பெருமாளுக்கு முதன்முதலில் முடிகாணிக்கை செலுத்தியது யார் தெரியுமா.? சுவாரசியமான தகவல்.! - Seithipunal
Seithipunal


திருப்பதி என்றதும் பலருக்கும் பல விஷயங்கள் நினைவுக்கு வரும் அதில், பிரதானமான ஒன்று பெருமாளுக்கு முடி காணிக்கை செலுத்துவது. நாட்டில் பெரும்பாலான பெருமாள் பக்தர்கள் ஆண்டுக்கு ஒரு முறை குடும்பத்துடன் திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்துவது வழக்கம். குழந்தை பிறந்ததும் முதல் முறையாக மொட்டை, திருப்பதிக்குத்தான் என்று வேண்டிக்கொண்டு மொட்டை அடிக்கும் வழக்கமும் இருக்கிறது.  

பொதுவாக மனித உடலில் இயல்பாகவே வளரக்கூடியவை முடியும், நகமும் தான். மனிதன் இறந்த பின்னும் உடலில் வளரக்கூடியவை, இவை தான். மனிதனின் உயிர் உறையும் இடமாக முடியைக் கருதும் பழக்கம், பழங்குடிச் சமூகங்களின் நம்பிக்கைகளில் இருந்து தொடர்கிறது. எனவேதான் முடியை 'உயிர்ப்பொருள்' என்று தொன்மவியலாளர்கள் அழைக்கிறார்கள். முடியைக் காணிக்கை ஆக்குவதன் மூலம் நம் உயிரையே இறைவனுக்குக் காணிக்கை ஆக்குகிறோம் என்பது தான் அதன் அர்த்தம்.

பணம் ,பொருள் இவைகளை காணிக்கை அளிப்பதைவிட முடி காணிக்கை அளிப்பது தான் விசேஷமானதாகக் கருதப்படவும் இதுவே காரணம். எல்லாம் சரிதான் ஆனால் திருப்பதி பெருமாளுக்கு முடி காணிக்கை அளிக்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது.? முதன்முதலில் பெருமாளுக்கு முடி காணிக்கை அளித்தது யார்.? இதற்கெல்லாம் விடை தெரிந்துகொள்ள மிகவும் சுவாரசியமாக இருக்கிறதா.? அதை பற்றி தான் பார்க்க போறோம்.

ஒருநாள் சீனிவாசன் புற்றில் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தபோது, பசு ஒன்று அவருக்குத் தினமும் பால் சுரந்து தாகம் தீர்த்தது. அந்த மாட்டின் சொந்தக்காரன், பசு வீணாகப் புற்றொன்றில் பால் சுரப்பது கண்டு கோபமுற்று தன் கையில் இருந்த ஆயுதத்தை எறிந்தான். அது புற்றின் உள்ளே இருந்த பகவான் சீனிவாசன் மீது பட்டது. இதனால் அவர் தலையில் சிறு காயம் உண்டாகி தலையில் இருந்த கொஞ்சம் கேசமும் சிதைந்தது.

ஒரு முறை சீனிவாசனின் மகிமைகளைக் கேள்விப்பட்டு, அவரை தரிசனம் செய்ய 'நீளா 'என்கிற நீளாத்ரி மலையின் இளவரசி வந்தாள். அப்போது பெருமாள் சயனித்திருந்தார். காற்றில் அவரின் கேசம் கலைய, தலையின் சிறுபகுதி கேசமின்றி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தாள். ஒளிபொருந்திய அழகிய பெருமாளின் முகத்துக்கு இது ஒரு குறையாக இருப்பதாக உணர்ந்தாள்.

உடனடியாகத் தன் தலையில் இருந்து கேசத்தை வேரோடு வருமாறு வலிமையாகப் பிடுங்கினாள். அந்த முடிகளை, முடிகளற்ற பெருமாளின் தலையில் வைத்து, 'தன் பக்தி உண்மையானால், இந்தக் கேசம் ஒட்டிக்கொள்ளட்டும்' என்று வேண்டிக்கொண்டாள். அடுத்த கணம் அந்த கேசம் அவர் தலையில் ஒட்டிக்கொண்டது. 

பெருமாள் கண்விழித்தபோது, ரத்தம் வழியும் முகத்தோடு நின்றாள் நீளா. அதைக்கண்டு , நடந்ததை அறிந்துகொண்டு மனம் நெகிழ்ந்தார் பெருமாள். நீளாவின் பக்தியை மெச்சி, அவர் கேட்கும் வரம் தருவதாகச் சொன்னார்.

"பெருமாளே, கலியுகத்தின் முடிவுவரை நீங்கள் இந்த ஏழுமலையில் நின்று அருளப்போகிறீர்கள். அப்போது வரும் பக்தர்கள் என்போல, உங்களுக்கு முடி காணிக்கை தருவார்கள். அப்படி முடி காணிக்கை தரும் பக்தர்களின் குறைகளைப் போக்கி நல்லருள் வழங்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள் நீளா.

தனக்கென எதுவும் கேளாமல், பிறருக்காக வரம் கேட்ட நீளாவைக் கண்டு மனம் மகிழ்ந்த பெருமாள், "நீளா, உன் செய்கையின் மூலமும் கேட்ட வரத்தின் மூலமும், எளிய மனிதர்களும் பக்தி செய்து என் அருளைப் பெறும் வழியை நீ ஏற்படுத்திவிட்டாய். இனி எனக்கு முடி காணிக்கை தரும் பக்தர்களின் குறைகளை உடனே போக்கி, அவர்களுக்கு தீர்க்க ஆயுளும் வறுமையற்ற வாழ்வும் அருள்வேன்" என்று பதிலுரைத்தார்.

திருப்பதியில் தற்போது முடி காணிக்கை வழங்கும் இடத்துக்கு, 'கல்யாண கட்டம்' என்று சொல்லுவார்கள். கல்யாணி நதி ஓடிய இடம் என்பதால் அது 'கல்யாண் காட்' என்று அழைக்கப்பட்டு, அதுவே மாறி கல்யாண கட்டம் என்றானது என்கிறார்கள். இறைவனுக்கு முடியை அளிப்பதன் மூலம் நம் உயிரை அவருக்கு அர்ப்பணிக்கும் உணர்வைப் பெறுகிறோம். 

இதன் மூலம் ஜீவாத்மாவான நாம் பரமாத்மாவோடு கலக்கும் அனுபவத்தைப் பெறுவதால், முடியைக் காணிக்கை தருவதை, 'கல்யாணம்' என்று கூறவும் இடமுண்டு. எனவே, முடி தானம் செய்யும் இடத்துக்குக் 'கல்யாண கட்டம்' என்ற பெயர் பொருத்தமான ஒன்றுதான்.

தினமும் பெருமாளுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி வணங்குகிறார்கள். பெருமாளும் அதை மானசீகமாக ஏற்று பக்தர்களுக்கு அருள்கிறார். ஒவ்வோர் ஆண்டும் காணிக்கை மூலம் வழங்கப்படும் முடி ஏலம் விடப்பட்டு கோடிக்கணக்கான பணம் திரட்டப்படுகிறது. அந்தப் பணமும் தேவஸ்தானத்தின் மூலம் திருப்பணிகளுக்கே பயன்படுத்தப்படுகிறது. அந்தத் திருப்பணிகளில் எல்லாம் முடி தானம் வழங்கியவர்களின் பங்கும் நிறைந்து பல்வேறு புண்ணிய பலன்களைப் பெற்றுத்தரும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do you know who first paid hair for Perumal.?


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->