தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் பரிதாபமாக பலியான உயிர்.. கண்ணீரில் குடும்பம்.. தி.மலையில் ஏற்பட்ட சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வரும் சூழலில், மக்கள் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவிற்கான சிறிய அறிகுறிகள் இருந்தாலும் சோதனை செய்துகொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், சிறு அலட்சியமும் உயிர் சேதத்தை ஏற்படுத்தும் என்பது நாம் பல இடங்களில் கண்கூடாக தற்போது பார்த்து வருகிறோம். இதனால் காய்ச்சல் அறிகுறி இருந்தாலே கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்க கூறி மருத்துவர் இராமதாசு கோரிக்கை வைத்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளின் புறநோயாளிகள் பிரிவில் காட்டப்படும் அலட்சியம் காரணமாக தேவையில்லாமல் உயிரிழப்புகள் ஏற்படுவது கவலையளிக்கிறது. சிறு அலட்சியம் உயிரைப் பறிக்கும் என்பதை உணர்ந்து கவனமாக செயல்படாவிட்டால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த இயலாது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த வினாயகம் என்ற 42 வயது இளைஞர் கவுதம் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி, கடுமையான உழைப்பு காரணமாக வாழ்க்கையில் முன்னேறி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், உடனடியாக  உள்ளூர் தனியார் கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெறச் சென்ற போது, அவருக்கு சாதாரண காய்ச்சல் மட்டுமே ஏற்பட்டிருப்பதாகக் கூறி, அதற்கான மாத்திரைகளை பரிந்துரைத்துள்ளனர். அந்த மாத்திரைகளை சாப்பிட்ட போதிலும், காய்ச்சல் குணமடையாத நிலையில், அருகிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா சோதனை செய்யாமல் டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி அதற்கான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன.

டைபாய்டு காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்ட பிறகும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இன்னொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வினாயகம் சென்றுள்ளார். அங்கும் அதே நடைமுறைகள் செய்யப்பட்டு, காய்ச்சலுக்கான மருந்துகளே பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அப்போதும் காய்ச்சல் குறையாத நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை தனிமைப்படுத்தி கொரோனா ஆய்வு செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக தீவிர மருத்துவம் அளிக்கப்பட்ட போதிலும், அவருக்கு நோய் முற்றியிருந்ததால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை; சில நாட்களுக்கு முன் உயிரிழந்து விட்டார்.

வினாயகம் முதன்முதலில் உள்ளூர் தனியார் மருத்துவமனைக்கு சென்ற போதோ அல்லது அடுத்து தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற போதோ அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், புறநோயாளி என்பதால் அவருக்கு கொரோனா ஆய்வு செய்வதற்கு மாற்றாக, மருத்துவமனையில் சாதாரண டைபாய்டு காய்ச்சலுக்கான சோதனை செய்து, அதற்கான மருந்துகளை மட்டும் கொடுத்ததால் தான்,  அவருக்கு ஏற்பட்டிருந்த கொரோனா நோய் முற்றி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளின் அலட்சியத்தால், இப்போது ஒரு குடும்பம் தலைவனை இழந்து தவிக்கிறது.

காய்ச்சல், சளி, இருமல், தும்மல், சுவை மற்றும் மணத்தை உணரும் தன்மையின்மை உள்ளிட்டவற்றில்  ஏதேனும் ஓரிரு அறிகுறிகள் தென்பட்டால் கூட, உடனடியாக கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுவதற்கு முன் மருத்துவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். காய்ச்சல் என்பது கொரோனா வைரசுக்கான அறிகுறி என்பதால், காய்ச்சலுடன் ஒருவர் எந்த மருத்துவமனைக்கு வந்தாலும், அவருக்கு கொரோனா ஆய்வு செய்வது தான் முதல் பணியாக இருக்க வேண்டும். ஆனால், அதை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்ததால், எந்தத் தவறும் செய்யாத அப்பாவி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

தனியார் மருத்துவமனைகளின் புறநோயாளிகள் பிரிவில் காட்டப்படும் அலட்சியத்தால் இளைஞர் உயிரிழந்தது இது மட்டுமே தனித்த நிகழ்வாக இருக்க வாய்ப்பில்லை. சரியான நேரத்தில் கொரோனா ஆய்வு செய்யாததால் வினாயகத்தைப் போல பலர் உயிரிழந்திருக்கக்கூடும். இது தடுக்கப்பட வேண்டும்.

பொதுவாகவே சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படும் பொதுமக்கள் சோதனைக்காக அருகிலுள்ள ஆய்வகங்களுக்கு செல்லும் போது, அவர்களுக்கு கொரோனா ஆய்வு செய்யப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட ஆய்வகங்களில் அந்த வசதி இல்லை என்றால் அருகிலுள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆனால், அவை எதையும் செய்யாத தனியார் ஆய்வகங்கள், ரத்த ஆய்வு மட்டும் செய்து விட்டு டைபாய்டு காய்ச்சல் இருப்பதாகக் கூறி அனுப்பி விடுகின்றனர். இது தொடர்பாக ஏராளமான புகார்கள் பொதுமக்களிடமிருந்து எனக்கு வருகின்றன.

தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சேர வருபவர்களுக்கு முதல் பணியாக கொரோனா ஆய்வு செய்யப்பட்டு, அதன்பிறகு தான் மருத்துவனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அதே நடைமுறை புறநோயாளிகளுக்கும் கடைபிடிக்கப்பட வேண்டும். ஒருவேளை சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் கொரோனா ஆய்வு செய்யும் வசதி இல்லை என்றால், அருகிலுள்ள கொரோனா ஆய்வு மையத்திற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள புறநோயாளிகள் பிரிவுகளுக்கும் தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில் உரிய அறிவுரைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் " என்று கூறியுள்ளார்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss says implement of corona test


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->