேளை உணவுக்கு போராடி வரும் மனிதர்களும் வாழ்ந்து வருகின்றனர் என்பது அனைவரும் உணர வேண்டியது அவசியம்.

உயிர் வாழ்வதற்கு உணவு இன்றியமையாத ஒன்று என்பதால் தான் அடிப்படை தேவைகளில் உணவு முதன்மையானதாக கருதப்படுகிறது. ஆனால், பலருக்கும் ஆடம்பரத்தை பிரதிபலிக்கும் ஒரு காட்சிப் பொருளாக உணவு மாறி வருவதால் தான் தினமும் பல கோடி மதிப்பிலான உண்ணத்தகுந்த உணவுப் பொருட்கள் யாருக்கும் பயனில்லாமல் வீணடிக்கப்படுகிறது.

மூன்று வேளை உணவு உண்பதை பழக்கமாக கொண்டுள்ள நாம், அதனை போதுமான அளவு மட்டும் தயார் செய்து, வீணடிக்காமலும், உணவின்றி வாடுவோர்க்கு பகிர்ந்தளிப்பதும் பழக்கமாக கொண்டால் நம் சமூகத்தில் பசியால் ஏற்படும் இதுபோன்ற அவலங்கள் இனியும் நேராமல் காக்க இயலும்.

தனி மனித மாற்றமே சமூகத்தின் மாற்றம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother sale his hair for childrens food


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->