தமிழக முதல்வர் பழனிசாமிக்கு சரமாரியான கேள்விகளை வைத்த முக ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்ட திமுகவின் 'தமிழகம் மீட்போம்' கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு பேசியதாவது, “கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தை வைத்து, அதனை மக்களுக்கு விதைத்துக் கோட்டையைப் பிடித்துவிடலாம் என்று எடப்பாடி கும்பல் பேராசையோடு காத்திருக்கிறது. அவர்களது அந்த ஆசை நிறைவேறாமல் தடுக்க வேண்டியது ஒன்றே கட்சித் தொண்டனின் பணி என்பதை நீங்கள் யாரும் மறந்துவிடாதீர்கள்.

இன்றைக்கு சிலர் ஆன்மிகத்தைக் காரணம் காட்டி திமுகவை வீழ்த்தலாம் என்று நினைக்கிறார்கள். மக்களுக்குச் சேவை ஆற்றுவதுதான் மகத்தான ஆன்மிகம் என்று சுவாமி விவேகானந்தர், இதே ராமேஸ்வரம் கோயிலில் 1897ஆம் ஆண்டு பேசும்போது சொன்னார். மனத்தூய்மை, பிறருக்கு நன்மை செய்வது - இதுவே எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகள், பலவீனமானவர்கள், நோயுற்றவர்களைக் காப்பவனே உண்மையில் இறைவனை வழிபடுகிறவன் என்று சொன்னார் அவர்.

இங்கே சிலர் வெறுமனே நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாம்தான் மக்களுக்கு நன்மைகள் செய்து கொண்டு இருக்கிறோம். இதைத்தான் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அண்ணா. ஏழைகள் சிரிக்க உருவாக்கப்பட்ட கட்சிதான் திமுக.

ஏழைகள் சிரிக்க, ஒடுக்கப்பட்டோர் உயர்வு பெற, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏற்றம் பெற, பட்டியலின மக்கள் பதவிகள் பெற, சிறுபான்மையின மக்கள் சிறப்பு பெற நடத்தப்பட்ட ஆட்சிதான் திமுக ஆட்சி.

தினமும் ஊர் ஊராகப் போய் அரசாங்க விழாக்களில் கலந்துகொண்டு அரசியல் பேசி வருகிறார் பழனிசாமி. அவருக்கு அரசுக்கும் கட்சிக்குமே வித்தியாசம் தெரியவில்லை. தன்னை ஏதோ மகா யோக்கியரைப் போல எடப்பாடி பழனிசாமி காட்டிக் கொண்டு வருகிறார். நான் ஒரு விவசாயி, எனக்கு விவசாயத்தைத் தவிர வேறு வருமானம் கிடையாது என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார் பழனிசாமி. இதனை நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள் என்பது வேறு விஷயம்.

அதிமுகவினரே இதைக் கேட்டால் சிரிப்பார்கள். கொள்ளையடிப்பது எப்படி என்று புத்தகம் எழுதுவதற்குத் தகுதி வாய்ந்த ஒரு ஆள் எடப்பாடி பழனிசாமிதான். ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசாங்கம் எது என்று கேட்டால், அது எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம்தான்.

இவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டுவிட்டது. அது முறையாக நடந்திருந்தால் பழனிசாமி, இப்போது தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு மத்திய சிறையில் இருந்திருப்பார். உச்ச நீதிமன்றத்துக்குப் போய் தடை வாங்கினார் பழனிசாமி. அதனால் இப்போது வெளியில் நடமாடிக் கொண்டு இருக்கிறார். சுமார் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை தனது உறவினர்கள், பினாமிகளுக்குக் கொடுத்தவர் பழனிசாமி.

“பொது ஊழியர் என்ற முறையில் முதல்வர் பழனிசாமி மீதும், இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஊழல் தடுப்புப் பிரிவுக்குப் புகார் மனு அனுப்பினார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பிறகுதான் உயர்நீதிமன்றத்துக்குப் போனோம்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். ஒரு முதல்வர் மீது குற்றச்சாட்டு வைக்கும்போது அது சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் அரசுத் தரப்பு நீதிமன்றத்துக்கு ஏன் தரவில்லை என்று நீதிபதி கேட்டாரா இல்லையா?

