ஆடிப்பூர திருவிழா: நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது!
Aadippur Thiruvizha It started with flag hoisting at Nellaiyapper Temple!\
நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியதும் குழந்தை இல்லாத பெண்கள் காந்திமதி அம்மனுக்கு 10 நாட்களும் விரதம் கடைபிடித்து வருவார்கள்.
ஆண்டுதோறும் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம் . அந்தவகையில் இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை காந்திமதி அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து 4-ம் திருவிழாவான 21-ம்தேதி மதியம் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், இரவு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 10-ம் திருநாளான வருகிற 27-ம்தேதி மாலை ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.
அப்போது காந்திமதி அம்மனை கர்ப்பிணி பெண் போல் அலங்கரித்து மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து வளையல்கள் அணிவித்து, அலங்கார தீபாராதனை முடிந்தவுடம் , சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார்.
அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயிரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
இந்த சிறுபயிரை குழந்தை இல்லாத பெண்கள் வாங்கி சாப்பிட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்காக குழந்தை இல்லாத பெண்கள் அம்மன் சன்னதியில் கொடியேறிய பின்பு 10 நாட்களும் விரதம் கடைபிடித்து வருவார்கள்.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்துவருகிறது.
English Summary
Aadippur Thiruvizha It started with flag hoisting at Nellaiyapper Temple!\