கொரோனாவுக்கு பாரம்பரிய மருத்துவம்! பரிசீலிக்க வலியுறுத்தும் அன்புமணி! - Seithipunal
Seithipunal


கொரோனாவுக்கு பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்துவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தமிழ்நாடு உட்பட இந்தியாவில் வேகமாக பரவி வருவது  மக்களிடையே பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான தடுப்பூசியோ, குணப்படுத்துவதற்கான மருந்தோ இன்று வரை  கண்டுபிடிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் நோயை தடுக்கவும், குணப்படுத்தவும் தேவையான மருந்துகளை கண்டுபிடிக்க அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இன்னும் சில நாடுகளில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அது பயனளிக்குமா? என்பதை அறிய, மனிதர்களுக்கு வழங்கி ஆய்வு செய்யப் பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் ஓராண்டு வரை ஆகலாம். அதுவரை கொரோனா நோய் பாதிப்புகளை சமாளிப்பதற்காக நம்மிடம் எந்தெந்த மருத்துவ முறைகளில், என்னென்ன வாய்ப்புகள் உள்ளனவோ, அவை அனைத்தையும் பயன்படுத்துவதில் தவறில்லை.

சீனாவில் கொரோனா தாக்குதல் உச்சத்தில் இருந்தபோது, அந்நாட்டின் பாரம்பரிய மருத்துவமுறைகள் (Traditional Chinese Medicine)மற்றும் நவீன மருத்துவ (Modern Medicine) முறைகளை இணைத்து பயன்படுத்தி தான் கொரோனா வைரஸ் நோய் குணப்படுத்தப்பட்டது. அதேபோல், இந்தியாவிலும் ஏராளமான பாரம்பரிய மருத்துவமுறைகள் உள்ளன. தமிழ் மருத்துவமுறையான சித்த மருத்துவமுறை ஆயிரமாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான நோய்களை குணப்படுத்திய  மருத்துவ முறையாகும். அம்முறையைக் கொண்டு கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம் என்று சித்த மருத்துவர்கள் கூறி வரும் நிலையில், அதை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.

இந்தியாவில் கடந்த காலங்களில் பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட  நோய்கள் தாக்கிய போது, அவற்றை குணப்படுத்துவதற்காக இல்லாவிட்டாலும், மனிதர்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, நோயின் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் ஆகியவை முக்கியப் பங்காற்றியதாக சித்தமருத்துவர்கள் கூறுவதை நிராகரித்துவிட முடியாது.

இந்தியாவில் சித்த மருத்துவம் குறித்து ஆய்வு செய்யும் நோக்குடன் தான் தாம்பரம் சித்த மருத்துவ நிறுவனம் என்னால் கொண்டு வரப்பட்டது. கொரோனா வைரஸ் போன்ற நோய்களை கட்டுப்படுத்த சித்த மருந்துகள் இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறும் போது, அத்தகைய மருந்துகளை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ஆய்வக சோதனைகளுக்கு உட்படுத்தி, அதன் தன்மைகளை வெளிப்படுத்த வேண்டும். இதில் தவறு எதுவும் இல்லை என்று தான் நவீன முறை மருத்துவராக நான் கருதுகிறேன்.

அதேநேரத்தில் சித்த மருத்துவம் என்றாலே போலியான மருத்துவம் என்ற தவறான எண்ணம் சில அதிகாரிகளுக்கு உள்ளது. இந்த கண்ணோட்டம் மாற்றப்பட வேண்டும். இனியாவது விழித்துக் கொண்டு கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அனைத்து உத்திகளையும் கையாள வேண்டும். குறிப்பாக நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவ முறையை பயன்படுத்தி கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani said Think traditional medicine for corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->