மில்லரின் போராட்ட சதம் வீண்! வெற்றியுடன் தொடரையும் வென்றது இந்தியா! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியுடானான இரண்டாவது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இந்த போட்டியில் பேட்டிங்கில் அசத்திய இந்திய அணி பந்துவீச்சில் சொதப்பினாலும், அதிகப்படியான இலக்கை நிர்ணயித்ததன் காரணமாக, தென்னாபிரிக்க அணியால் இலக்கை எட்டி பிடிக்க முடியவில்லை. இந்த போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா 2 - 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. 

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி நடைபெறும் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என அனைவராலும் சொல்லப்பட்டது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக பிட்ச் ரிப்போர்ட்டில் முதலில் விளையாடும் போது பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதனை பொய்ப்பிக்கும் விதமாக இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. 

இந்தியாவின் தொடக்க ஜோடி 10 ஆவது ஓவரில் 96 ரன்கள் குவித்த பிறகே, ரோகித் சர்மா 43 ரன்கள் எடுத்திருந்தபோது பிரிந்தது. அவர் 37 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸரை விளாசி  43 ரன்களை  குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த கே எல் ராகுல் 28 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்ஸரை விளாசி 57 ரன்கள் விளாசினார்.

இதனிடையே 7 ஓவருக்கு 68 ரன்கள் அடித்திருந்த போது ஆடுகளத்தில் உள்ளே பாம்பு ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள நடுவரிடமும், பேட்டிங் செய்த ராகுலிடமும் தென்னாப்பிரிக்க வீரர்கள் தெரிவிக்கவே, ஆடுகள பராமரிப்பாளர்கள் உரிய கருவியுடன் வந்து பாம்பை பத்திரமாக மீட்டுச் சென்றனர். அதன்பிறகு ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. 

பின்னர் வந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினார்கள். அதிவேகமாக அரை சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை சூர்யா பெற்றார். அவர் 18 பந்துகளில் அரை சதம் அடித்தார். முன்னதாக இந்திய தரப்பில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சிறப்பை வைத்திருக்கும் நிலையில், அதுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் கே எல் ராகுலுடன் இரண்டாவது இடத்தினை சூரியகுமார் பகிர்ந்து கொண்டார். 

முன்னதாக இதே ஆட்டத்தில் T20 போட்டிகளில் மொத்தமாக ஆயிரம் ரன்களை அவர் கடந்தார். பந்துகள் எண்ணிக்கைப்படி அதி வேகமாக அவர் ஆயிரம் ரன்கள் என்ற சாதனையை பெற்றிருக்கிறார். முன்னதாக ஆஸ்திரேலிய அணி மேக்ஸ்வெல் 604 பந்துகளில் 166 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆயிரம் ரன்களை கடந்தது சாதனையாக இருந்த நிலையில், சூரியகுமார் யாதவ் 573 பந்துகளிலேயே 174 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இந்த சாதனையை படைத்திருக்கிறார். அவர் 22 பந்துகளில் தலா 5 பவுண்டரி, சிக்ஸர்களுடன்  61 ரன்கள் எடுத்து துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார். 

மறுமுனையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த விராட் கோலியும் தன் பங்குக்கு, 28 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸரை விளாசி  49 ரன்களை குவித்து இறுதி ஓவர் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதி ஓவரில் 1 ரன் அடித்தால் அரைசதம் அடிக்கலாம் என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக் கொடுக்கிறேன் என வலிய வந்து தெரிவித்தும், வேண்டாம் அடித்து ஆடச்சொல்லிவிட்டார். இறுதி ஓவரை முழுமையாக சந்தித்த தினேஷ் கார்த்திக் 2 எக்ஸ்ட்ரா உட்பட 18 ரன்களை திரட்டினார். தினேஷ் கார்த்திக் 7 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 237 ரன்களை 3 விக்கெட் மட்டுமே இழந்து குவித்தது. 

தென்னாபிரிக்க அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மகாராஜ் மட்டுமே சிக்கனமாக வீசியதுடன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 15 ஓவர்களை வீசிய  தென்னாபிரிக்க அணி வேகப்பந்துவீச்சாளர்கள் 201 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட கைப்பற்ற முடியாமல் திணறினர். 

238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு முதல் ஓவராக அமைய, இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார் அர்ஷிதீப் சிங், பவுமா, ரஸௌவ் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினார்கள். 

அடுத்து வந்த மார்க்ரம் அதிரடியாக ஆரம்பித்த நிலையில் அவரை 33 ரன்களில் அக்சர் படேல் வெளியேற்றினார். அதன் பிறகு வந்த மில்லர் சரவெடியாக வெடிக்க, டீ காக் ஒருநாள் போட்டி போல நிதனமாக ஆடினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய இந்த ஜோடி பார்ட்னர்ஷிப்பாக 150 ரன்களுக்கு மேல் குவித்து மலைக்க வைத்தது. 

டேவிட் மில்லர் 47 பந்துகளில் 8 பவுண்டரி 7 சிக்சருடன் 107 ரன்களையும், டி காக் 48 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 69 ரன்களையும் குவித்தனர். இறுதியில் தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 221 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 - 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. 

தென்னாபிரிக்க அணி முதன் முறையாக 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள், T20 போட்டி தொடரில் இந்தியாவிற்கு எதிராக தொடரை இழந்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

David miller de cock build partnership but couldn't reach the target short by 16 runs


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->