அற்புதம் தரும் ஆடிப்பெருக்கு.! நல்ல மணவாளன் அமைய... இந்த நாளை மறந்துடாதீங்க.! - Seithipunal
Seithipunal


ஆடிப்பெருக்கு:

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். நதியை பெண்ணாக வணங்கும் நாள்! இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கன்று நதிகளை வழிபடுவதன் மூலம் நீர்வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

புத்தாடை அணிந்து, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம் மற்றும் வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச்சென்று, நதிக்கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாக கருதி, பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள். இந்த தினத்தில் செய்யப்படும் மங்கள காரியங்கள் பன்மடங்கு பலன் தரும் என்பது ஐதீகம்.

அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு, அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து, அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவார்கள்.

ஆற்றங்கரைக்குப் போகும் பொழுதே, ஒரு முறத்தில் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பூ, ரவிக்கைத்துணி, காதோலை கருகமணி, திருமாங்கல்ய சரடு என்று ஒரு பெண் விரும்பி ஏற்கும் அனைத்தையும் வைத்து, மற்றொரு முறத்தில் மூடி எடுத்துச் செல்வர். ஆற்றங்கரையில் இவற்றை வைத்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்குவர்.

இந்த நன்னாளில் கணவனின் நலனுக்காக பிரார்த்திக்கும் ஒரு நாளாகவும் சொல்லலாம். காதோலை கருகமணி, காப்பரிசி வைத்து பூஜை செய்யும் கன்னிப்பெண் சீக்கிரமே நல்ல கணவனை அடைவாள் என்பது நம்பிக்கை.

தானிய அபிவிருத்தி (பயிர்கள் செழிக்க) அருளும் அம்பிகையை, பெண்கள் வம்ச அபிவிருத்தி (நற்குழந்தைப் பேறு) வேண்டி வழிபாடுகள் நடத்துவார்கள். குலம் விளங்க, நல்வாரிசுகள் அமைய அம்பிகையை மனமுருகிப் பிரார்த்தனை செய்வார்கள்.

ஆடிப்பெருக்கன்று பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை. மேலும், புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள்.

ஆடிப்பெருக்கு தினத்தன்று மறக்காமல் விரதமிருந்து வீட்டிலும் பூஜை செய்யுங்கள். வீட்டில் நாம் செய்யும் பூஜை செல்வத்தையும், அமைதியையும் பலமடங்கு பெருக அருள்புரியும். பூஜையை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

ஆடிப்பெருக்கிற்கு வீட்டில் பூஜை செய்வது எப்படி?

நிறைக்குடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சேர்க்க வேண்டும். இந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைத்து, சர்க்கரை பொங்கல் படைக்க வேண்டும்.

பூக்கள் தூவி அம்மனை போற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு தீபாராதனை செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய நதிகளை மனதார நினைத்து வழிபட வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aadi perukku celebration for good partner


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->