அதிமுகவின் வளர்ச்சிக்கு தொண்டர்களின் கோரிக்கை.. என்ன செய்யப்போகிறது தலைமை?..! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் பல கருத்து மோதல்கள் இருந்தாலும், அவை பேசி தீர்க்கப்பட்டு கட்சி இயல்பான நிலையில் இருந்து வருகிறது. ஆனால், அவ்வப்போது ஏற்படும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் இடையேயான மோதல் பெரிய அளவில் பூதாகரமாக வெடிக்கிறது. பல மாவட்டங்களில் வெளியே தெரியாத அளவிற்கு மோதலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்தல் காலமும் நெருங்கியுள்ளதால் மாவட்டங்களை பிரித்து பொறுப்புகளை வழங்குவதில் சர்ச்சை எழுந்துள்ளது. அதிமுக தலைமையை பொறுத்த வரையில் தேர்தலை எளிதாக சந்திக்க பொறுப்புகளை பிரித்து வழங்க முடிவு செய்திருப்பதாக தெரியவருகிறது.

தமிழக அரசின் சார்பாக பல வருவாய் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், புதிய நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர். இதில், செல்வாக்காக இருந்து வந்த மாவட்ட செயலாளர்களிடம் இருந்த தொகுதிகள் பிரிக்கப்பட்டு புதிய நபர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது. இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என பிரிக்கப்பட்டு இருந்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் பொறுப்புகள் வழங்கப்படாத சூழல் அமைந்துள்ளது. அமைச்சர்கள் செல்வாக்காக இருக்கும் சென்னை, விழுப்புரம், நாமக்கல், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்கள் பிரிக்கப்படவில்லை. 

இந்த மாவட்டங்களை பிரித்து பதவிக்கான நபர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையை பொறுத்த வரையில் தற்போது 6 மாவட்ட செயலாளர்கள் இருந்தாலும், இன்னும் பல மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் 4 முதல் 5 தொகுதிகள் உள்ள நிலையில், ஒருவருக்கு 2 தொகுதிகள் அதிகபட்சமாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் தோப்பிற்கு அமைச்சர்களை அழைத்து சென்று, அவர்களுக்கு தேவையான சகலத்தையும் செய்து வருவதாகவும், இதனால் வழிகாட்டுதல் குழுவில் உள்ள அமைச்சர்களே மாவட்ட பிரிப்பிற்கு எதிராக இருப்பதாகவும் தெரியவருகிறது.

தங்களின் சுய ஆசைக்காக கட்சியின் வளர்ச்சியை சீரழித்து வருவதாகவும் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், பல சென்னை மாவட்ட செயலாளர்கள் சூதாட்ட விடுதிகள், மசாஜ் சென்டர்கள், போலியான மதுபான பார்களை வைத்து நடத்தி, ரவுடிகளின் துணையுடன் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும், இதனால் மட்டுமே சென்னையில் ஆளும்கட்சியாக இருந்தும் வெற்றிபெற இயலாத சூழல் ஏற்பட்டு இருப்பதாகவும் தலைமைக்கு தொண்டர்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலேயே பெரிய மாவட்டமாக இருந்து வந்த விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டமாக உருவாக்கப்பட்ட நிலையில், அமைச்சர் சி.வி சண்முகம் தனது மாவட்டத்தை பிரித்தால் அதிமுக கட்சி கீழ்நிலைக்கு சென்றுவிட வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்ததால் அவரது மாவட்டத்தை பிரிக்காமல் இருப்பதாக தெரியவருகிறது. இதனைத்தவிர்த்து நாமக்கல், சேலம், தேனி, கோயம்புத்தூர், சிவகங்கை மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களும் பிரிக்கப்படாமல் இருக்கிறது. இந்த மாவட்டத்திலும் அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் செல்வாக்கு காரணங்க தலைமை நிர்வாகிகள் மாவட்டத்தை பிரிப்பதில் தயக்கம் காண்பித்து வருவதாகவும் தெரியவருகிறது.

இந்த விஷயத்தில் தயக்கம் காண்பித்தால், எதிர்க்கட்சிகளின் வியூகத்தை எப்படி சமாளிப்பது என்று தொண்டர்கள் தலைமைக்கு கேள்வி எழுப்பி வரும் நிலையில், மாவட்டங்களை பிரிக்காமல் களப்பணியாற்றும் பட்சத்தில் அது முழுமையாக நிறைவு பெறாது என்றும், தேர்தலில் அதுவே பெரிய பிரச்சனையாக வந்து நிற்கும் என்றும் எச்சரிக்கை செய்கின்றனர். முதல்வர் வேட்பாளர் தொடர்பான பிரச்சனை கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக நிறைவு பெற்ற நிலையில், இது குறித்த பிரச்சனை சரியானதும் மாவட்டங்களை பிரிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை நிர்வாகிகள் தெரிவித்ததாகவும் தொண்டர்கள் கருத்து தெரிவிகின்றனர்.

இதனைப்போல தலைவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் இருக்கும் இரண்டு, மூன்று பதவிகளில் ஒருபதவியை துறந்து அனைவருக்கும் பதவி கொடுத்தால், கட்சியில் அடுத்தடுத்த பணிகள் பிரச்சனை இல்லாமல் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வரும் என்றும் தொண்டர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக சரியான முடிவுகளை தலைமை விரைவில் செய்யாமல் விட்டால், கட்சிக்குள் மோதல் பெரிய அளவிலான வகையில் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Party Members Request to Announce New Posting for Development


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->