இந்த துறையைப் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள்., மோடிக்கு வைகோ திடீர் கடிதம்!! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி வைகோ எழுதியுள்ள கடிதங்கள் வருமாறு.

அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு,

வணக்கம். 

நலம். தங்கள் நலன் விழைகின்றேன்.

வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதி செய்யப்படுவதால், பாதிக்கப்பட்டு இருக்கின்ற இந்திய ஆயத்த ஆடைகள் தொழில் துறையைப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன். இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலை வாய்ப்புகளை வழங்குகின்ற இரண்டாவது பெரிய துறை, ஆடைகள் நெசவு ஆகும். ஏறத்தாழ 12.90 மில்லியன் (ஒரு கோடியே இருபது இலட்சம்)தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நெசவுத் தொழிலில் வேலைவாய்ப்புகளைப் பெற்று இருக்கின்றனர். இவர்களுள் 65 முதல் 70 விழுக்காட்டினர் பெண்கள். 

மேலும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்ற 80 விழுக்காடு நிறுவனங்கள் சிறு தொழில்கூடங்கள் ஆகும். அவற்றின் ஆண்டு வரவு செலவுக் கணக்கு 1 முதல் 10 கோடி வரையில் ஆகும்.ஆயத்த ஆடைகள் தொழில், இந்தியா முழுவதும் பரவலாக நடைபெற்று வருகின்றது. அவற்றுள் திருப்பூர், தில்லி, நொய்டா, குர்காவ்ன், மும்பை, லூதியானா, ஜெய்பூர், பெங்களூரூ,கொல்கத்தா, சென்னை ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகள் பெருமளவில் வேலை வாய்ப்புகளை வழங்கிக்கொண்டு இருக்கின்றன.

இந்திய ஆயத்த ஆடைகள் தொழில் இப்போது நாட்டின் முதுகு எலும்பாகத் திகழ்கின்றது. இந்தத் தொழிலில் புதிதாகப் பழக வருகின்றவர்கள் இரண்டு மாதப் பயிற்சி பெற்றால், மாதம் 12 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்ட முடியும்.இந்திய ஆயத்த ஆடைகள் நெசவு மற்றும் ஏற்றுமதி, இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கின்றது.ஏற்றுமதி ஆயத்த ஆடைகள் தொழிலில் சீனா அடைந்துள்ள வீழ்ச்சி, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு வளர்ச்சியாக அமைந்து இருக்கின்றது.அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு தடைகளால் நாம் அந்த வளர்ச்சியைப் பெற முடியவில்லை. பின்னல் ஆடைகள், ஆயத்த ஆடைகள் துறையின் வளர்ச்சிக்காக இந்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து இருக்கின்றது.

2015 - 2020 காலகட்டத்திற்கான அயல்நாட்டு வணிகக் கொள்கையின் முதன்மை நோக்கம், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களை இனம் கண்டு, அவற்றின் உற்பத்தியைப் பெருக்குவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றது.
இப்போது அந்தத் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்வதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அரசு அளிக்கின்ற உதவிகளால்தான் இந்தத் துறையில் அயல்நாட்டு நிறுவனங்களின் போட்டியைச் சமாளித்து, தாக்குப்பிடிக்க முடிகின்றது. அரசு உதவிகளை நிறுத்திக்கொள்ளுமானால், இந்திய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ள முடியாமல் போகும்.

தமிழ்நாட்டில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னல் ஆடைகள் வணிகம் இந்திய அரசுக்கு பெருமளவு வருவாய் ஈட்டித் தருகின்றது. தமிழ்நாட்டில் மட்டும் 15 மில்லியன் தொழிலாளர்கள் இந்தத் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற்று இருக்கின்றார்கள்.

இந்த நிலையில், அரசின் உதவிகள் தடைபடுமானால், தமிழகம் பேரிழப்பைச் சந்திக்க நேரிடும். ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னல் ஆடைகள் தொழில் அழிந்து போகும். அதன் விளைவாக பருத்தி விவசாயிகள், நெசவாளர்கள், நுhற்பு ஆலைகள், சாயத் தொழிலாளர்கள், பனியன் தயாரிப்பாளர்கள், தையல் தொழிலாளிகள், பட்டன், ஜிப்புகள், எலாஸ்டிக் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அந்தத் தொழில்களும் முற்றிலும் அழிந்துபோகக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து விடுவார்கள். குறிப்பாக பெண்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.ஏற்கனவே இந்தத் துறையில் ஈடுபட்டு இருக்கின்ற பல்வேறு துணைத் தொழில்களுக்கு புதிதாக ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதால், பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. 

அதனால் வங்கதேச ஆயத்த ஆடைகள் ஊடுருவி வருகின்றன. அந்த நாட்டில் தொழிலாளிகளுக்கான கூலி மிகக் குறைவாக உள்ளது. தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் சட்டங்களும் செயல்படுவது இல்லை. சுற்றுப் புறச் சூழல்களைப் பாதுகாப்பது பற்றி அவர்கள் கவலைப்படுவதும் இல்லை.
இத்தகைய காரணிகளால் அவர்களுடைய ஆயத்த ஆடைகள் உற்பத்திச் செலவு குறைவாக இருக்கின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வங்கதேசத்தின் பின்னல் ஆடைகள் மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி பெற்று இருக்கின்ற வளர்ச்சி ஒரு பட்டியலாக இங்கே தருகின்றோம். 

(July-June – financial year of Bangladesh)
(Million US $)
Year          Woven      Knit    Total
2014-15    81.93        22.32    104.25
2015-16    116.68        35.62    152.30
2016-17    92.36        37.45    129.81
2017-18    207.62        71.06    278.68
2018-19    369.43        129.66    499.09 

இது ஐந்து ஆண்டுகளில், ஐந்து மடங்கு வளர்ச்சி ஆகும்.இதனால் தமிழ்நாட்டில், திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வருகின்ற பெரும்பான்மையான நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.வங்கதேசத்தில் தயாரிக்கப்பட்டது என்ற முத்திரையுடன் இந்தியச் சந்தைகளில் நுழைந்து இருக்கின்ற துணிகள், உண்மையில் அந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை அல்ல. சீனா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வங்கதேசத்தின் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தவை ஆகும்.

எனவே, இந்திய ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னல் ஆடைகள், நெசவுத் தொழில்துறையைப் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

என்றும் அன்புடன்
வைகோ

இவ்வாறு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko wrote letter to modi for textile problem


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->