அரியலூர்: 3 மாத பச்சிளம் குழந்தை வறுமையால் ரூ.1.80 இலட்சத்திற்கு விற்பனை.. பெற்றோர் உட்பட 5 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


நான்காவதாக பிறந்த பெண் குழந்தையை ரூ.1.80 இலட்சத்திற்கு விற்பனை செய்த பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு, குழந்தை மீட்கப்பட்டது. இவ்வழக்கில் பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் கைதாகியுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வடவீக்கம் கிராமம், மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் சரவணன் (வயது 34). இவர் விவசாய கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா (வயது 27). சரவணன் - மீனா தம்பதியினருக்கு 9 வயது, 4 வயது, 3 வயது என 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். 

இந்நிலையில், நான்காவது முறையாக கர்ப்பமடைந்த மீனா மீண்டுமொரு பெண் குழந்தையை பிரசவிக்க, அந்த குழந்தைக்கு சுபஸ்ரீ என பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர். ஆனால், 4 பெண் குழந்தைகளை எப்படி வளர்த்து ஆளாக்கப்போகிறோம்? என்ற எண்ணம் தம்பதிகளை ஆட்கொண்டுள்ளது. 

மாதிரி படம் : குழந்தை 

இதுகுறித்து உறவினர்களிடமும் தெரிவித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக பிறந்து 3 மாதமான பச்சிளம் குழந்தை சுபஸ்ரீயை காணவில்லை. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கேட்கையில், குழந்தை உறங்கிக்கொண்டு இருக்கிறது என சமாளித்து வந்துள்ளனர். இதனால் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

மேலும், அடையாளம் தெரியாத புதிய மர்ம நபர்கள் சரவணன் வீட்டிற்கு வந்து சென்ற நிலையில், அவர்கள் யார் என்று கேட்டதற்கு தூரத்து சொந்தம் என தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், குழந்தை சுபஸ்ரீ ரூ.1.80 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது உறுதியாகவே, இந்த இரகசிய தகவல் ஜெயங்கொண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் கலை கதிரவன் கவனித்திற்கும் சென்றது.

இதனையடுத்து, நேரடியாக துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்து, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் துரைமுருகனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் குழந்தைகள் நல அதிகாரி துரைமுருகன், வடவீக்கம் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜூ ஆகியோர் சரவணன் இல்லத்திற்கு சென்றுள்ளனர். அங்கு வீடு பூட்டப்பட்டு சரவணன் மற்றும் அவரது மனைவி மீனா மாயமாகி இருந்தனர். 

அக்கம் பக்கத்தில் விசாரணை செய்கையில் குழந்தை குறித்த சர்ச்சை தகவல் வெளியானதால், தம்பதிகள் குழந்தையை விற்பனை செய்துள்ளதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து மாயமான தம்பதியை தேடி வந்த நிலையில், உறவினர் வீட்டில் இருந்த இருவரையும் கைது செய்தனர். 

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், வறுமையின் காரணமாக நான்காவதாக பிறந்த பெண் குழந்தையை கோவையை சார்ந்த தம்பதிற்கு ரூ.1.80 இலட்சத்திற்கு விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளனர். அவர்களின் வாக்குமூல அடிப்படையில் குழந்தை விற்பனைக்கு உதவி செய்த ஈரோடு இராஜேந்திரன், செந்தில் குமார், மண்ணச்சநல்லூர் முத்தையன், குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். 

கோவையை சார்ந்த தம்பதியையும் கைது செய்த காவல் துறையினர் குழந்தையை மீட்டுள்ளனர். கோவை தம்பதியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur Jayankondam Baby Sales by Parents Officials Rescued and Coimbatore Couple Arrested


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->