இது மக்களுக்கு செய்யும் துரோகம்: மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவேன் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாயக்கழிவு ஆலை அமைப்பதற்கான பணிகளை, பொதுமக்களின்  எதிர்ப்புகளையும் மீறி முழு வீச்சில் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் உணர்வுகளை மதிக்காமல், காவிரி பாசனப்பகுதியை கழிவுநீர் தொட்டியாக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை அடுத்த பெரியப்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில்  304 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா என்ற பெயரில் சாயக்கழிவு ஆலை அமைக்கப்படவிருப்பதன் நோக்கம்... அப்பகுதியில் தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதோ, பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதோ, அப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதோ அல்ல. மாறாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை கொண்டு வந்து, தண்ணீரைக் கலந்து கடலில் விடுவது தான். இந்த  திட்டம் காவிரி பாசன மாவட்டங்களை, குறிப்பாக கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக மாற்றிவிடும் என்பதை உணர்ந்துள்ள கடலூர் மாவட்ட மக்கள் இத்திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாயக்கழிவு ஆலை மற்றும் அது சார்ந்த பிற பணிகளை மக்களை ஏமாற்றி செயல்படுத்தும் முயற்சியில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பான தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சைமா) ஈடுபட்டு வருகிறது. அதன்படி கடலூரை அடுத்த செம்மங்குப்பத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க கடந்த வெள்ளிக்கிழமை முயற்சி நடந்த போது பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளும், உள்ளூர் மக்களும் திரண்டு சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர். அதையடுத்து அப்பகுதியில் சாயக்கழிவு ஆலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதே செம்மங்குப்பம் பகுதியில், கடந்த மே மாத இறுதியில் ஆழ்துளை கிணற்றிலிருந்து சாயக்கழிவு ஆலைக்கு தண்ணீரை எடுத்துச் செல்வதற்கான இராட்சத குழாய்களை புதைக்கும் பணிகள் தொடங்கப் பட்ட போது, அதை பாட்டாளி மக்கள் கட்சியினர் தான் தடுத்து நிறுத்தினர். அதைத் தொடர்ந்து சாயக்கழிவு ஆலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மே 31&ஆம் தேதி அறிக்கையும்  வெளியிட்டிருந்தேன். அதன்பயனாக, பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராக சாயக்கழிவு ஆலைப் பணிகள் நடைபெறாது என்று அதிகாரிகள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், அதை மீறி பணிகள் மேற்கொள்ளப்படுவதும், அதற்கு அரசு துணை போவதும் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

பெரியபட்டு பகுதியில் ஜவுளி பூங்கா என்ற பெயரில் பெயரளவில் 10 ஜவுளி தொழிற்சாலைகளை  அமைத்து விட்டு, அந்த பூங்காவுக்காக அமைக்கப்படும் ஒரு கோடி லிட்டர் சாயக்கழிவுகளை தூய்மைப் படுத்தும் திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலையில், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறை கழிவுகளை சாலைவழியாக கொண்டுவந்து சுத்திகரிப்பது தான் திட்டமாகும். கோவை பகுதியில் பல கோடி லிட்டர் சாயக்கழிவுகள் வெளியாகும் நிலையில், அவை முழுவதையும் இங்கு சுத்திகரிக்க முடியாது. அதனால், முடிந்தவரை சுத்திகரித்து, மீதமுள்ள கழிவுகளை தண்ணீருடன் கலந்து கடலில் செலுத்துவது தான் திட்டமாகும். இதற்கு வசதியாக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நிலப்பரப்பில் 3.5 கிலோமீட்டர் தொலைவுக்கும், கடலுக்குள் 1.5 கிலோமீட்டர் தொலைவுக்கும் குழாய்கள் அமைக்கப்படவுள்ளன. கோவை மண்டல சாயப்பட்டறை முதலாளிகள் வளமாக வாழ்வதற்காக கடலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வயிற்றில் அடிப்பதை பாமக ஒருபோதும் அனுமதிக்காது.

பெரியப்பட்டு சாயக்கழிவு ஆலை அமைக்கப்பட்டால், காவிரி டெல்டாவின் கடைசி எல்லையாக முப்போகம் விளையும் பூமியாக திகழும் பெரியப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பாலைவனமாக மாறக்கூடும். இதனால் பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளும், வனப்பகுதிகளும் அழியும் ஆபத்து உள்ளது.

கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள இராசயன ஆலைகளால் அப்பகுதி நச்சு பூமியாக மாறி வரும் நிலையில், அவற்றுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது தான் கடலூர் மாவட்ட மக்களின் விருப்பம் ஆகும். அதை நிறைவேற்றுவதற்கு பதிலாக, கூடுதல் கேடு விளைவிக்கும் சாயக்கழிவு ஆலையை அமைக்க அனுமதிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு சாயக்கழிவு ஆலைக்கு அளிக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கடலூர் மாவட்ட மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என எச்சரிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drramdoss warning to tn government


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->