கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகள் - மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும் என மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்தியாவின் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 3.32 லட்சமாகவும், தமிழ்நாட்டின் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 12,652 ஆகவும் அதிகரித்திருப்பது அச்சத்தையும், கவலையையும் அளிக்கிறது. ஒரு மருத்துவராக நிலைமையின் தீவிரத்தை நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது. நிலைமையை கட்டுப்படுத்த வேண்டுமானால் அதிரடியாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் ஒரே நாளில் 3.32 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர் என்பது எளிதில் கடந்து போகக் கூடிய விஷயம் அல்ல. மராட்டியம், உத்தரப்பிரதேசம், குஜராத், தில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மராட்டியத்தில் ஒவ்வொரு நாளும் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும், மற்ற மாநிலங்களில் சராசரியாக 25 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். மராட்டியத்தில் ஆக்சிஜன் வாயுக் கசிவால் 24 பேர் உயிரிழந்த துயரம் தீரும் முன்பே, மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்திருப்பது வேதனையை அதிகரிக்கிறது.

தில்லியில் கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26 பேர் உயிரிழந்திருப்பதும், நிலைமை சமாளிக்க இராணுவ விமானங்களில் ஆக்சிஜன் சரக்குந்துகள் ஏற்றப்பட்டு தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதும் நிலைமை எவ்வளவு மோசமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகின்றன. உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களும் இதை உணர்ந்து உரிய அறிவுரைகளையும், எச்சரிக்கைகளையும் வழங்கி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் ஆபத்தான சூழலை உணர்ந்து செயல்பட வேண்டும்.

வட மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தின் நிலைமை ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது என்றாலும் கூட, நிலைமை மோசமாகிவிடாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் நாளில் 49, 930 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் 474 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. அப்போது தொற்று விகிதம் 0.80% மட்டுமே. ஆனால், நேற்றைய நிலவரப்படி ஒரு லட்சத்து 13,144 பேருக்கு பரிசோதிக்கப்பட்ட நிலையில், 12,652 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நோய்த்தொற்று விகிதம் 11.18% ஆக அதிகரித்திருக்கிறது. நோய்த்தொற்று விகிதம் கடந்த 50 நாட்களில் 15 மடங்கு அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

நோய்த்தொற்று விகிதம் அதிகரித்து வருவதைக் பட்டுப்படுத்த ஒரே வழி கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரையும் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக கண்டறிந்து, சிகிச்சையளிப்பது தான். அதற்கான முதல் நடவடிக்கையாக கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும். கடந்த மாதத்தில் சுமார் 50,000 என்ற அளவில் இருந்த தினசரி சோதனை இப்போது 1.15 லட்சம் என்ற அளவுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் கூட, இந்த எண்ணிக்கையை இன்னும் எவ்வளவு உயர்த்த முடியுமோ, அவ்வளவு உயர்த்த வேண்டும். மற்றொருபுறம் தடுப்பூசிகள் போடும் அளவையும் அதிகரிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3 லட்சம் தடுப்பூசிகளாவது போடப்படும் அளவுக்கு கட்டமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும்; அதற்கு தேவையான அளவு தடுப்பூசிகளை மத்திய அரசின் ஒதுக்கீட்டிலிருந்தும், மருந்து நிறுவனங்களிடமிருந்து நேரடியாகவும் பெற வேண்டும்.

கொரோனா பரவலைத் தடுப்பது அரசின் கடமை மட்டுமே அல்ல. இதற்கான பொறுப்பு மக்களுக்கும் உள்ளது. தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் தான் தமிழ்நாட்டில் கொரோனா வேகமாக பரவத் தொடங்கியது என்பதை மறுக்க முடியாது. ஆனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு அதிகம் வெளியில் வராமலும்,   முகக்கவசம் அணிவதை முழுமையாக பின்பற்றியும் இருந்திருந்தால் 15 நாட்களில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி இருந்திருக்க முடியும். ஆனால், மக்களாகிய நாம் பாதுகாப்பு விதிகளை சிறிதும் பொருட்படுத்தாமல் இருந்ததன் விளைவாகத் தான் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது.

அடுத்த 3 வாரங்களுக்குள் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகி விடும். இதை உணர்ந்து கொரோனா சோதனைகளை அதிகரிப்பது, சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்புகளை அதிகரிப்பது, தடுப்பூசிகளை அதிக எண்ணிக்கையில் போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும், இவற்றைக் கடந்த புதிய உத்திகளையும் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அதேபோல், பொதுமக்களும் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வேறு வழியின்றி, வீடுகளை விட்டு வெளியில் வருபவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்தல்,   ஏதேனும் பொருட்களைத் தொட்டால் கிருமிநாசினியை தொட்டுக் கொள்ளுதல் உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Says about New Technics of Control Corona Virus Spread 23 April 2021


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal