தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்.. தமிழக அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 8 ஏப்ரல் 2021 இன்று முதற்கட்டமாக மீண்டும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, மறு உத்தரவு வரும் வரை கீழ்காணும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

உள்‌ துறை அமைச்சகத்தால்‌ அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத்‌ தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால்‌ நீட்டிக்கப்பட்டுள்ளதால்‌, இதற்கான தடை தொடரும்‌.

தமிழ்நாடு முழுவதும்‌ நோய்க்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌ (Containment Zones) தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்‌.

நோய்‌ பரவலைக்‌ கருத்தில்‌ கொண்டு திருவிழாக்கள்‌ மற்றும்‌ மதம்‌ சார்ந்த கூட்டங்களுக்கு 10.4.2021 முதல்‌ தடை விதிக்கப்படுகிறது.

10.4.2021 முதல்‌ கோயம்பேடு வணிக வளாகத்தில்‌ செயல்படும்‌விதிக்கப்படுகிறது. அதே போன்று மாவட்டங்களில்‌ உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில்‌ சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும்‌, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன்‌ அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நடைமுறைகள்‌ 10.4.2021 முதல்‌ அமலுக்கு வரும்‌.

நோய்‌ கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு அனைத்து தரப்பு மக்களும்‌ ஒத்துழைப்பு நல்க வேண்டும்‌.

தொழிற்சாலைகள்‌, வணிக வளாகங்கள்‌, தனியார்‌ நிறுவனங்கள்‌, அலுவலகங்கள்‌ மற்றும்‌ உணவு விடுதிகளில்‌ பணிபுரியும்‌ பணியாளர்கள்‌, அலுவலர்கள்‌ மற்றும்‌ பொது மக்களின்‌ உடல்‌ வெப்ப நிலை (Thermal Scanning) பரிசோதனை செய்யப்படுவதையும்‌, கை சுத்திகரிப்பான்‌ (Hand Sanitizer) உபயோகப்படுத்துவதையும்‌, முகக்‌ கவசம்‌ அணிவதையும்‌ சம்மந்தப்பட்ட நிறுவனங்கள்‌ உறுதி செய்து, அனுமதிக்க வேண்டும்‌. முகக்‌ கவசங்கள்‌ அணியாமல்‌ இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்கக்‌ கூடாது. ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள்‌ இயங்க அனுமதிக்கப்படும்‌. தொழிற்சாலைகளில்‌ பணிபுரியும்‌ பணியாளர்களுக்கு, மத்திய அரசு அவ்வப்போது வழங்கும்‌ அறிவுரைகளுக்கு ஏற்ப தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிருவாகம்‌ செய்ய வேண்டும்‌. மேலும்‌, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகள்‌ மற்றும்‌ நிறுவனங்கள்‌ மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும்‌ தனியார்‌ பேருந்து மற்றும்‌ பெருநகர சென்னையில்‌ இயக்கப்படும்‌ மாநகரப்‌ பேருந்துகளில்‌ உள்ள இருக்கைகளில்‌ மட்டும்‌ பயணிகள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்‌. பேருந்துகளில்‌ நின்று கொண்டு பயணம்‌ செய்ய அனுமதி இல்லை.

தற்போது கொரோனா நோய்த்‌ தொற்று அதிகரித்து வருவதைக்‌ கருத்தில்‌ கொண்டு நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, புதுச்சேரி, ஆந்திரா மற்றும்‌ கர்நாடகம்‌ செல்லும்‌ பேருந்துகளில்‌ உள்ள இருக்கைகளில்‌ மட்டும்‌ பயணிகள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்‌. பேருந்துகளில்‌ நின்று கொண்டு பயணம்‌ செய்ய அனுமதி இல்லை.

முகக்‌ கவசம்‌ அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம்‌ பின்பற்றி, காய்கறி கடைகள்‌, பல சரக்கு கடைகள்‌ உட்பட அனைத்து கடைகளும்‌, வணிக வளாகங்கள்‌, அனைத்து ஷோரூம்கள் ‌ மற்றும்‌ பெரிய கடைகள்‌ (நகை, ஜவுளி) ஒரு நேரத்தில்‌ 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன்‌ மட்டும்‌ இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, உணவகங்கள்‌ மற்றும்‌ தேநீர்க்‌ கடைகளில்‌ உள்ள மொத்த இருக்கைகளில்‌, 50 விழுக்காடு இருக்கைகளில்‌ மட்டும்‌ வாடிக்கையாளர்கள்‌ இரவு 11.00 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்‌. மேலும்‌, உணவகங்களில்‌ இரவு 11.00 மணி வரை பார்சல்‌ சேவை அனுமதிக்கப்படும்‌.

கேளிக்கை விடுதிகளில்‌ 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

பொழுதுபோக்கு பூங்காக்கள்‌, பெரிய அரங்குகள்‌, உயிரியியல்‌ பூங்காக்கள்‌, அருங்காட்சியகங்கள்‌ போன்ற பொது மக்கள்‌ கூடும்‌ இடங்கள்‌ 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள்‌ உள்ள திரையாங்கு வளாகங்கள்‌, வணிக வளாகத்தில் உள்ள திரையாங்குகள்‌ உட்பட அனைத்து திரையரங்குகளும்‌ 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும்‌ பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும்‌.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி, உள்‌ அரங்கங்களில்‌ மட்டும்‌ அதிகபட்சமாக 200 நபர்கள்‌ மட்டும்‌ பங்கேற்கும்‌ வண்ணம்‌, சமுதாயம்‌, அரசியல்‌, கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சா நிகழ்வுகள்‌ மற்றும்‌ விழாக்கள் அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

curfew restriction in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->