சென்னை அருகே கால்வாய் வெட்டும்போது பழையகற்கால, ஐந்து இலட்சம் ஆண்டுகள்.! - Seithipunal
Seithipunal


சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளையின் தலைவர் ஆர். ரங்கராஜ் வெளியிட்டுள்ள தகவலின்படி,,

பண்டைய நாளில் உலசில் மனிதன் வாழ்ந்திருந்தால் என்பதற்கான அடையாளமாகத் திகழ்பவை அவன் பயன்படுத்தி விட்டு சென்ற பொருட்களே ஆகும். குறிப்பாக பழங்கற்காலத்தில் அவர்கள் பயன்படுத்திவிட்டுச் சென்ற கல்லாயுதங்கள் மூலம் தொல்பழங்கற் காலத்தில் அவர்களது வாழ்க்கை முறையை அறியமுடிகிறது. இத்தகைய  கற்கால மனிதர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் வாழ்ந்திருந்தனர் என்பதற்கானத் தடயங்களான கருவிகள் அதிக அளவில் கிடைத்துள்ளன என்று தொல்லியல்த்துறை மேனாள் ஆணையர் (பொறுப்பு) முனைவர் சீ வசந்தி கூறுகிறார்.

கற்கருவிகளின் வகை, செய்யப்பட்ட தொழிற்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் பழையகற்காலம் (Palaeolithic period) உலகளவில் ஆய்வாளர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதனை மூன்று கால கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளனர்.

1. முதற்கற்காலம் (Lower Palaeolithic Age)
2. இடைக்கற்காலம் (Middle Palaeolithic Age)
3.கடைக்கற்காலம் (Upper Palaeolithic Age) என்பனவாகும்.

தென்னிந்தியாவில் சென்னை பெருநகரின் ஒரு பகுதியாக கருதப்படும் திருவள்ளூர் மாவட்டத்தில்தான் பழைய காலக் கருவிகள் கிடைக்கின்றன. இவை இம்மாவட்டத்தில் ஓடும் கொற்றலையாற்றுப் படுகைகளில் (இப்பகுதி மக்களால் குசஸ்தலை ஆறு என வழங்கப்படுகிறது) கற்கருவிகள் அதிக அளவில் கிடைக்கின்றன.

கொற்றலையாறு (பழைய பாலாறு) தற்போது வேலூர் மாவட்டம் லாஜப்பேட்டைக்கு அருகில் பாலாற்றிலிருந்து பிரிந்து செல்லும் சிறிய தடமாக உள்ளது. இது அரக்கோணம், திருத்தணி, திருவள்ளுர் பொன்னேரி வட்டங்கள் வழியாகப் பாய்ந்தோடி எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது. இது பழைய பாலாறு என்றும் விருத்தக்ஷர நதி என்றும் அழைக்கப்படுகிறது. “இந்த ஆற்றுப் பள்ளத்தாக்கில் தான் பழைய கற்காலக் கருவிகள் கிடைக்கின்றன. இவை செய்யப்பட்ட தொழிற் நுட்பத்தின் அடிப்படையில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சென்னையின் பெயருடன் இணைத்து சென்னை மரபு (என்று குறிப்பிடப்படுகின்றது”, என்று தெரிவிக்கிறார் முனைவர் வசந்தி.

“இச்சென்னை மரபு கற்கருவிகளில் கைக்கோடாரிகள் (Hand Axe) திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் கிடைக்கின்றன. தொல்லியல் அறிஞர்களால் இப்பண்பாடு (Hand Axe Culture) என்று அழைக்கப்படுகிறது. இக்கற்கருவிகள் யாவும் படிகக்கல்லிலிருந்து (Quartz) செய்யப்பட்டவைகள். இப்படிகக் கல்லிலிருந்து சில்லுகள் மிக எளிதாகப் பெயர்த்தெடுக்க இயலும். எனவே பழைய கற்கால மக்கள் இதனை கல்லாயுதங்கள் செய்யப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வகை கல் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, சத்தியவேடு ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இக்கால மக்கள் படிகக்கல் மனிதர்கள் (Quartzite men) என்றே அறிஞர்களால் அழைக்கப் படுகின்றனர். இவை திறந்தவெளிகள், ஆற்றுப்படுகைகள், மலைக் குகைகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன”.

