234 - ம் எங்களுக்கே.. தளபதி பயணத்தில்., கே.எம். காதர் மொகிதீன் பொங்கல் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழகத்தில் தொன்றுதொட்டு நிலவி வரும் சொலவடை. இந்தப் பழமொழிக்குள் புதைந்திருக்கும் உண்மையை வெளிக் கொணர்ந்த பெருமை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கே உண்டு.

தமிழகத்தில் வாழ்ந்த - இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற சான்றோர் அனைவருக்கும் இந்தப் பழமொழி தெரியும். இதில் உறைந்திருக்கும் உண்மையும் புரியும். அதைச் சொல்லவும் செய்தார்கள். ஆனால், கலைஞர் அவர்கள் மட்டுமே, அந்த உண்மைக்கு உயிர் கொடுத்து, தமிழ்கூரும் நல்லுலகில் உலவ விட்டு உவகை கொண்டார்கள். உலகின் பெரு சமுதாயத்தவர், தங்களின் நாகரீகத்தின் அடையாளமாக, தங்களுக்கென காலத்தைக் கணக்கிடும் ‘காலண்டர்’ முறையை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிறிஸ்துவ உலகம், ஏசுபெருமான் பிறந்த காலத்தை முன்னிறுத்தி, தனது காலக் கணக்கீட்டைச் செய்து கொண்டது. இஸ்லாமிய உலகம், முகமது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா நகருக்குக் குடிபெயர்ந்த வரலாற்றை முன்னிலைப்படுத்தி, ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கை உருவாக்கிக் கொண்டுள்ளது. தன்னேரில்லாத தமிழ்கூரும் நல்லுலகில், உலக மொழிகளுக்கெல்லாம் மூத்ததும் முதலுமாக இருக்கும் தமிழ்மொழி தவழும் சமுதாய மக்கள் மத்தியில், தமிழ்சார்ந்த - தமிழர் சார்ந்த - தமிழ் நாகரீகம் சார்ந்த காலக்கணக்கீட்டு முறை இல்லாமல் இருக்கிறதே என்று மனதிற்குள் வேதனைப்பட்டவர் கலைஞர் அவர்கள்தாம்.

அந்த வேதனைக்கு ஒரு முடிவாக எழுந்ததுதான் தை முதல்நாள், தமிழ்ப்புத்தாண்டின் பிறப்பு என்பது. தமிழகத்தில் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு பேச்சு வழக்கில் இருந்து வந்த காலக்கணக்கீட்டு முறையின் உண்மையை, கலைஞர் அவர்கள் வெளிக் கொணர்ந்தார்; அரசாணை மூலம் அகிலத்தாருக்கு அறிவித்தார். தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பதோடு, தை பிறக்கும் போது தமிழ்ப் புத்தாண்டும் பிறக்குகிறது என்பதை உலகறியச் செய்தார்.

தமிழகத்தில் காலக் கணக்கீட்டுக்கு ஆரம்பம் கண்டு பிடித்தாகி விட்டது. அந்தக் காலக் கணக்கீட்டை எப்போதிருந்து தொடங்குவது என்பது பற்றிய முடிவை எடுப்பதற்காகவே தமிழாய்ந்த தக்க தகுதியும் ஞானமும் பெற்ற பேரறிஞர்களின் அவையைக் கலைஞர் கூட்டினார். அவைகளின் முன் நிற்கும் ஆன்றவிந்த சான்றோர்களின் ஆலோசனையின்படி, தமிழகத்தின் காலக் கணக்கீட்டை வான் புகழ் கொண்ட வள்ளுவர் வாழ்ந்த நாளில் இருந்து தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டு அதுவே கலைஞர் அரசின் ஆணையாகவும் பிறப்பெடுத்தது. வரும் தை முதல் நாளில் திருவள்ளுவரின் 2052 வது ஆண்டும் பிறக்கிறது.

புத்தாண்டு தமிழகத்துக்குப் புதுப் பொலிவையும், செழிப்பையும் கொண்டு வரட்டும்! எதிர்பார்த்து வரவேற்கும் தமிழ்ச் சமுதாயம் கலைஞர் ஆட்சியைத் தமிழகத்தில் மீண்டும் தழைக்கச் செய்ய முடிவெடுக்கட்டும். புத்தாண்டு பிறப்பில் மகிழ்வு கொள்வோம். வள்ளுவர் வகுத்தளித்த வாழ்வு நெறியைத் தமிழகத்தில் வேரூன்றச் செய்யும் இலக்கை நோக்கிப் பயணிப்போம். தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமை ஏற்று, தமிழகத்தின் மீட்புக்கான பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். தமிழாய்ந்த பெரும் சான்றோர் எல்லாரும் தளபதி முன் செல்ல, பின் செல்கிறார்கள். தளபதி செல்லும் வழி, தமிழகம் வெல்லும் வழி என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆகவே, எல்லோரும் வாருங்கள்! தளபதி முன்னெடுத்துச் செல்லும் அரசியல் பயணத்தில் சேருங்கள்! தமிழகத்தில் 234 - ம் எங்களுக்கே என்று உரத்த குரலில் கூறுங்கள் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kader Mohideen Pongal Wish to All 14 Jan 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->