கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதுங்குறது இதுக்கு தானா.?! அறிவியல் உண்மைகள்.!  - Seithipunal
Seithipunal


கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். கல்லடி படுவதால் உண்டாகும் காயம் இரண்டொரு நாளில் ஆறிவிடும். அதே நேரத்தில் கண்ணடி பட்டால் (திருஷ்டி) நேரும் துன்பம் அத்தனை சுலபமாக நம்மை விட்டு அகலாது என்பதால் திருஷ்டி சுற்றிப்போடும் பழக்கத்தினை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள்.’இவன் இத்தனை சுகமாய் வாழ்கிறானே, என்று அருகில் உள்ளோரின் உள்ளத்தில் தோன்றும் பொறாமை உணர்வினையே திருஷ்டி என்று அழைக்கிறோம். இந்த பொறாமை என்பது பொதுவாக மனிதனின் இயற்கை குணங்களில் ஒன்று.

சாதாரண மனிதர்கள் ஆகிய நம் எல்லோருக்குள்ளும் இந்த மாதிரியான எண்ணம் தோன்றுவது இயற்கை. பெண்களுக்கு இடையே அழகு, செல்வம் ஆகியவற்றிலும், ஆண்களுக்கு பதவி, பட்டம், புகழ், வசதிவாய்ப்பு ஆகியவற்றிலும், மாணவர்களுக்கு இடையே பரிசுகள் பெறுவதிலும் இம்மாதிரியான குணங்கள் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது.இந்த திருஷ்டி தோஷத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பூசணிக்காய் சுற்றி உடைத்தல் எலுமிச்சம்பழம் நறுக்கி பிழிதல், சிதறு தேங்காய் உடைத்தல், ஆரத்திச்சுற்றுதல், உப்புச்சுற்றி போடுதல், மிளகாய் சுற்றி போடுதல் என்று பல்வேறு சம்பிரதாயங்களைக் கடைபிடிக்கிறார்கள். இதனை மூட நம்பிக்கை என்று சொல்லி முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியாது.

பிரதி சனிக்கிழமை தோறும் ஸ்ரீசுதர்ஸனரை (சக்கரத்தாழ்வார்) வழிபட்டு வருவதால் திருஷ்டி தோஷத்திலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள இயலும்.சிலர் அமாவாசைக்கு மட்டும் காக்கைக்கு உணவு படைக்கிறார்கள். தினந்தோறும் நாம் உணவருந்துவதற்கு முன்னால் காகத்திற்குச் சாதம் வைப்பது நல்லது. ஸ்நானம் செய்யாமல் சமைத்த சாதத்தை காகத்திற்கு வைக்கக்கூடாது. தினசரி காகத்திற்குச் சாதம் வைக்க இயலாதவர்கள் அமாவாசை மற்றும் விரத நாட்களிலாவது அவசியம் காகத்திற்குச் சாதம் வைக்க வேண்டும் என்பதை பெரியோர்கள் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக அமாவாசை நாளில் மட்டும்தான் காகத்திற்குச் சாதம் வைக்கவேண்டும் என்பதில்லை. தினசரி காகத்திற்குச் சாதம் வைத்தபின் நாம் சாப்பிடுவது நமது பரம்பரைக்கே நன்மை தரக்கூடியது.

நம்மில் பலருக்கு கருடபுராணம் என்ற ஒன்று இருப்பதே திரைப்படத்தின் வாயிலாகத்தான் தெரிய வந்துள்ளது. இன்னமும் சில வீடுகளில் மகாபாரதம் படித்தால் குடும்பத்தில் சண்டை வரும்இ ராமாயணம் படித்தால் கணவன் மனைவி பிரிவு உண்டாகும் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையே நம் வீட்டுப்பிள்ளைகள் தொலைக்காட்சித் தொடர்களின் மூலம்தான் அறிந்து கொள்கிறார்கள்.இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களை சுத்தமாகத் தெரியவில்லை. இந்தியாவின் பிரதானமான இதிகாசங்களுக்கே இந்த நிலைமை எனும் போது மற்ற புராணங்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? அதிலும் கருடபுராணம் என்பது நரகத்தினைப் பற்றியும் அதில் தரப்படும் தண்டனைகளைப் பற்றியும் சொல்லப்படுவது என்ற கருத்து அடி மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கும் போது அதனை வீட்டில் வைத்துப் படித்தால் துர்மரணங்கள் வீட்டில் நிகழும் என்ற மூடநம்பிக்கையை நம்மவர்கள் பரப்பி வைத்துள்ளார்கள். கருடபுராணம் மட்டுமல்ல, 18 புராணங்களையும் வீட்டில் வைத்துப் படிக்கலாம். அதில் எந்த விதமான தவறும் இல்லை.ஆனால் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களைப் புரிந்துகொள்ளும் பக்குவம் நமக்கு இருக்க வேண்டும் அவ்வாறு புரியாத பட்சத்தில் நாமாக கற்பனை செய்து புரிந்துகொள்ளாமல் தகுதி வாய்ந்த குருவின் உதவியோடு அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். கருடபுராணத்தை வீட்டில் வைத்து படிக்கக்கூடாது என்று சொல்வதெல்லாம் முற்றிலும் மூடநம்பிக்கையே. இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் போது நம் இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள் ஆடியில் அம்மன், புரட்டாசியில் பெருமாள் என்று மாதத்திற்கு ஒரு வடிவத்தை வணங்குகிறோம். சரியான பாதையில்தான் செல்கிறோமா? சந்தேகமே வேண்டாம். சரியான பாதையில் தான் செல்கிறோம். இனிப்பு என்பது ஒன்றுதான். ஆனால் அதை லட்டு, ஜாங்கிரி, மைசூர்பாகு என்று பல வடிவங்களில் ருசிக்கிறோம். ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டாலும் இறுதியில் நாம் அனுபவித்து உணரும் ருசி என்னவோ இனிப்பு ஒன்றுதான். அவரவருக்கு பிடித்த இனிப்பு வகைகளை ருசிப்பது போல, ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த வடிவத்தில் இறைவனை தரிசிக்கின்றனர். இந்து மதத்தைப் பொறுத்தவரை இறைவனை நம்மிடமிருந்து தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என நம் குடும்பத்தில் உள்ள உறவு முறைகளை இறைசக்திக்கும் அளித்து வழிபடுகிறோம்.
வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை இந்து மத கடவுளுக்கு உண்டு. ஏனெனில் கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை இந்து மதத்தில் மட்டும்தான்.