ஆற்றுப்படுகைகள் (River Terraces)

கொற்றலை ஆறு செல்லும் வழித்தடங்களில் அல்லிக்குழி மலைக்குன்றுகளிலிருந்து காரனோடை அருகிலுள்ள எருமைவெட்டி பாளையம் வரை சில இடங்களில் ஆற்றுப்படுகைகள் காணப்படுகின்றன. இவை நில அமைப்பியலில் குறியீடப்படும் ஊழியான பிலைஸ்டோசீன் (Pleistocene) ஊழியைச் சேர்ந்ததாகும். இவற்றின் படிவ அடுக்குகளில் பழைய கற்காலக் கருவிகள் அதிக அளவில் கிடைக்கின்றன. இப்படிவ அடுக்குகள் 30 மீட்டர், 18 மீட்டர். 7 மீட்டர் மற்றும் 2 மீட்டர் உயரங்களுடன் உள்ளதாகத் தொல்லியல் ஆய்வாளர்களான வி. டி. கிருஷ்ணசாமி, டி.டி. பேட்டர்சன் ஆகியோர் குறிப்பிடுகின்றனர். ஆனால் எச்.டி சங்காலியா 18 மீட்டர், 7 மீட்டர் மற்றும் 2 மீட்டர் உயரமுடைய படுகைகள் தான் கொற்றலையாற்றுப் பள்ளத்தாக்கில் உருவானதாக கருதுகின்றனர்.

தற்போது தொல்பழங்காலத்திய ஆய்வில் ஈடுபட்டுள்ள முனைவர் சாந்தி பப்பு மேற் குறிப்பிட்டுள்ள ஆற்றுப்படுகைகள் பிளைஸ்டோசீன் (Pleistocene) முதல் ஹாலோசீன் (Holocene) வரையில் சிறிது சிறிதாக ஏற்பட்டவை எனக் குறிப்பிடுகின்றார்.

இம்மாவட்டத்தில் கிடைக்கும்  கைக்கோடரிகள்

கைக்கோடாரி வகைகளில் முதற்கட்டம் அபவில்லியன், அசூலியன் வகை கைக்கோடாரிகள் என்று வழங்கப்படுகின்றன. அபவில்லியன் அசூலியன் தொழில் நுட்பக்கருவிகள் (Abbevillio- Acheulian) முதல் நிலைக் கற்கருவி வகைகளாகும். இவை இயற்கையாகக் கிடைக்கும் பெரிய கற்களையோ அல்லது உருண்டையான கூழாங்கற்களையோ எடுத்து அவைகளிலிருந்து பெரிய சில்லுகளைப் பெயர்த்து எடுத்துவிட்டு இக்கருவிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வகை கருவிகள் முதற் கற்காலத்தைச் சேர்ந்தவைகள் ஆகும்.

முதற்கற்காலம் 5,00,000 -2,50,000 ஆண்டுகளுக்கு முன் (Lower Palaeolithic Age)

“இக்காலக் கட்டத்தைச் சேர்ந்த கற்கருவிகள் திருவள்ளூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் அதிக அளவில் கிடைக்கின்றன. எனவே இப்பகுதியில் இக்காலக் கட்டத்தினைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் வாழ்ந்துள்ளனர் எனத் தெரிகின்றது. அபவில்லியன் ஆசூலியன் கல்லாயுதங்களில் கைக்கோடாரிகள், கிழிப்பான்கள், வட்டுகள் போன்றவை அதிக அளவில் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன”.

இடைக்கற்காலம (Middle Palaeolithic Age)
காலம்:(2,50,000- 30,000 ஆண்டுகளுக்கு முன்)

இக்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் அளவில் சிறியனவாகவும் சில்லு கருவிகளாகவும் (Flake tools) உள்ளன. பெரும்பாலும் கைக்கோடாரிகள் அதிக அளவில் கிடைக்காததால் இதன் பயன்பாடு பெருமளவில் குறைந்து விட்டது. சிறிய வடிவிலான கைக்கோடாரிகள் சில இடங்களில் மட்டும் கிடைக்கின்றன. இக்காலத்தில் முனை கற்கருவிகள் (points), சுரண்டிகள் (Scrappers), கத்திகள் (Blades) போன்ற கருவிகளே திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிதும் கிடைக்கின்றன.

கடைக்கற்காலம் (Upper Palaeolithic Age)
காலம்: (30,000 - 10,000 ஆண்டுகளுக்கு முன்)

அண்மைக்காலத்தில் தான் கடைக்கற்காலம் தமிழகத்தில் இருந்ததற்கான சான்றுகள் திருவள்ளூரை அடுத்துள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன. இங்கு செந்நிற படிவடுக்குகளில் (Ferricreate or red soil) கருவிகள் செய்வதற்கேற்ற மூலக்கற்களும், சிறு கத்திகளும், சுரண்டிகளும் அதிகம் கிடைத்துள்ளன. அத்திரம்பாக்கத்தில் இக்கருவிகள் கிடைப்பதால் இங்கு இக்கற்கருவிகளைச் செய்யும் தொழிற்கூடம் இருந்திருக்கக்கூடும்.

