கடலூர் குச்சிபாளையத்தில் நடந்தது என்ன?! வெளியான பரபரப்பு தகவல்!  மருத்துவர் ராமதாஸ் கண்டனம்! - Seithipunal
Seithipunal


குச்சிப்பாளையம் கிராமத்தை சூறையாடிய வன்முறை கும்பல் மீது நடவடிக்கை தேவை என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட குச்சிப்பாளையம் கிராமத்தின் மீது, அருகிலுள்ள மேல்கவரப்பட்டு காலனியைச் சேர்ந்த கும்பல் ஆயுதங்களுடன் படையெடுத்துச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த வன்னியர்களின் சொத்துகள் சூறையாடப் பட்டுள்ளன. மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கதாகும்.

குச்சிப்பாளையம் கிராமம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திடீரென ஏற்பட்ட மோதலில் விளைவாக நடத்தப்பட்டது அல்ல. இந்தத் தாக்குதல் வன்னியர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அங்குள்ள திடலில் இன்று காலை கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மேல்கவரப்பட்டு காலனியைச் சேர்ந்த லெனின், திவாகர் ஆகியோர் குச்சிப்பாளையம் இளைஞர்களிடம் சென்று தகராறு செய்துள்ளனர். அப்பகுதியில் தலித்துகள் அதிகம் வசிப்பதால், அவர்கள் அடிக்கடி இது போல தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. அதனால் வீண் வம்பு செய்த அவர்களிடம்  பதில் தகராறு செய்ய விரும்பாமல் அந்த இளைஞர்கள் தங்களின் வீடுகளுக்கு திரும்பிச் சென்று விட்டனர்.

ஆனால், லெனின், திவாகர் ஆகிய இருவரும் ஏற்கனவே வகுக்கப்பட்ட நாடகத்தின்படி குச்சிப்பாளையம்  இளைஞர்கள் தங்களைத் தாக்கி விட்டதாக தங்கள் காலனியைச் சேர்ந்த  விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி சீத்தாராமன் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி ஏற்கனவே தயாராக இருந்த அவர்கள் சிறிய சரக்குந்தில் அரிவாள், உருட்டுக்கட்டை, கரப்பாரை உள்ளிட்ட கொடிய ஆயுதங்களுடன் குச்சிப்பாளையம் கிராமத்திற்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.

அங்கிருந்த வீடுகள் மீது கற்களை வீசியும், உருட்டுக் கட்டைகளால் அடித்தும் சூறையாடிய அந்த கும்பல், தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களையும்  அடித்து நொறுக்கியது. இந்தத் தாக்குதலில் 25&க்கும் மேற்பட்ட வீடுகளும், 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்துள்ளன. 8 பேர் படுகாயமடைந்து பண்ருட்டி மருத்துவமனையில்  மருத்துவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளனர். குச்சிப்பாளையம் கிராமத்தில் வன்னியர்கள் 350 பேர் மட்டுமே வாழும் நிலையில், அதைச் சுற்றியுள்ள காலனிகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித்துகள் வாழ்வதாலும், அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்முறைக்கு தூண்டி விட்டு வருவதாலும் எந்த நேரத்தில் தங்களுக்கு என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வன்னிய மக்கள் அஞ்சி நடுங்குகின்றனர்.

குச்சிப்பாளையம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சாதி வெறியும், அரசியல் பகையும் தான்  தான் காரணம் ஆகும். ஊருக்குள் புகுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ‘‘ இனி மாம்பழம் சின்னத்தை உங்கள் வீடுகளில் வரைவீர்களா? இனி மாம்பழத்திற்கு வாக்களிப்பீர்களா?  என்று கூறி தாக்குதல் நடத்தியுள்ளனர். வன்னிய சமுதாய மாணவிகள் படிப்பதற்காக பேருந்து ஏறி வெளியூர் செல்ல அனுமதிக்க மாட்டோம் என மிரட்டியுள்ளனர். வன்னிய சமுதாய மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கதாகும். இந்நிலை தொடர தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்த வேண்டும். சேதமடைந்த பொருட்களுக்கு இழப்பீடும்,  காயமடைந்த மக்களுக்கு தரமான சிகிச்சையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இத்தாக்குதலுக்குக் காரணமானவர்கள், தூண்டியவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவரும், கடலூர் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருமான ஆர். கோவிந்தசாமி தலைமையில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் பழ.தாமரைக்கண்ணன், அசோக்குமார், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர்  அடங்கிய குழு குச்சிப்பாளையம் கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறும்.

பொன்பரப்பியில் விடுதலை சிறுத்தைகள் தான் கலவரத்தைத் தூண்டினார்கள். ஆனால், அதற்கு பாமகவும், வன்னியர்களும் தான் காரணம் என்று பொய்யாக குற்றஞ்சாட்டிய திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அவதூறுகளை அள்ளித் தெளித்தனர். வன்னிய மக்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று வெறியூட்டும் பேச்சுக்களை பேசினார்கள். வன்னியர்கள் மீது தங்களுக்கு காழ்ப்புணர்ச்சியும், பகையும்  இல்லை என்றால் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒரு குழுவை அமைத்து பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு சென்று மக்களை சந்திக்க வேண்டும்.

குச்சிப்பாளையம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பதை வெளிப்படையாக விளக்க வேண்டும். குச்சிப்பாளையம் வன்னியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்க வேண்டும்; இதற்கு காரணமான கும்பலை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். அவ்வாறு செய்ய மறுத்தால் அவர்களின் கபட வேடத்திற்கு மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்" என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuddalore kuchipalayam issue dr ramadoss condemns


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->