விருத்தாச்சலம் மாணவி கொலை : நான் திலகவதி பேசுகிறேன்! வெளியான வைரல் கடிதம்!  - Seithipunal
Seithipunal


தமிழ் சொந்தங்களே வணக்கம்! கொஞ்சம் சொல்லிவிட்டு தான் செல்லுங்களேன்! நான் என்ன குற்றம் செய்தேன்?! என்ற தலைப்போடு மறைந்த மாணவி எழுதுவது போல ஒரு கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த கடிதமானது, 

"நான் உங்கள் திலகவதி பேசுகிறேன், திலகவதி என்றவுடன் யார் என்று நீங்கள் கேட்கலாம், என்னை நீங்கள் மறந்து இருக்கலாம் அல்லது அறியாமல் இருக்கலாம். ஏனெனில் எனக்காக பேச வேண்டியவர்கள் யாருமே இங்கு பேசவில்லை என்பதால் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இருந்தாலும் நானே கூறுகிறேன், நான் யாரென்று!

நான் கடலூர் மாவட்டம் பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவி. நன்றாக படித்து நல்ல அரசு வேலைக்கு அதிகாரியாக, ஆசிரியராக, அலுவலராக ஆகவேண்டும் என்ற கனவில் மிதக்கும் ஒரு சராசரியான பெண். வறுமையில் பிறந்து, வறுமையில் வளர்ந்து பெற்றோருக்கு ஒரு நல்ல மகளாய் இருந்து, என் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் விதமாக படிப்பதற்காகவே என் தாய் தந்தையை  வலியுறுத்தி அழைத்துக்கொண்டு கருவேப்பிலங்குறிச்சி கிராமத்திற்கு வந்தேன்.

இன்றைய காலத்திலும் பெண்கல்வி என்பது எங்களுக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள், பாதுகாப்பற்ற தன்மை போன்றவை எங்களை அச்சுறுத்தும் விதமாகவே இருக்கிறது. ஒரு சராசரிப் பெண் ஐந்தாம் வகுப்பு முடித்து உயர்நிலைக் கல்வியை முடித்து மேல்நிலைக் கல்வி முடித்து கல்லூரிக்கு செல்வது என்பது இன்றும் கிராமங்களில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது, அதிசயமாகவும் இருக்கிறது.

ஏனெனில் எங்களுடைய பாதுகாப்பை எண்ணியே, பருவமடைந்த எங்களை பள்ளிக்கு அனுப்ப கல்லூரிக்கு அனுப்ப தயங்குகிறார்கள். இதையெல்லாம் மீறி தான் ஒரு நல்ல மகளாய் இந்த சமூகத்தில் வாழ ஆசைப்பட்டு என் பெற்றோருக்கு உறுதுணையாக எதிர்காலத்தில் நான் இருக்க வேண்டும் அவர்கள் வறுமையை விரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் நான் படிக்க வேண்டும் என்று தான் என் ஊரில் இருந்து என் படிப்பு வசதிக்காக கருவேப்பிலங்குறிச்சி கிராமத்திற்கு நாங்கள் குடும்பத்தோடு வந்தோம். அங்கிருந்து கொண்டு தான் நான் இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன்.

கூலி வேலை செய்யும் என் தாய், தந்தை அவர்களின் சொற்ப வருமானத்தில் கடினப்பட்டு படித்துக் கொண்டிருக்கும் நான் சராசரியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தது ஒரு குற்றமா? என் வாழ்க்கை, என் கனவு அனைத்தையும் சிதைத்துவிட்டான் கொலைகார பாதகன் ஆகாஷ். இன்றோடு அவன் என்னை படுகொலை செய்து நாட்கள் ஐந்து ஓடிவிட்டன. என்னை ஏன் கொலை செய்தான்? நான் என்ன குற்றம் செய்தேன்? என் சக தோழிகளும், சக மாணவிகளும் எவ்வாறு பேருந்தில் செல்கிறார்களோ, கல்லூரியில் நடந்து கொள்கிறார்களோ அவ்வாறான ஒரு சராசரியான வாழ்க்கையை தானே வாழ்ந்து கொண்டு இருந்தேன். என்னை கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?