“திருவள்ளூரைச் சுற்றி தொல்பழங்காலப் பண்பாட்டைச் சேர்ந்த பல இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. மத்தியத் தொல்லியல் துறையால் பூண்டி, நெய்வேலி, வடமதுரை, குடியம், அத்திரம்பாக்கம் ஆகிய இடங்களிலும், அத்திரம்பாக்கத்தில் சென்னையிலுள்ள சர்மா மரபியல் கல்விமையமும் (Sharma Center for Heritage Education) 1999-ஆம் ஆண்டும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பரிக்குளத்திலும் அகழாய்வு செய்ததன் மூலம் தொல்பழங்காலத்தைக் குறித்த பல வினாக்களுக்கு விடையளிப்பனவாக உள்ளன”, . என்று கூறுகிறார் முனைவர் வசந்தி.

அத்திரம்பாக்கம்

அமைவிடம் : சென்னை நகரம் மைய்ய பகுதியிலிருந்து 56 கி.மீ தொலைவில் அத்திரம்பாக்கம் அமைந்துள்ளது. இவ்வூரின் தெற்கில் கோர்த்தலையாறும், பூண்டி நீர்த்தேக்கமும், வடக்கில் அலிக்கூழி - சத்தியவேடு குன்றுகளும் காடுகளும் உள்ளன. இப்பகுதி மக்கள் இவ்வூரினை அத்திரம்பாக்கம், ஆற்றம்பாக்கம், ஆட்ரம்பாக்கம் என பல்வேறு பெயர்களால் அழைக்கின்றனர். இவ்வூர் ஆற்றிற்கு பக்கத்தில் உள்ளதால் இப்பெயர் வழங்கப்பட்டதோ என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அருகில் செல்லும் கோர்த்தலையாறு 'விருத்தக்ஷர நதி என்றும் பழைய பாலாறு என்றும் வழங்கப்படுகின்றன.

இவ்வூரில் பாயும் 'பூதடி மன்னுவங்க' ஓடையை ஒட்டியுள்ள மேட்டில் பழைய கற்கால கருவிகளை கி.பி. 1863-இல் சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் கண்டறிந்தார். இம்மேட்டில் கூழாங்கல் படிவ

அடுக்கில் கைக்கோடாரிகளுடன் மனித எலும்புப் பகுதியின் தொல்லுயிர் படிவத்தினையும் (Fossil) கண்டுபிடித்தார். சுமார் நூறு ஆண்டுகளுக்கு பின்னர்கே. டி. பானர்ஜி (1963-64 மற்றும் 1978-79) அகழா ய்வு செய்தார். இவ்வாய்வில் அசூலியன் மரபுக் கைக்கோடாரிகள் தான் அதிகம் கிடைத்தன.

சென்னையிலுள்ள சர்மா மரபியல் கல்வி மையம் Center for Heritage Education) 1999 முதல் இங்கு மேற்பரப்பு மற்றும் அகழாய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வில் அத்திரம்பாக்கத்தி முதல் கற்காலம் (Lower Palaeolithic) 5,00,000 - 2,50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதன் பயன்படுத்திவிட்டுச் சென்ற கற்கருவிகளும், இடைக்கற்காலம் (Middle Palaeolithic Age) 2,50,000 -30,00,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கருவிகளும், கடைக்கற்காலம் (Upper Palaeolithic Age) 30,000 10.000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கருவிகளும் கிடைக்கின்றன. தொல் பழங்காலத்தில் கொற்றலையாற்றின் கரைப்பகுதியை ஒட்டியே இருந்துள்ளனர் என்பது இங்கு கிடைக்கும் அதிக அளவிளான கற்கருவிகள் மூலம் தெரிகின்றது. அசுலியன் வகைக் கைக்கோடரிகள் சுமார் 2,50,000 ஆண்டுகளுக்கு முற்பட்டத் தரைப்பகுதியில் கிடைக்கின்றன. சுமார் 10 லட்சம் ஆண்டுகளில் இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாறுதல்கள் அகழாய்வில் வெளிப்பட்டுள்ளன.

