15 வயது சிறுமியை ஏமாற்றி துஷ்பிரயோகம்..! - ராயவேலூரை உலுக்கும் இரட்டை கொடூரம்!
15 year old girl cheated and abused double tragedy that shook Rayavellur
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ராயவேலூர் பகுதியில் வசிக்கும் 15 வயது பள்ளி மாணவியைச் சுற்றி அதிர்ச்சியூட்டும் பாலியல் துஷ்பிரயோகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாலக்கோம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் அந்தச் சிறுமியை, அதே ஊரைச் சேர்ந்த 52 வயது பிச்சைமணி ஆசைவார்த்தைகளால் ஏமாற்றி தனது வலையில் சிக்கவைத்து பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் இன்னும் பதறவைக்கும் விஷயம்—இருவரும் தனிமையில் இருந்த காட்சிகளை அங்குள்ள 16 வயது சிறுவன் தனது மொபைல் போனில் ரகசியமாக பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, சிறுமியையும் துஷ்பிரயோகம் செய்யச் செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லை என கவலைப்பட்ட தாயார், சிறுமியை ஆண்டிப்பட்டி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதை தெரிவித்ததும் தாயார் அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து எடுத்த விசாரிப்பில் மனம் பதறும் உண்மைகள் அனைத்தையும் சிறுமி வெளிப்படையாக கூறியுள்ளார்.இதையடுத்து மனஉளைச்சலில் மூழ்கிய தாயார், ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை ஏமாற்றி உறவு கொண்ட பிச்சைமணியையும், மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சிறுவனையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த கோரச் சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் சலசலப்பையும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
English Summary
15 year old girl cheated and abused double tragedy that shook Rayavellur