1985-ஆம் ஆண்டு பிரச்சனை..அப்பாவி மக்களை ஆசை காட்டி ஏமாற்ற சதி.! மீண்டும் களத்தில் குதித்த பாமக.! - Seithipunal
Seithipunal


நெய்வேலியில் மூன்றாவது சுரங்கத்திற்காக அப்பகுதி மக்களின் வீடுகள் மற்றும் நிலங்களை மிரட்டிப் பறிக்கும் என்.எல்.சி நிறுவனத்தின் முயற்சி பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தால் முறியடிக்கப் பட்ட நிலையில், அந்த நிலங்களை பறிக்கும் முயற்சியை என்.எல்.சி மீண்டும் தொடங்கியுள்ளது. அப்பாவி ஏழை மக்களுக்கு ஆசை காட்டி ஏமாற்றி நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் "என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் நெய்வேலியில் இரு அனல் மின்நிலையங்கள் & அவற்றின் விரிவாக்கத் திட்டங்கள் மூலம் 2990 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றுக்கு நிலக்கரி வழங்குவதற்காக இரு நிலக்கரி சுரங்கங்கள், முதல் சுரங்கத்தின் விரிவாக்கம் என மொத்தம் மூன்று சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை போதாதென ‘மூன்றாவது சுரங்கம்’ என்ற பெயரில் புதிய நிலக்கரி சுரங்கத்தை அமைப்பதற்காக 26 கிராமங்களில் உள்ள 4850 ஹெக்டேர், அதாவது 12,125 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த கடந்த 2018-ஆம் ஆண்டில் என்.எல்.சி பணிகளைத் தொடங்கியது. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் 26.12.2018 அன்று நெய்வேலியில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்தி வைத்திருந்த என்.எல்.சி நிறுவனம், இப்போது மீண்டும் அந்த பணியை தொடங்கியிருக்கிறது.

மூன்றாவது சுரங்கத்திற்காக 26 கிராமங்களில் உள்ள 12,125 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அந்த கிராமங்களில் வாழும் 8751 குடும்பங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் தங்களின் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து நடுத்தெருவுக்கு வருவார்கள் என்பது தான் இந்த திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி எதிர்க்க காரணம் ஆகும். ஆனால், இப்போது நிலம் கையகப்படுத்துதல் திட்டத்தின் மீது இனிப்பு தடவி, மக்களின் ஆசையைத் தூண்டி அவர்களை ஏமாற்ற என்.எல்.சி நிறுவனம் சதி செய்கிறது.

மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ள என்.எல்.சி நிறுவனம், அதற்காக தாக்கல் செய்துள்ள சமூகத் தாக்க ஆய்வறிக்கையில் ஆசை வார்த்தைகளை தூவியிருக்கிறது. பாதிக்கப்படும் 8751 குடும்பங்களுக்கும் அவர்களுக்குரிய சட்டப்படியான இழப்பீட்டுடன் சேர்த்து, மறுவாழ்வு&மறுகுடியமர்த்தல் உதவியாக தலா ரூ.11.13 லட்சம் வழங்கப்படும் என்று என்.எல்.சி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் மக்களிடம் மனமாற்றம் ஏற்படும் என என்.எல்.சி கருதுகிறது. இது மிகப்பெரிய ஏமாற்று வேலை என பா.ம.க குற்றஞ்சாட்டுகிறது.

நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நிலங்கள் மற்றும் வீடுகள் முழுமையாக கையகப்படுத்தப்படும் போது, பாதிக்கப்பட்ட மக்கள் விருத்தாசலத்தை அடுத்த எருமனூர், சின்ன பண்டாரம் குப்பம், காணாது கண்டான், கோபுராபுரம் ஆகிய அடிப்படை வசதிகளற்ற கிராமங்களில் குடியமர்த்தப்படுவார்களாம். அவர்களிடமிருந்த வீட்டையும், வாழ்வாதாரங்களையும் பறித்துக் கொண்டு, எத்தனை கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் அவர்களின் இழப்புக்கு ஈடாகாது. இதுவரை கண்ணியம், சுயமரியாதையுடன் கம்பீரமாக விவசாயம் செய்து வாழ்ந்தவர்கள், இனி புதிதாக குடியமர்த்தப்படும் கிராமங்களில் அகதிகளாக வாழ்வர். அவர்களால் வருவாய் ஈட்ட முடியாது. நிலத்தைக் கொடுத்ததற்காக கிடைத்த பணத்தை சில ஆண்டுகளில் செலவழித்து விட்டு, பின்னர் வறுமையில் தான் வாடுவார்கள். மொத்தத்தில் அவர்களின் வாழ்க்கை கண்களை விற்று சித்திரம் வாங்கியோரின் நிலையாகவே இருக்கும்.

கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் முப்போகம் விளையக்கூடிய வளமான நிலங்கள் ஆகும். மலைக்காய்கறிகள் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும் இந்த நிலங்களில் விளையும். இப்போது கூட அந்நிலங்களில் நெல், கரும்பு, வாழை ஆகிய பயிர்கள் மட்டுமின்றி முட்டைக்கோஸ் போன்ற பயிர்கள் இப்போது கூட விளைகின்றன. ஓர் ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டித் தரக் கூடிய வளமான நிலங்களை நிலக்கரி சுரங்கத்திற்காகப் பறிக்கத் துடிப்பது உழவுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

அதுமட்டுமின்றி, நிலம் வழங்குவோருக்கு அளிக்கும் வாக்குறுதிகளை என்.எல்.சி எந்தக்காலத்திலும் நிறைவேற்றியதில்லை. 1950-ஆவது ஆண்டுகளில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைப்பதற்காக மந்தாரக்குப்பம், நெய்வேலி, கெங்கைகொண்டான் உள்ளிட்ட 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரமாக திகழ்ந்த நிலங்களையும் கொடுத்து விட்டு ஆதரவற்றவர்களாக அங்கிருந்து வெளியேறினர். அதன்பின்னர் 62 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவ்வாறு தியாகம் செய்த மக்களின் குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடும், வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் என்.எல்.சி நிறுவனம் இப்போது அளிக்கும் வாக்குறுதியை நம்புவது என்பது விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழும் செயலுக்கு சமமானதாகும். இதற்கு 26 கிராம மக்கள் உடன்பட மாட்டார்கள்.

இதற்கெல்லாம் மேலாக விவசாயத்தை அழித்து, மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எந்தத் தேவையும் இல்லை. ஏனெனில், இரண்டாவது சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10,000 ஏக்கர் நிலங்கள் இன்னும் பயன்படுத்தபடவில்லை. 1985-ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இன்னும் சுரங்கம் அமைக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது, இப்போது இன்னும் கூடுதலாக நிலங்களை கைப்பற்றி விவசாயத்தை அழிக்க என்.எல்.சி துடிப்பதை அனுமதிக்க முடியாது.

எனவே, யாருக்கும் தேவையில்லாத, வேளாண்மைக்கும், இயற்கைக்கும் எதிரான மூன்றாவது நிலக்கரி சுரங்கத் திட்டத்தை என்.எல்.சி கைவிட வேண்டும். இந்த விஷயத்தில் மக்களின் உணர்வுகளை என்.எல்.சி நிறுவனத்திற்கு எடுத்துக் கூறி, இந்தத் திட்டத்தை கைவிடும்படி தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

draamadoss warning nlc for agri land capture


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->