பழைய கற்காலத்தினைச் சேர்ந்த காட்டெருமையின் நீள் வட்ட வடிவ காலடித் தடயங்கள் 17 (Bovid hoof impressions) கற்கருவிகளுடன் மூன்று மீட்டர் ஆழத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் வெப்பமண்டலச் சமவெளிப் பகுதியில் வாழும் நீர் எருமை, குதிரை மற்றும் கொம்புகற்றமான் ஆகியவற்றின் பற்கள் தொல்லுயிர் படிவங்களாகக் கிடைத்துள்ளன.

பூண்டி

இங்கு 1965-66-ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இடை மற்றும் கடைக்காலத்திய கற்கருவிகளும், ஏழு வகை மண்ணடுக்குகளும் வெளிப்படுத்தப்பட்டன.

நெய்வேலி

1962-63 மற்றும் 1963-64 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கைக்கோடாரிகளும், வெட்டுக் கருவிகளும்,கூர்முனைக் கருவிகளும் கிடைத்துள்ளன.

வடமதுரை

ஆரணி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இவ்வூரில் 100 அடி உயர படிவு படுகையில் (Terrace) 1966-67இல் அகழாய்வு செய்யப்பட்டது. இங்கு அபிவில்லியன் என்ற வகைக் கைக்கோடாரிகள் அதிகம் கிடைத்தன. இவற்றுடன் கிழிப்பான்களும் (Cleavers), சில்லுக்கருவிகளும் (Flake tools) கிடைத்துள்ளன.

குடியம்

இவ்வூர் பூண்டிக்கு மேற்குப்புறம் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள அல்லிக்குழி மலைத் தொடரில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த 16 குகைகள் காணப்படுகின்றன. இவற்றுள் மிகப்பெரிய அளவிலான குகை 'மனச்சம்மன்' குகை எனப்படும். இது சுமார் 100 அடி உயரமுடையதாகும். இதில் சுமார் 100 பேர் தங்கக்கூடிய அளவு மிகப்பெரியது.

இப்போதும் இப்பகுதி கிராம மக்கள் பௌர்ணமி நாளில் இங்குள்ள மனச்சம்மனை வழிப்பட்டுச் செல்கின்றனர். இங்கு 1902-03 மற்றும் 1903-04 இல் அகழாய்வு செய்யப்பட்டது.  இதில் தொல்பழங்காலத்தில் கற்கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தில், படிப்படியாக வளர்ச்சி பெற்றதைத் தெளிவாக அறியமுடிகிறது. கைக்கோடாரிகள், சிழிப்பான்கள், வெட்டிகள், கரண்டிகள் ஆகியவை கிடைத்துள்ளன.

பரிகுளம்

பூண்டிக்கு தென்மேற்கே சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. “இவ்வூரில் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் கால்வாய் வெட்டும்போது செம்மண் சரளைக் கல்மேட்டில் (Laterite gravel deposit) பழையகற்காலக் கல்மேடு காணப்பட்டன. இவை சுமார் ஐந்து லசட்ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிளைஸ்டோசீன் (Pleistocene) காலத்தில் தோன்றிய மேடாகும்”, என்று தெரிவிக்கிறார் முனைவர் வசந்தி.

இந்த படிவுப்படுகை (Deposital terrace) இல் நான்கு. படிவடுக்குகள் காணப்படுகின்றன. மேல் அடுக்கில் சிதைந்த சரளைக்கல் அடுக்கும் (Detrial Laterite deposit) அதன் கீழ் சிறு கூழாங்கற்களுடன் கூடிய சரளைக்கல் அடுக்கும் (Laterite mixed with Pebbles) உள்ளன. இவ்வடுக்கில் தான் பழைய கற்காலக் கருவிகள் சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவைகளாகும். ஏனெனில் இவை கிடைக்கும் இப்படிவ அடுக்கு சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பிளைஸ்டோசீன்  காலத்தில் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதற்கடியில் பெருங்கற்களுடன் கூடிய சரளைக்கல் அடுக்கும் (Laterite mixed with boulders) அதன் கீழ் கெட்டியான களிமண்ணும் (Sriperumbudur or Avadi shale) காணப்படுகின்றன.

