இந்த பிரிவுகளை மத்திய அரசு திருத்தினால்., அதன் விளைவுகள் விபரீதம் ஆகிவிடும்!! வைகோ எச்சரிக்கை!! - Seithipunal
Seithipunal


மதிமுக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திககுறிப்பில் கூறியிருப்பதாவது, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, எம்.பி., அவர்கள்,  பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, இன்று (05.08.2019) நாடாளுமன்ற  வளாகத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் 11.20 வரை சந்தித்தார். 

பிரதமருக்கு, காஞ்சிப் பட்டு ஆடை அணிவித்தார். 

தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள திருக்குறள், அருட்தந்தை ஜி.யு. போப், அருட்தந்தை ட்ரூ, அருட்தந்தை ஜான் லாசரஸ் ஆகிய மூவரின் மொழிபெயர்ப்பு நூலைத் தந்தார். 

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

மேலும் வைகோ அவர்கள், பிரதமரிடம் கோரிக்கை மனு வழங்கினார். அதில் அவர் முன்வைத்துள்ள கருத்துகள்,

இந்தியாவில் தயாராகும் ஆயத்த ஆடைகள், பின்னல் ஆடைத் தொழிலைக் காக்க வேண்டும்;

நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும்;

அணை பாதுகாப்பு மசோதா கூடாது;

கூடங்குளத்தில் அணுக் கழிவுகளைக் கொட்டக்கூடாது;

சோழ வள நாட்டைப் பாலைவனம் ஆக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் கொடுத்தார். அவற்றால் விளையும் விபரீதங்களை, ஆபத்துகளை வைகோ எடுத்துக் கூறினார். 

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள் விவசாயிகளுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்பதைக் கூறினார்

கர்நாடகத்தில் மேகே தாட்டு அணை கட்டினால், அதன்பிறகு தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்காது. தமிழகம் பாலைவனம் ஆகிவிடும். 

இதன் விளைவுகள் கேடாக முடியும். என்னைத் தவறாக நினைக்காதீர்கள். இந்தியாவில் நாம் ஏன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எதிர்காலத் தமிழ் இளைஞர்களுக்கு ஏற்படும். எனவே மேகேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும். ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

அணை பாதுகாப்பு மசோதாவால், இந்தியாவில் பாதிக்கப்படும் மாநிலம் தமிழகம்தான். 

அந்தந்த மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள அணைகளின் அதிகாரம் அந்தந்த மாநிலங்களுக்கே சொந்தம் என்றால், தமிழ்நாட்டடில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்று கேட்கும் நிலை வரும்.

2010 டிசம்பர் 5 ஆம் தேதி அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைச் சந்தித்து, அணை பாதுகாப்பு மசோதாவை நீங்கள் நிறைவேற்றினால், சோவியத் ரஷ்யா போல இந்தியா தனித்தனி நாடுகள் ஆகும் நிலைமை எற்படும் என்று என் கவலையைத் தெரிவித்தேன்.

அவர் என்னுடைய கவலையை ஏற்றுக்கொண்டு, அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைத்தார். இன்று உங்களிடமும் அதே கருத்தை வலியுறுத்துகின்றேன். இதே நிலைமை நீடித்தால், இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகின்றபோது, இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்காது. வரப்போகின்ற ஆபத்தைச் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை என்பதால் இதைக் கூறுகின்றேன்.

காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தமட்டில் இந்திய அரசியல் சட்டம் 370, 35ஏ பிரிவுகளை மத்திய அரசு திருத்தினால் அதன் விளைவுகள் விபரீதம் ஆகிவிடும். காஷ்மீர் பிரச்சினை, கொசாவா, கிழக்கு தைமூர், தெற்கு சூடான் போல ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டுக்கு உள்ளாக நேரிடும்.

வைகோவின் கருத்துகளை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்  பொறுமையாகவும் கவனமாகவும் கேட்டார்.

ஆயத்த ஆடைகள், பின்னல் ஆடைகள் தொழில் பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார் மதிமுக தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko meet with modi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->