தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு.. கொந்தளிக்கும் கி.வீரமணி.! - Seithipunal
Seithipunal


மழை பெய்வதற்காக யாகம் நடத்த உத்தரவிட்ட அறநிலையத் துறைக்கு கண்டனம் தெரிவித்து கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மழை பெய்வதற்காக யாகம் நடத்தச் சொல்லி இந்து அறநிலையத் துறை உத்தரவு பிறப்பிப்பதா?

அரசியல் சட்டத்தினை அரசே உடைக்க முயற்சிப்பதா?

இந்து அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவு, பருவமழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கோயில்களில் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை ஆணையர், கோயில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்து அறநிலையத் துறை தணிக்கைத் துறையே தவிர, புரோகிதத் துறை அல்ல!

கடும் வறட்சியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மழை வேண்டி யாகம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளதாம்.

இதுகுறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து மண்டல இணை ஆணையர், செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ‘‘வரும் 2019-2020 ஆம் ஆண்டு விகாரி வருடத்தில் நல்ல பருவமழை பெய்து நாடு செழிக்க இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முக்கிய கோயில்களில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளை தத்தம் பிரிவில் உள்ள கோயில்களில், அந்தந்த கோயில்களின் பழக்க வழக்கத்திற்கு உட்பட்டு நடத்திட அனைத்து செயல் அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பர்ஜன்ய சாந்தி வருண ஜெபம், வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல்,
அருள்மிகு நந்திப் பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்தல், ஓதுவார்களை கொண்டு சுந்தர மூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமுறை ஓதுதல், திருஞான சம்பந்தர் இயற்றிய 12ஆம் திருமுறையில் தேவார மழை பதிகத்தை கேரா குறிஞ்சி என்ற பண்ணில் பாடி வேண்டுதல்.

நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை வாத்தி யங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபாடு செய்தல். சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கு சீதள கும்பம் எனப்படும் தாரா பாத்திர நீர் விட்டு செய்தல், சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தல், மகா விஷ்ணுவிற்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தல், மழை வேண்டி பதிகங்கள் ஓதுதல், மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்தல், நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருப்புன்கூர் சிவன் கோயிலில் உள்ள மகா நந்திக்கு மகாபிஷேகம் செய்தல், வருண சூக்த வேதமந்திர பாராயணம் செய்தல், வருண காயத்ரி மந்திரம் பாராயணம் செய்தல்.

மேற்கண்டவாறு அந்தந்த கோயில்களின் பழக்க வழக்கத்திற்கு உட்பட்டு சிறப்பாக நடத்திட, இந்த நிகழ்வு தொடர்பான கற்றறிந்தவர்களை தேர்வு செய்து மழை வேண்டி யாகம் செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கோயில் அலுவலர்கள் கேட்டு கொள்ளப் படுகின்றனர்.

மேலும், தங்கள் மண்டலத்தில் எந்தெந்த கோயில்களில் எந்த தேதியில் மழை வேண்டி யாகம் செய்யப்பட உள்ளது என்பதற்கான விவரத்தை பட்டியலிட்டு தொகுத்து உடன் மே 2 ஆம் தேதிக்குள் அற நிலையத் துறை தலைமை அலுவலகத்தில் தெரிவிக்கவும், அவ்வாறு யாகம் நடத்தப்பட்ட விவரத்தையும் யாகம் முடிந்தவுடன் தனியே தெரிவிக்கவும் அனைத்து மண்டல இணை ஆணையர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.’’

இவ்வாறு இந்து அறநிலையத் துறை ஆணையர் ஆணை பிறப்பித்துள்ளார்.

இதைவிட வெட்கக்கேடு ஓர் அரசுக்கு இருக்கவே முடியாது.
மழை பெய்வது எப்படி? மழை பொய்ப்பது எதனால்? என்பதெல்லாம் மூன்றாம் வகுப்பு மாணவியைக் கேட்டாலே படபடவென சொல்லுவார்.

ஆனால் அய்.ஏ.எஸ். அதிகாரிகளுக்குத் தெரியவில்லை என்றால் அவர்கள் படித்த படிப்பைவிட அவர்களின் மூளையில் குடி கொண்டுள்ள மூடத்தனத்தின் குப்பைதான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

யாகத்தாலும், பூஜைகளாலும் காரியம் ஆகும் என்றால், ஆட்சியே தேவையில்லையே! அலுவலகங்களையெல்லாம் கோவில்களாக்கி, அலுவலர்களைப் பூசாரிகளாக்கிவிடலாமே!

யாகம், பூஜை புனஷ்காரங்களை நடத்துவது அறநிலையத் துறையின் வேலையல்ல!

அறநிலையத்துறை என்பது வரவு, செலவுகளைப் பார்க்க வேண்டிய துறையே; நிர்வாகம் சம்பந்தப்பட்டது; யாகம், பூஜை புனஷ்காரங்களை நடத்துவது அதன் வேலையல்ல!

இந்து அறநிலையத் துறை ஆணையரின் ஆணை மதச் சார்பற்ற தன்மை கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் - ஒவ்வொரு குடிமகனின் கடமை என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு 51-A(h) எதிரானது இது. சட்டத்தை மீறும் இவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். மதச்சார்பின்மையை சின்னாபின்னமாக்கியுள்ளனர்.

குவியட்டும்! குவியட்டும்!!

அண்ணா ஆட்சி பொறுப்பு ஏற்ற நிலையில், அரசு அலுவலகங்களில், வளாகங்களில் எந்த மதவழிப்பாட்டுச் சின்னங்களும் இருக்கக்கூடாது என்று சுற்றறிக்கை - ஆணை பிறப்பித்ததுகூட அண்ணா பெயரில் உள்ள ஆட்சிக்குத் தெரியாதது வெட்கக்கேடு! அச்சட்டம் எப்படி? ஏன் வந்தது? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா?
இந்து அறநிலையத் துறை ஆணையருக்குக் கண்டனக் கணைகள் குவியட்டும்! குவியட்டும்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

k veeramani condemned for tn govt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->