பரிகுளத்தில் கிடைத்த கற்கருவிகள் நீண்ட காலமாக செந்நிற சரளைக்கல் அடுக்கில் கலந்திருந்ததால் இவற்றின் மேற்புறம் செந்நிறமாக (Patination) காணப்படுகிறது. அகழாய்வில் எழுபதிற்கும் மேற்பட்ட கற்கருவிகள் கிடைத்துள்ளன. இவற்றில் சில அபவில்லியோ - அசூலியன்  பண்பாட்டைச் சேர்ந்தவைகளாகவும் (அதாவது காலத்தால் முற்பட்டவைகள்) பிற அசூலியன் பண்பாட்டைச் சேர்ந்தவைகளாகவும் காணப்படுகின்றன. கைக்கோடாரிகள், வெட்டுக்கத்திகள், சுரண்டிகள், கூர்முனைக்கருவிகள், வட்டுகள் ஆகியவை குறிப்பிடத்தக்க கருவிகளின் வகைகளாகும்.

மேலும் கூறுகிறார் முனைவர் வசந்தி, “சென்னை பெருநகரின் திருவள்ளூர் மாவட்டம் உலகில் பல நாடுகளைச் சேர்ந்த தொல் பழங்கால ஆய்வாளர்களுக்கு ஒரு புனிதத்தலமாக திகழ்கின்றது என்றால் அது மிகையல்ல. இம்மாவட்டத்தில் ஓடும் கொற்றலையாறு. ஆரணி ஆற்றுப் பகுதிகளில் பழைய கற்கால மக்கள் விலங்குகளை வேட்டையாடியும் வாழ்க்கை நடத்தியுள்ளனர். கற்களைக் கொண்டு கற்கருவிகளை செய்துள்ளனர். நெருப்பின் பயனை இவர்கள் அறியவில்லை. மரப்பட்டைகளையும், விலங்குகளின் தோலையும் ஆடையாக உடுத்தியுள்ளனர். மலைக்குகைகளிலும் ஆற்றோரங்களிலும் வாழ்ந்துள்ளனர் என இவர்கள் பயன்படுத்திவிட்டுச் சென்ற கற்கருவிகள் மூலம் அறியமுடிகின்றது”.

திருவள்ளூர் மாவட்டத்தில் பழைய கற்காலக் கருவிகள் கிடைக்குமிடங்கள்: 

1.        அஞ்நூர்

 2.       அத்திரம்பாக்கம்

 3.       அம்மணம்பாக்கம்

 4.        அமரம்பேடு

 5.      அரும்பாக்கம்

 6.      அல்லிக்குழி

 7.       இலவம் கண்டிகை

 8.       ரங்காபுரம்

 9.       ஊத்துக்கோட்டை

 10.       எடமச்சி

  11.      எருமைவெட்டிபாளையம்

 12.      ஏரிகுப்பம்

 13.      ஒதப்பை

  14.      ஓரகடம்

  15.     கச்சூர்

  16.     கட்டுப்புடி

  17.     கம்மவாரிபாளையம்

  18.     கல்மேடு

 19.      கல்வாய்

 20.     கலவை

21.      கரடிப்புத்தூர்

22.     கருக்கம்பாக்கம்

23.     கிரிணயேத்தம்

24.    கிருஷ்ணாபுரம்

25.    குஞ்ஞர்பாளையம்

26    குடியம்

27.    கூனிபாளையம்

28.   கொல்லபாளையம்

29.   சீத்தஞ்சேரி

30.  செங்குன்றம்

31.   சென்ராயன்பாளையம் மதிரியோடு

32.  தரணிவராகபுரம்

33.  திம்மபூபாலபுரம்

34.  திருமுல்லைவாயில்

35.  தேவேந்திபாக்கம்

36.  தோமூர்

37.  நக்கலகோணா

38.  நயப்பாக்கம்

39.  நம்பாக்கம்

40.  நாய்க்கன் பாளையம்

41.  நாராயணபுரம்

42.  நெய்வேலி

43.  நெல்வாய்

44:   பரிக்குளம்

45.   பாதிவேடு

46.   பிளேஸ்பாளையம்

47.   புத்தூர்

48.   பதூர்

49.   பூண்டி

50.   பொன்னாலூர்பேட்டை

51.   போந்தவாக்கம்

52.   மஞ்சாங்கரணை

53.   மண்ணூர்

54.   மதிரிமேடு

55.   மயிலாப்பூர்

56.  மாகாளியம்

57.  மாதர்பாக்கம்

58.  மாமண்டூர்

59.   மானத்தூர்

60    மேட்டுப்பாளையம்

61.  ஆவடி

62   இராரபாளையம்

63   ரோஷாநகரம்

64.   வடமதுரை

65   விடையூர்

66.   வெங்கல

67.   வெள்ளத்துக்கோட்டை

68.   வேலியூர்

69.   வேௗகாபுரம்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai 5 laks years


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->