என்னை கொலை செய்தவன் ஒரு பாவி என்றால், மறுபக்கம் என் பெயரை, நடத்தையை கொலை செய்த பாவிகள் தானே அதிகமாக இருக்கிறார்கள். என் உயிரை பறித்தவனையும், என் பெயரை கொலை செய்தவன்களையும் பெண்ணிய போராளிகள், பெண் கல்வி ஊக்குவிப்பாளர்கள், பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசுவதற்கு பெண்கள் ஆணையம் நடத்துபவர்கள் என யாருமே என்னுடைய கொலைக்கு ஒரு கண்டனமோ, போராட்டமோ எதுவுமே தெரிவிக்கவில்லையே?

கடந்த வருடம் என் அருமை சகோதரி அனிதா, மருத்துவம் படிக்க முயன்று முடியாத காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டவருக்கு பொங்கிய போராளிகளும், அதிர்ந்த அரசியல்வாதிகளும் ஆங்கிலம் படிக்க சென்ற என்னை கொலை செய்ததற்கு ஒருவர் கூட கண்டுகொள்ளவில்லையே? நான் என்ன குற்றம் செய்தேன்?

நான்கு தொகுதி இடைத்தேர்தல் தான் முக்கியம் என முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கும் மு க ஸ்டாலின் அவர்களே, அனிதாவிற்கு எவ்வளவு அறிக்கைகள், எவ்வளவு கண்டனங்கள், எவ்வளவு போராட்டங்கள் செய்தீர்கள்? மருத்துவம் படிக்கப்போன சகோதரி அனிதாவின் உயிர் பறிபோனது தெரிந்த உங்களுக்கு இந்த ஆங்கிலம் படித்துக் கொண்டிருந்த திலகவதியின் உயிர் பறிபோனது கொலை செய்யப்பட்டது உங்களுக்கு தெரியவில்லையா? உங்களுக்கு 4 தொகுதி இடைத்தேர்தல் தான் முக்கியம் என்றாலும் கூட, உங்கள் உதவியாளர்கள் கூட இந்த செய்தியை பார்த்திருக்க மாட்டார்களா? ஒரு நாலு வரி கண்டன அறிக்கைக்கு கூட நான் அருகதையற்று போய்விட்டேனா?

இந்த தமிழ் சமூகத்தில் வாழ்ந்த சராசரி பெண், படித்துக்கொண்டிருந்த பெண் படுகொலை செய்யப்பட்ட செய்திகள் ஐந்து நாட்கள் கடந்தும் இதுவரை தாங்கள் வாய் திறக்கவில்லையே ஸ்டாலின்? நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே திமுக பெண்களை பாதுகாக்கும் இயக்கம் என்று, எனக்கு பாதுகாப்பு தான் இல்லை, ஒரு இரங்கல் கூட இல்லையே? இவர் ஒரு பக்கம் என்றால் மறுபுறம் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலன் நாங்கள்தான் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளே ஐயா முத்தரசனே, ஐயா பாலகிருஷ்ணனே உங்களுக்கு நான் மறைந்தது தெரியவில்லையா? நான் என்ன குற்றம் செய்தேன்? எனக்காக ஒரு கண்டன போராட்டம் நடத்த வில்லையே? பிணம் விழுந்த இடமெல்லாம் சென்று கண்டனம் தெரிவிக்க சென்றவர்களுக்கு எல்லாம் நான் பிணமாக விருத்தாச்சலம் மருத்துவமனை பிணவறையில் மூன்று நாட்கள் கிடந்தது தெரியாமலே போனதா? இல்லை தெரியாத மாதிரி இருந்து கொண்டீர்களா?

அரசியல் கட்சிகள் தான் இப்படி என்றால் பெண்ணிய போராளிகளே, பெண்ணிய சங்கங்களே, மகளிர் இயக்கங்களே, மகளிர் ஆணையங்களே நீங்கள் எங்கே சென்றீர்கள்? கொலைகார பாவிகளால் படுகொலை செய்யப்பட்ட உங்கள் சகோதரிக்காக குரல் கொடுக்காமல் நீங்கள் எங்கே போராட்டம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஆணையம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என் மரணத்திற்கு நீதி தான் என்ன? படிக்க சென்றது என் குற்றமா? இல்லை இந்த ஆணாதிக்க சமூகத்தில் பிறந்தது என் குற்றமா? என் மரணத்தை யாரும் கண்டுகொள்ளவில்லையே? எங்கே சென்று சொல்வேன் என் வேதனையை?

