இவற்றையெல்லாம் நிறைவேற்றுங்கள் 75 மில்லியன் தமிழ் மக்களும் நானும் தங்களுக்கு நன்றி பாராட்டுவோம்!! பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம்!! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடிக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ-எம்.பி  எழுதியுள்ள கடிதம் வருமாறு.

அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு,

வணக்கம்.

நலம். தங்கள் நலன் விழைகின்றேன்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் ஆணையம் வழங்கி இறுதித் தீர்ப்பையும் மீறி, கர்நாடக அரசு, மேகேதாட்டு என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதனால், தமிழகத்தில் காவிரி வடிநிலப் பகுதிகளில் இலட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வு பறிபோகும் நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது. கர்நாடக, மேகேதாட்டு அணையைக் கட்டினால் அதன் பிறகு மேட்டூர் அணைக்குச் சொட்டுத் தண்ணீர் வராது. ஆனால், மேகேதாட்டில் அணை கட்டுவதற்கு நடுவண் அரசின் சுற்றுச் சூழல் துறை அனுமதி அளித்து இருப்பதாக வெளியாகி இருக்கின்ற செய்திகள் தமிழக விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி ஆகும்.

இந்த நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சியாக மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகளை, காவிரிப் படுகையில் நூற்றுக்கணக்கான இடங்களில் தோண்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் இந்திய அரசுக்கு இலட்சக்கணக்கான கோடிகள் ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆனால், காவிரி படுகை பாலைவனம் ஆகிவிடும். மொத்தம் 35 இலட்சம் ஏக்கர் பரப்பில் நெல் விவசாயம் அழிந்துபோகும். தமிழகம் மற்றொரு எத்தியோபியா ஆகிவிடும்.

மேலும் அதிர்ச்சி என்னவென்றால், வேதாந்தா நிறுவனத்திற்கு இந்த உரிமம் வழங்கப்பட்டு இருக்கின்றது. அவர்கள் ஏற்கனவே ஸ்டெர்லைட் தாமிர நச்சு ஆலையை தூத்துக்குடியில் அமைத்து, அந்தப் பகுதியைச் சீரழித்துவிட்டார்கள். இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையை மராட்டிய அரசு வெளியேற்றியது. கோவா, குஜராத் மாநிலங்களில் அமைப்பதற்கு முயற்சித்தார்கள். இரண்டு மாநில அரசுகளும் மறுத்துவிட்டன. ஆனால் தமிழ்நாடு அரசு வேதாந்தா நிறுவனத்தின் கைக் கூலியாகச் செயல்பட்டு, 2018 மே 22 ஆம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

அந்த வேதாந்தா நிறுவனத்திற்கும், இந்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்திற்கும் காவிரி படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் அளிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு திட்டமிட்டு, காவிரிப் படுகை விவசாயத்தை அழிக்க முயற்சிப்பதாகக் கருதுகின்றேன்.
2019 ஜூன் 23 ஆம் நாள், தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தொடங்கி, புதுவை மாநிலம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக இராமேஸ்வரம் வரை இலட்சக்கணக்கான தமிழர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், ஆண்கள், பெண்கள், மாணவர்கள் கைகோர்த்து அணிவகுத்து மனிதச் சங்கிலி அமைத்தனர். இதன் ஒட்டுமொத்த நீளம் 596 கிலோ மிட்டர்.

தமிழர்களின் உள்ளம் எரிமலையாகக் கொதித்து நிற்கின்றது. மத்திய அரசு தன் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறும். இது கல்லின் மேல் எழுத்து.

மேலும் ஒரு பிரச்சினையை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். மத்திய அரசு வகுத்துள்ள அணைகள் பாதுகாப்பு மசோதா, தமிழகத்தைக் கடுமையாகப் பாதிக்கும். ஏனெனில், கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரேதேசம் ஆகிய மாநிலங்கள் முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு ஆகிய நதிகளில் கட்டப்பட்டுள்ள அணைகள் தங்களுக்கே சொந்தமானது என்று உரிமை கொண்டாடும். அதனால், தமிழகம் பாலைவனமாகும். நாங்கள் என்ன பாவம் செய்தோம்?
எனவே, காவிரியின் குறுக்கே கர்நாடாகா அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும், அணைகள் பாதுகாப்பு மசோதாவை திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

அடுத்து, தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில், அம்பரப்பர் மலைக்குன்றை உடைத்து நொறுக்கி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கின்றது. இலட்சக்கணக்கான டன் கடினப் பாறைகளை உடைக்கும்போது ஏற்படும் அதிர்வுகளால், கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணையும், 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியப் பொறியாளர் கர்னல் பென்னிக் குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையும் உடைந்து நொறுங்கும்.

இந்த நியூட்ரினோ ஆய்வகம், தமிழ்நாட்டுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். சுற்றுச் சூழல் அறிஞர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கருத்துகளைப் பெற்று, அதன் அடிப்படையில் இந்திய அரசு நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

2015 மார்ச் 22 ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தடை ஆணை பெற்றுள்ளேன். பூவுலகு நண்பர்கள் என்ற சுற்றுச் சூழல் பாதுகாப்புத் தொண்டு நிறுவனம், தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வழக்குத் தொடுத்து, தடை ஆணை பெற்றுள்ளது.

நான் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் தமிழ்நாட்டின் எதிர்காலம் அழிக்கப்பட்டுவிடக்கூடாது.
எனவே மேற்கண்ட என்னுடைய கோரிக்கைகளை, கனிவுடன் பரிசீலிக்குமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
அதற்காக நானும் 75 மில்லியன் தமிழ் மக்களும் தங்களுக்கு நன்றி பாராட்டுவோம்.

என்றும் அன்புடன்
வைகோ.

இவ்வாறு வைகோ எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko wrote letter to modi for cauvery water issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->