தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 8 ஏப்ரல் 2021 இன்று முதற்கட்டமாக மீண்டும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, திருமண நிகழ்வுகளில்‌ 100 நபர்களுக்கு மிகாமலும்‌, இறுதி ஊர்வலங்களில்‌ 50 நபர்களுக்கு மிகாமலும்‌ கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்‌.

விளையாட்டு அரங்கங்கள்‌ மற்றும்‌ விளையாட்டு மைதானங்களில்‌, பார்வையாளர்கள்‌ அனுமதியின்றி விளையாட்டு போட்டிகள்‌ நடைபெற அனுமதிக்கப்படும்‌.

நீச்சல்‌ குளங்கள்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, பொருட்காட்சி அரங்கங்கள்‌ வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌.

31.8.2020 அன்று அரசால்‌ வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, அனைத்து வழிபாட்டுத்‌ தலங்களிலும்‌ பொது மக்கள்‌ வழிபாடு இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படும்‌. இருப்பினும்‌, அனைத்து வழிபாட்டுத்‌ தலங்களிலும்‌ திருவிழாக்கள்‌ மற்றும்‌ மதம்‌ சார்ந்த கூட்டங்கள்‌ நடத்த அனுமதி இல்லை.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி சின்னத்திரை மற்றும்‌ திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌. இருப்பினும்‌, படப்பிடிப்பில்‌ கலந்து கொள்ளும்‌ சின்னத்திரை / திரைபடக்‌ கலைஞர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ அனைவரும்‌ கொரோனா பரிசோதனை செய்து கொண்டு/ தடுப்பூசி போட்டு கொண்டு படப்பிடிப்பில்‌ கலந்து கொள்வதை சின்னத்திரை மற்றும்‌ திரைப்படப்‌ படப்பிடிப்பு நிருவாகங்கள்‌ உறுதி செய்ய வேண்டும்‌.

வாடகை மற்றும்‌ டாக்ஸி வாகனங்களில்‌ ஒட்டுநர்‌ தவிர்த்து மூன்று பயணிகள்‌ மட்டும்‌ பயணிக்க ஏற்கனவே 1.7.2020 முதல்‌ அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்‌, இந்தக்‌ கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்‌.

ஆட்டோக்களில்‌ ஒட்டுநர்‌ தவிர்த்து இரண்டு பயணிகள்‌ மட்டும்‌ பயணிக்க ஏற்கனவே 1.7.2020 முதல்‌ அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்‌, இந்தக்‌ கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்‌.

வெளி மாநிலங்கள்‌ மற்றும்‌ வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும்‌ நபர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில்‌ நோய்த்‌ தொற்றைக்‌ குறைக்கும்‌ பொருட்டு, மாநகராட்சியின்‌ ஒவ்வொரு மண்டலத்திற்கும்‌, கள அளவிலான குழுக்கள்‌ அமைத்து கண்காணிக்கப்படும்‌. இதே போன்று அனைத்து மாவட்டங்களிலும்‌, கண்காணிப்புக்‌ குழுக்கள்‌ அமைக்கப்படும்‌.

நோய்க்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌ வசிக்கும்‌ மக்கள்‌, இந்தப்‌ பகுதிகளிலிருந்து வெளியில்‌ வராத வகையில்‌, காவல்‌ துறை, உள்ளாட்சி அமைப்புகள்‌ மற்றும்‌ சுகாதாரத்‌ துறை ஊழியர்களைக்‌ கொண்டு 24 மணி நேரமும்‌ தொடர்ந்து கண்காணிக்கப்படும்‌. இந்தப்‌ பகுதிகளில்‌ கிருமிநாசினிகள்‌ தெளித்தல்‌ உள்ளிட்ட நோய்த்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதோடு, நோய்க்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌ வசிக்கும்‌ மக்களுக்கு அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ கிடைப்பதற்கு உதவி புரிய தன்னார்வலர்களும்‌ நியமிக்கப்படுவர்‌.

தமிழ்நாட்டில்‌ கொரோனா பரவல்‌ குறைந்து வரும்‌ சூழல்‌ நீடிக்கவும்‌, அதனை முழுமையாக தடுக்கவும்‌, பொது மக்கள்‌ அனைவரும்‌ தொடர்ந்து பாடுபட வேண்டும்‌. பொதுமக்கள்‌ வெளியே செல்லும்போதும்‌, பொது இடங்களிலும்‌ கண்டிப்பாக முகக்கவசம்‌ அணிய வேண்டும்‌. பொதுமக்கள்‌ வீட்டிலும்‌, பணிபுரியும்‌ இடங்களிலும்‌ அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும்‌, சமூக இடைவெளியை தவறாமல்‌ கடைபிடித்தும்‌, அவசிய தேவை இல்லாமல்‌ வெளியில்‌ செல்வதைத்‌ தவிர்த்தும்‌, முழு ஒத்துழைப்பு நல்கினால்‌ தான்‌, இந்த நோய்த்‌ தொற்றுப்‌ பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்‌. 

பல்வேறு தளர்வுகளுக்கு தனித்தனியே வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும்‌ தவறாது கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள்‌ உறுதி செய்ய வேண்டும்‌. காய்ச்சல்‌ முகாம்கள்‌  தொடர்ந்து நடத்திடவும்‌, வீட்டிற்கு வீடு சென்று காய்ச்சல்‌, சளி, இருமல்‌ உள்ளவர்களை தினந்தோறும்‌ கண்காணிக்கவும்‌, நோய்த்‌ தொற்று ஏற்பட்டவர்களது தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பரிசோதனைகள்‌ மேற்கொள்ளவும்‌ காவல்‌, சுகாதாரம்‌, வருவாய்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்‌ மற்றும்‌ பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்‌ இதனை தீவிரமாக கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்‌.

அரசு மருத்துவ நிலையங்கள்‌ மற்றும்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ மருத்துவமனைகளில்‌ கொரோனா தடுப்பூசி மையங்கள்‌ தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கொரோனா பரவலைத்‌ தடுக்கும்‌ விதமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்‌, அரசு மருத்துவ நிலையங்கள்‌ அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ மருத்துவமனைகளில்‌ இரண்டு வாரத்திற்குள்ளாக தடுப்பூசி போட்டுக்‌ கொள்ள வேண்டும்‌ என்றும்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

நோய்த்‌ தொற்று அறிகுறி இருந்தால்‌ தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்‌. இதனை கடைபிடித்து, கோவிட்‌ நோய்த்‌ தொற்று பரவாமல்‌ இருக்க அரசு எடுக்கும்‌ நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்‌ அனைவரும்‌ முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்‌ என்று பொதுமக்களை அரசு கேட்டுக்கொள்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lock down restrictions again tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->