என் மரணம் தான் ஒரு பக்கம் என்றால், என் மரணத்திற்கு பின்னால் என் பெயரை, நடத்தையை கொச்சைப்படுத்தி ஊடகங்களில், இணையதளங்களில் எழுதி கொலை செய்து விட்டீர்களே? எத்தனை போராளிகள், எத்தனை இயக்கவாதிகள், இலக்கியவாதிகள் நீங்கள் எழுதிய வார்த்தைகள் உங்கள் வீட்டுப் பெண்களை நினைத்து பார்த்து எழுதுவீர்களா? எழுதி இருப்பீர்களா? உங்கள் உடன் பிறந்த சகோதரி, உறவினர்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தால் நீங்கள் எழுதியிருப்பீர்களா? என்று ஒருகணம் சிந்தித்துப் பார்த்தீர்களா?

2500 கிலோ மீட்டருக்கு அப்பால் நிர்பயா என்ற ஒரு சகோதரி சீரழிக்கப்பட்டாள், கொல்லப்பட்டால் என்று பொங்கிய ஊடகவாதிகளே, இலக்கியவாதிகளே, இயக்கவாதிகளே, இதோ இங்கு ஒரு சராசரி கல்லூரி மாணவி, தன் கனவுகளையும், குடும்பத்தையும் சுமந்து கொண்டு கல்லூரிக்கு சென்ற பெண், படுகொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என்பது உங்கள் கண்களுக்கு தெரியவே இல்லையா?

மருத்துவம் படிக்க சென்ற அனிதாவுக்கு ஒரு பார்வையும் ஆங்கிலம் படிக்க சென்ற திலகவதிக்கு ஒரு பார்வை என்று ஒதுங்கி ஒளிந்து கொண்டீர்களா? எங்கே உள்ளது,பெண் கல்வி, பெண் சுதந்திரம், பெண்களுக்கான பாதுகாப்பு நீங்கள் எல்லாம் யாருக்காக போராடுகிறீர்கள்? உங்களை எல்லாம் நம்பி என்னைப்போல சகோதரிகள் எவ்வாறு படிக்கச் செல்ல முடியும்? உங்களைப் போன்றவர்களின் செயல்பாட்டினால் மீண்டும் வீட்டுக்குள்ளேயே என் சகோதரிகள் முடங்கும் நிலைதான் உருவாகும்.

ஒவ்வொரு நாளும் பெண்களின் முன்னேற்றம், பெண்களின் கல்வி, பெண்களின் பாதுகாப்பு இந்த சமுதாயத்தில் பின் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை உங்களுக்கு எச்சரிக்கையாகவே சொல்கிறேன். இந்த கொலைகார கும்பல், நாடக காதல் கும்பல் என் சகோதரிகளை நிம்மதியாக வாழவே விடாது. உங்கள் அற்ப வாழ்விற்காக, அற்ப பெருமைகளுக்காக போராளிகள் என்று வெளியே காட்டிக் கொள்ளாதீர்கள். வெட்கங்கெட்ட போராளிகளே, மானங்கெட்ட இயக்கவாதிகளே, இந்த மண்ணில் மரணிக்கும் படுகொலை செய்யப்படும் ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சகோதரி உங்கள் உறவினர் என்று நினைத்து போராடுங்கள். ஒவ்வொருவருக்கும் நீதியை பெற்றுத் தாருங்கள்.

நான் என்ன குற்றம் செய்தேன்? 5 நாட்களாகியும் யாரும் என்னைப் பற்றி பேசவே இல்லையே? எனக்காக பேச யாருமே இல்லையே? நான் என்ன குற்றம் செய்தேன்? நீங்களாவது சொல்லிவிட்டு தான் செல்லுங்களேன் பெண்ணிய போராளிகளே!

இப்படிக்கு, 
உங்கள் சகோதரி திலகவதி." 

என்று கடிதம் போன்ற பதிவில் கூறப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vridhachalam girl wrote imagine letter viral in social media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->