தாயாக அம்மன், தந்தையாக சிவன், நண்பனாக கிருஷ்ணன், குருவாக தட்சிணாமூர்த்தி, ஆசிரியையாக சரஸ்வதி, செல்வமகளாக லட்சுமி, செல்வ மகனாக குபேரன், மழையாக வருணன், நெருப்பாக அக்னி, அறிவாக சுவாமிநாதன், ஒரு வழிகாட்டியாக பார்த்தசாரதி, உயிர்மூச்சாக வாயு, காதலாக மன்மதன், மருத்துவனாக தந்வந்திரி, வீரத்திற்கு மலைமகள், ஆயகலைக்கு மயன், கோபத்திற்கு பரசுராமன், ஊர்க்காவலுக்கு ஐயனார், வீட்டு காவலுக்கு பைரவர், குடிக்கின்ற பாலிற்கு காமதேனு, கற்புக்கு சீதை, நன்னடத்தைக்கு ராமன், பக்திக்கு அனுமன், குறைகளைக் கொட்ட வெங்கடாசலபதி, சகோதரனுக்கு லட்சுமணன், வீட்டிற்கு வாஸ்துபுருஷன், மொழிக்கு முருகன், கூப்பிட்ட குரலுக்கு ஆதிமூலமான நாராயணன், போர்ப்படைக்கு வீரபாகு, கலைக்கு நடராஜன், உணவிற்கு அன்னபூரணி, மரணத்திற்கு யமன், பாவக்கணக்கிற்கு சித்ரகுப்தன், பிறப்பிற்கு பிரம்மன், சுகப்பிரசவத்திற்கு கர்ப்பரட்சாம்பிகை,இவ்வாறு நமது வாழ்க்கை முறையோடு இறைவனையும் நாம் சேர்த்துக் காண்பதால் உருவானதே இத்தனை வடிவங்கள். ஆக இவை அனைத்தும் நமது பக்தி மற்றும் சிரத்தையின் வெளிப்பாடே அன்றி மூட நம்பிக்கைகள் அல்ல. நமது வாழ்க்கை முறையே இறை வழிபாட்டோடு ஒன்றிணைந்தது தான். நமக்கு முற்றிலும் மன நிறைவைத் தருவதால் வெவ்வேறு விதமான உருவங்களில் இறைவனை வழிபடுவதில் எவ்விதத் தவறும் இல்லை.தாய் தந்தை இருந்தால் அமாவாசை அன்று தலைக்கு குளிக்கக் கூடாது என்கிறார்களே இது ஏன்?இது தவறான கருத்து.

முதலில் நமது சாஸ்திரம் சொல்வதைப் பற்றி அறிந்துகொள்வோம். பொதுவாக உச்சி முதல் உள்ளங்கால் வரை நனைய குளிப்பதற்குத்தான் ஸ்நானம் என்று பெயர். இதனை எல்லோரும் தினமும் செய்ய வேண்டும். இதனை நித்ய ஸ்நானம் என்ற பெயரில் அழைப்பார்கள். இந்த நித்ய ஸ்நானம் செய்வதற்கு பெற்றோர் உள்ளவர்கள் பெற்றோர் இல்லாதவர்கள் என்ற பேதம் ஏதும் இல்லை. இதில் அமாவாசை நாளும் அடக்கம். அதே நேரத்தில் அமாவாசை நாளில் தந்தையை இழந்தவர்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டுள்ளது. இந்த தர்ப்பணத்தை அபரான்ன காலம் என்று அழைக்கப்படுகின்ற மதிய நேரத்தில் செய்ய வேண்டும். அதாவது மதியம் 11 மணி முதல் 02 மணிக்குள்ளாக செய்ய வேண்டும். அவ்வாறு தர்ப்பணம் செய்பவர்கள் நித்ய ஸ்நானத்தை காலை எழுந்தவுடனும் அதனைத் தொடர்ந்து அபரான்ன காலத்தில் தர்ப்பணம் செய்வதற்கு முன்னால் இரண்டாவது முறை ஒரு ஸ்நானமும் செய்ய வேண்டும்.தர்ப்பணம் செய்வதற்காக இவ்வாறு இரண்டாவது முறையாக ஸ்நானம் செய்வதைத்தான் தகப்பன் உள்ளவர்கள் செய்யக்கூடாது என்று சொன்னார்கள். அதைத்தான் நாம் இவ்வாறு தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம். நித்ய ஸ்நானம் என்பது தலைக்கு குளிப்பதே ஆகும். அமாவாசை நாள் உட்பட எல்லா நாளிலும் எல்லோருக்கும் நித்ய ஸ்நானம் என்பது உண்டு என்பதே நமது சாஸ்திரம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Scientific truth about kan dhrishti


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->