அன்புமணிக்கு வைத்த பொறியில் சிக்கிய ராகுல் காந்தி! ரிவர்ஸ் ஆனதால் திமுக அதிர்ச்சி!  - Seithipunal
Seithipunal


தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரான மரு.அன்புமணியின் குறைந்த வருகைப்பதிவு சதவிகிதம் என்பது தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்கள் முன்பிருந்தே விவாதபொருள் ஆகி இருந்தது.
அதிமுகவுடனான கூட்டணி அறிவிப்புக்கு பின் எதிர்க்கூட்டணியினரால் அது இன்னும் பலமாக விமர்சிக்கப்படுகிறது. குறைந்த வருகைப்பதிவு சதவிகிதம் உண்மை தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தன் தொகுதிக்கான பிரச்சினைகளை பேசவும், தொகுதிக்கான தேவையானவைகளை கோரிக்கை வைக்கவும், ஒட்டுமொத்த நாட்டின் நலனுக்கான முக்கிய பிரச்சினைகள் தொடர்பான விவாதங்களில் கலந்து கொள்வதும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் முக்கியமானது. அதற்கு தான் அவர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் என பெயர். 

இந்த கடமையை சரியாக செய்தாரா அன்புமணி? என்பது தான் முக்கிய கேள்வியாக இருந்திருக்க வேண்டும் ஆனால், அவரின் வருகைப்பதிவேடு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு விமர்சனங்கள் வைக்கப்டுகிறது.

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன், பாமகவின் இளைஞரணி தலைவர், தமிழ்நாடு இறகுப்பந்து கழகத்தின் தலைவர் ஆகிய பதவிகளையும் வகிக்கும் அன்புமணி இந்த அனைத்து பொறுப்புகளிலும் திறம்பட பணியாற்றி இருக்கிறார்.

தருமபுரி தொகுதியை பொறுத்த வரை தனது எம்பி தொகுதி நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்துள்ளார். தொகுதியில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள், எம்பி தொகுதியில் நடத்தப்படும் திட்டங்கள் முதலியவைகளை அடிக்கடி நேரில் சென்று கள ஆய்வு செய்து இருக்கிறார். முடிக்கப்பட்ட திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். அவர் தனது தொகுதியில் ஆற்றிய பணிகளை தேதிவாரியாக அவரது முகநூல் பக்கத்தில் யார் வேண்டுமானாலும் காண முடியும். 

தமிழகத்தின் பொதுவான பிரச்சினைகளான ஜல்லிக்கட்டு தடை, நீட், விவசாயிகள் பிரச்சினை, காவேரி நீர் பிரச்சினை, ஓகி புயல் பிரச்சனை, எட்டுவழி சாலை, ஹைடிரோகார்பன்  பற்றி மக்களவையில் பேசி உள்ளார். ஹைடிரோகார்பன், எட்டுவழிச்சாலை உள்ளிட்ட பிரச்சினைகளை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். தருமபுரி – மொரப்பூர் ரயில்வே திட்டம், தீப்பெட்டி, பட்டாசு, காவேரி நீர், நீட் என பல திட்டங்களுக்காக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை நேரில் சந்தித்தே வலியுறுத்தியதும் பொதுவெளியில் ஆதாரமாக நிற்கின்றன. 

அதுபோக, ஈழப்போரில் நடந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், கட்டாய இனப்பெருக்கத்தடை மூலம் தமிழர்களின் எண்ணிக்கையை  குறைக்கும் தொடர் இனப்படுகொலை என இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஜெனிவாவில் நடந்த ஐ.நா மனித உரிமைக்கழக கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார். 

சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் இரண்டாவது முறையும் தமிழக இறகுப்பந்து கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதனையும் தாண்டி அவர் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை கூட அதிகம் நடத்தியதில்லை. மாறாக காவேரி ஆறு காப்போம், மேட்டூர் உபரிநீர் திட்டம், வைகை ஆறு காப்போம், தாமிரபரணி ஆறு காப்போம், பாலாறு காப்போம், கொசஸ்தலை ஆற்றில் பள்ளிப்பட்டு அணைக்கு எதிராக என மக்கள் வாழ்வாதாரங்கள் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தான் அவர் அதிகம் நடத்தியுள்ளார். கொள்ளிடம் முகத்துவாரம் தடுப்பணை, பெட்ரோ கெமிக்கல் திட்டத்திற்கு எதிராக, நெடுவாசல் போராட்டம், கதிராமங்கலம் போராட்டம் என அனைத்து இடங்களிலும் தன்னுடைய பெயரினை பதிவு செய்துள்ளார். 
   
அதெல்லாம் ஏற்று கொள்ள முடியாது. அன்புமணி செயல்பாடு மோசம் என கூறும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணி நபர்களுக்கு வாயடைக்கும் படியான பதில் வந்து சேர்ந்துள்ளது. முதலில்,  முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர்  ராகுல் காந்தியின் அட்டெண்டென்சை பார்த்து விட்டு வரவும் என அவர்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. 
 
மோடியை வீழ்த்தி இந்த நாட்டின் பிரதமர் இவர் தான் என திமுக முன்மொழியும்  ராகுல் காந்தி மக்களவையில் எழுப்பிய கேள்விகள் எத்தனை தெரியுமா ? பூஜ்யம்.  அவரது அன்னை சோனியாவும் அதே பூஜ்யம் தான். 

வருகைப்பதிவேடு  இருந்தால் தேர்ச்சி பெற்றவர்களாகி விடுவார்களா என வெறுமனே வகுப்புக்கு போய் தூங்குவது ராகுல் காந்தி போன்றவர்களுக்கு தேவையாக இருக்கலாம். படிப்பு, விளையாட்டு  என எல்லாவற்றிலும் களமாடி வரும் அன்புமணி போன்ற ஆல் ரவுண்டர்களுக்கு வகுப்பறை மட்டுமே களம் அல்ல. ஆனாலும் அவரது நாடாளுமன்ற செயல்பாடு மோசமில்லை என்பதனை மேலே தெளிவாக படித்திருந்தால் தெரிந்திருக்கும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தன் பணியினை அவர் சரியாகவே செய்துள்ளார். 

கடந்த 16வது மக்களவையில், 100%  வருகை பதிவேடு வைத்து இருந்த ஆறு பேரில் நான்கு பேர் பாஜகவினர் என்பதையும், அதிகபட்ச விவாதங்களில் கலந்துகொண்ட எம்பிக்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பதையும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அறிவார்களோ, அவர்கள் மாற்றாக கூறும் காங்கிரஸ் கட்சி இதில் இல்லை என்பதை அவர்கள் ஒப்புக்கொள்வார்களோ? என அடுக்கடுக்கான கேள்வியை வைக்கிறார்கள் பாமகவினர். 

அவதூறுகள் மூலம் அன்புமணியை கவிழ்க்க திமுக நினைக்க, அவர்கள் ஒருபடி மேலே சென்று அவர்களின் பிரதமர் வேட்பாளரையே ஆதாரத்துடன் கவிழ்த்துவிட்டார்களே என்ற சோகத்தில், அன்புமணி மீதான அவதூறான விமர்சனங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, பிரச்சாரத்திற்கு புறப்பட்டு விட்டனர். 

ஆதாரம்: 
1.https://www.prsindia.org/mptrack 

2.https://theprint.in/india/governance/just-6-mps-boast-of-100-attendance-in-16th-lok-sabha-four-from-bjp-none-from-congress/193057/ 

- சந்திரலேகா 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani parliament activity compared with rahul gandhi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->