திடீர் திடீர் அறிவிப்புகள்.. அலட்சியத்தில் அதிகாரிகள்... மக்களின் நிலையை எண்ணி கொந்தளிக்கும் டிடிவி..!! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த அறிக்கையில், எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் முதலமைச்சர் பழனிசாமியின் மனதில் தோன்றியதை எல்லாம் திடீரென அறிவிப்புகளாக வெளியிடுவதால் கொரோனா நோய் தொற்றை ஆட்சியாளர்களே அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிடுவார்களோ என்ற பயம் தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. 

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று இல்லாமல் இருந்த புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நோய் தற்போது பரவியிருக்கிறது. கொரோனா நோய் தொற்று சமூகப்பரவல் எனும் 3வது நிலைக்கு போய்விட்டதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நான்கைந்து நாட்களுக்கு முன்பே பேட்டி கொடுத்தார். ஆனால் தமிழக அரசு சார்பில் அது பற்றிய எந்தவிதமான முறையான அறிவிப்போ, பொதுமக்களுக்கு எச்சரிக்கையோ விடுக்கப்படவில்லை. 

மாவட்டங்களில் உள்ளூர் நிர்வாகங்கள் அவரவர் நினைத்தபடி செயல்பட்டுக்கொண்டிருக்க, மாநகராட்சிகள் தனி பாதையில் பயணிக்க, எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க வேண்டிய தலைமைச்செயலகமோ ‘எடுத்தோம், கவிழ்த்தோம்’ என முடிவுகளை எடுக்கும் ‘நவீன துக்ளக்’ கூடாரமாக மாறி நிற்பது மக்களிடம் கொரோனாவைவிட பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏப்ரல் 26 ஆம் தேதியில் இருந்து 29 ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு' என்று நேற்று முன்தினம் பிற்பகலில், அதிரிபுதிரியாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். நேற்று வெளியான பத்திரிகை பேட்டியில் இந்த முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தலைமைச்செயலாளர் தெரிவித்திருந்தார். திடீர்,திடீரென வெளியான இத்தகைய அறிவிப்புகளால் பதற்றமடைந்த மக்கள், அதுவரை கடைபிடித்து வந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு கடைகளிலும், சந்தைகளிலும் கூட வேண்டிய நிர்பந்தத்தை தமிழக அரசு ஏற்படுத்தியது. 

கடைகளில் விற்பனை நேரம் நீட்டிக்கப்படும் என்ற அறிவிப்பைக் கூட மிகத்தாமதமாக வெளியிட்டு அரசு நிர்வாகம் எந்தளவுக்கு குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறது என்று ஆட்சியாளர்கள் காண்பித்தார்கள். அதிலும் தமிழக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஏறத்தாழ நான்கில் ஒரு பங்கு பேர் இருக்கிற தலைநகர் சென்னையில் நிலைமை மோசமாக இருந்தது. கோயம்பேடு சந்தையில் மட்டும் நேற்று பல்லாயிரக் கணக்கானோர் கூடினர். முழஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிற மாநகராட்சி பகுதிகளில் உள்ள மளிகை மற்றும் காய்கறி கடைகளிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக கூடிய காட்சிகள் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

ஏற்கனவே தேசிய அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட பெருநகரங்களின் பட்டியலில் உள்ள சென்னையில், ஆட்சியாளர்களே கொரோனாவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் சென்று விடுவார்களோ என்ற பீதி இக்காட்சிகளைப் பார்த்த அனைவரிடமும் ஏற்பட்டிருக்கிறது. கோயம்பேடு மட்டுமின்றி, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் இருக்கிற சந்தைகளில் தனிமனித விலகல் காற்றில் பறக்கவிடப்பட்டதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாதது பெரும் கவலையைத் தந்துள்ளது. 

மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப்பணியாளர்கள், ஊடகத்துறையினர் என பலரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில், இது போன்று சிறுபிள்ளைத்தனமாக தவறுக்கு மேல் தவறுகளைச் செய்யாமல் அரசு நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். முதலமைச்சரும், அவரது அமைச்சர்களும்தான் இப்படி இருக்கிறார்கள் என்றால் அனுபவம் வாய்ந்த ஆட்சிப்பணி அதிகாரிகளாவது அவர்களுக்கு புரிகிற வகையில் எடுத்துக்கூறி சரியான நடவடிக்கைகளை எடுக்கக்கூடாதா என்ற கேள்வி மக்களிடம் எழுந்திருக்கிறது. இனியாவது ஆட்சியாளர்களும், ஆட்சிப்பணி அதிகாரிகளும் இதனை மனதில் கொண்டு, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV dinakaran report about corona virus amid


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->