வளர்ச்சிக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை: வரிச்சலுகையின்மை, அதிக கடன் கூடாது - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


வளர்ச்சிக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை எனவும், வரிச்சலுகையின்மை, அதிக கடன் கூடாது எனவும் இன்றைய பட்ஜெட் தாக்கல் தொடர்பாக மருத்துவர் இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவையும் உழவர்களின் அச்சத்தைப் போக்கும்  வகையில் அறிவிக்கப்பட்டுள்ள சில நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கவையாகும். அதே நேரத்தில் வருமான வரி குறைக்கப்படாததும், நிதிப்பற்றாக்குறை மற்றும் கடன் சுமை அதிகரித்திருப்பதும் கவலை அளிக்கிறது.

2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அவற்றை சமாளிக்கவும், அவற்றிலிருந்து மீண்டு வரவும் மத்திய அரசு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்புகளை ஓரளவாவது நிறைவேற்றும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களும், அறிவிப்புகளும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருக்கின்றன.

கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் தான் வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்பதால் பல்வேறு கட்டமைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தத் திட்டங்களுக்காக ரூ.5.54 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 11,000 கிமீ தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 3,500 கி.மீ. நீள சாலைகள் ரூ.1.03 லட்சம் கோடி செலவில் தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ளன. மும்பை - கன்னியாகுமரி தொழில்வழிச் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரூ.63,246 கோடி நிதி, தொடர்வண்டித்துறை ரூ. 1 லட்சம் கோடிக்கும் கூடுதலான நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டில் பல்நோக்கு கடல் பூங்கா அமைக்கப்படும். கடல் பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டில்  ஒரு மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட 7 துறைமுகங்கள் ரூ. 2000 கோடியில் மேம்படுத்தப்படும் ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

நாடு முழுவதும் 7 இடங்களில் ஒருங்கிணைந்த ஆயத்த ஆடை தொழில் நகரங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். இவற்றில் ஒரு ஆயத்த ஆடை தொழில்நகரம் தமிழகத்தில் அமைக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால், இது போதுமானதல்ல. இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதியில் 35% தமிழகத்திலிருந்து தான் செய்யப்படுகிறது என்பதால் தமிழகத்தில் குறைந்தது 2 ஆயத்த ஆடை தொழில் நகரங்களை அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். சுகாதாரத்துறைக்கான மூலதன செலவுகள் 137 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டிருப்பதும் பாராட்டப்பட வேண்டியதாகும். ஆனாலும், சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட ரூ.3000 கோடி குறைவாக ரூ.64,180 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது போதுமானதல்ல. ஊரக வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடும் போதுமானதல்ல.

புதிய வேளாண் சட்டங்களால் வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரத்து செய்யப் படும் என்ற அச்சம் நிலவி வந்த சூழலில் அதைப் போக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் உழவர்கள் மனதில் நிம்மதியை ஏற்படுத்தும். உழவர்களுக்கான கடன் வரம்பு ரூ.16.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது ஆகும். அதேநேரத்தில் உழவர்களின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்துவதற்காக இலக்கு 2022-ஆம் ஆண்டில் நிறைவடையும் நிலையில், அந்த இலக்கை எட்டுவதற்காக எந்த சிறப்புத் திட்டமும் அறிவிக்கப்படாதது குறையாகும்.

தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தேர்தல் தான் காரணம் என்றாலும் கூட தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சியே. அதேநேரத்தில், தமிழகத்தின் காவிரி பாசன மாவட்டங்களின் பாசன நீர்த்தேவைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

வருமான வரி விகிதங்களில் கடந்த ஆண்டு சில மாற்றங்கள் செய்யப்பட்டாலும் கூட அதனால் பெரிய பயன்கள் கிடைக்கவில்லை. அந்தக் குறை நடப்பாண்டில் சரி செய்யப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், வருமானவரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாததும் ஏமாற்றம் தருகிறது. 75 வயதுக்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்களுக்கு வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு  இருந்தாலும் கூட அதனால் பெரிய அளவில் பயன் ஏற்படாது. செல்பேசி உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீதான உற்பத்தி வரி உயர்த்தப்பட்டிருப்பது ஏழை - நடுத்தர மக்களை பாதிக்கும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசின் வருவாய் குறைந்து விட்டதும், செலவுகள் அதிகரித்து விட்டதும் அனைவரும் அறிந்தது உண்மை தான். ஆனாலும், இவற்றின் காரணமாக நடப்பாண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 9.50% ஆக அதிகரித்திருப்பதும், 2021-22 ஆம் ஆண்டில் இது 6.80% ஆக இருக்கும் என்பதும் அதிர்ச்சியளிக்கின்றன. நிதிப்பற்றாக்குறை 4.5% என்ற அளவை 2025-26 ஆம் ஆண்டில் தான் எட்டும் என்பதும், 3% என்ற அளவை எட்டா இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதும் மிகவும் கவலை அளிக்கின்றன. இதனால் கடன் சுமையும், பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வும் ஏற்படாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை இலக்காக கொண்டிருப்பது மகிழ்ச்சியளித்தாலும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் கட்டுப்படுத்தப்படாதது மக்களுக்கு மிகவும் கவலையளிக்கிறது " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Welcome and Request about 2021 2022 Budget Central Govt 1 Feb 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->