'காங்கிரஸ் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான ராஜேஷ் குமாரின் வெற்றி செல்லாது'; தேர்தல் ஆணையத்தில் பரப்பரப்பு புகார் அளித்துள்ள தவெக வேட்பாளர்..!
TVK candidate lodges a complaint with the Election Commission challenging the election of Congress MLA and Minister Rajesh Kumar
தமிழக சட்டமன்ற தேர்தலில், கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராஜேஷ்குமார் 66 ஆயிரத்து 434 வாக்குகளும், தவெக வேட்பாளர் சபின் 65 ஆயிரத்து 123 வாக்குகளும் பெற்றனர். இதில், ஆயிரத்து 316 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜேஷ் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமாரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு சபின் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதன்படி, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வாக்கு எண்ணிக்கையின் போது, தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் பெரும் முரண்பாடுகள் இருந்ததாகவும், சுமார் 04 ஆயிரத்து 500 தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில், வெறும் 02 ஆயிரத்து 500 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் அக்கடித்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அப்போதே முறையிட்டதாகவும், ஆனால் இறுதி முடிவுக்கு முன்னதாக சரி செய்யப்படும் என அளிக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டிலும் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன எனவும் அவர் குற்றம்சாட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது, ஒவ்வொரு சுற்றின் முடிவுகளையம் தனித்தனியாக அறிவிக்காமல், பல சுற்றுகளை ஒன்றிணைத்து ஒட்டுமொத்தமாக அறிவித்தது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே அங்கு மறு வாக்கு எண்ணிக்கையோ, மறுத்தேர்தலோ நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
தற்போது தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியில் உள்ள நிலையில், ரஜேஷ்குமாருக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தவெக வேட்பாளரின் இந்த குற்றச்சாட்டு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
TVK candidate lodges a complaint with the Election Commission challenging the election of Congress MLA and Minister Rajesh Kumar