'காசு தர்றியா மாட்டியா'...? - மது குடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு...!
Did you give me money or not worker bizarre decision when his wife didnt give him money drink alcohol
கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறையை அடுத்த வட்டவிளை பகுதியில், குடும்பத் தகராறைத் தொடர்ந்து தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வட்டவிளையைச் சேர்ந்த டென்சிங் (57) கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
அவரது மனைவி பிரேமா (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். டென்சிங்கிற்கு நீண்டகாலமாக மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், அதற்காக அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தன்று வழக்கம்போல் மதுபானம் வாங்குவதற்காக டென்சிங் தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.

ஆனால் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறிய பிரேமா, பின்னர் ஆலய வழிபாட்டிற்காக வீட்டை விட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வழிபாட்டை முடித்துவிட்டு வீடு திரும்பிய பிரேமா, வீட்டின் அறைக்குள் சென்றபோது அதிர்ச்சியூட்டும் காட்சி காத்திருந்தது.
அங்கு மின்விசிறி பொருத்தப்பட்டிருந்த இரும்புக் கொக்கியில் டென்சிங் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரற்றுக் கிடந்தார்.இதைக் கண்டு கதறிய பிரேமா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் டென்சிங்கை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவட்டார் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். குடும்பப் பிரச்சினையா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Did you give me money or not worker bizarre decision when his wife didnt give him money drink alcohol