எடப்பாடி பழனிசாமியைக் காப்பாற்றும் நோக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை செயல்படுவது நீதிமன்ற அவமதிப்பு என்று நீதிபதி கண்டித்தாரா இல்லையா? 7 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடிக்கு டெண்டர்கள் இப்படி விடப்பட்டுள்ளன என்று நீதிபதி சொன்னாரா இல்லையா?

''பொது வாழ்க்கைக்கு வரும்போது அனைத்து மக்களிடமும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். அதுவும் உயர் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த நேர்மையைக் கண்டிப்பாக கடைப்பிடிக்காமல் ஊழலில் சிக்கினால் மக்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்" என்று பழனிசாமி வழக்கில் நீதிபதி கருத்து சொன்னாரா இல்லையா?

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை நேர்மையாக நடந்து கொள்ளாது என்று சொல்லி சி.பி.ஐ.க்கு ஆவணங்களை நீதிபதி ஒப்படைக்கச் சொன்னாரா இல்லையா? இதை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று பழனிசாமி நினைக்கிறாரா? அப்போது டெல்லி சென்ற பழனிசாமியிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டபோது என்ன சொன்னார்?

நான் தவறு செய்யவில்லை, உறவினர்களுக்கு டெண்டர் தரவில்லை என்று சொல்லவில்லை. மாறாக, 'யார் மீதுதான் லஞ்சப் புகார் இல்லை' என்று நிருபர்களிடம் கேட்ட யோக்கியவான்தான் இந்த பழனிசாமி.

பழனிசாமி மீதான டெண்டர் வழக்கை விசாரித்து மூன்றே மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மூன்று மாதத்தில் பதவி போய்விடுமே என்பதற்காக உடனே உச்ச நீதிமன்றம் போய் தடை ஆணை வாங்கியவர்தான் இந்த பழனிசாமி.

இன்று நிருபர்கள் முன்னால் கர்ஜிக்கும் பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் போய் பதுங்கியது ஏன்? 'எந்த விசாரணைக்கும் நான் தயார்' என்று ஏன் சொல்லவில்லை? எந்தத் தவறும் நடக்கவில்லை என்பதை நிரூபித்துவிட்டு மீண்டும் முதல்வர் ஆவேன் என்று ஏன் அவரால் சொல்ல முடியவில்லை? அவரால் சொல்ல முடியாது.

ஏனென்றால் தனது உறவினர்கள் மூலமாக டெண்டர்களை எடுத்துப் பணத்தைச் சுருட்டும் டெண்டர் பழனிசாமி அவர். அவர் எடப்பாடி பழனிசாமி அல்ல, டெண்டர் பழனிசாமி. இந்த ஆட்சியில் பல்வேறு டெண்டர்களை எடுத்து நடத்தி வரும் சுப்பிரமணியம், ராமலிங்கம் ஆகியோர் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி சொல்வாரா? அவர்களது குடும்பத்துக்கும் பழனிசாமி குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை பழனிசாமி பகிரங்கமாகச் சொல்லத் தயாரா?

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மோடி அரசு செல்லாது என்று அறிவித்தபோது வருமான வரித்துறையினரால் ஈரோட்டில் ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி உரிமையாளர் ராமலிங்கம் என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. யார் இந்த ராமலிங்கம் என்று பழனிசாமி சொல்வாரா?

தமிழக அரசின் பல்வேறு டெண்டர்களை எடுப்பவர் பெருந்துறை சுப்பிரமணியம். அவருக்கும் பழனிசாமிக்கும் என்ன உறவு முறை என்பதை பழனிசாமி சொல்வரா? சுப்பிரமணியத்தின் ஒரு மகளை, தனது மகனுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார் பழனிசாமி. சுப்பிரமணியத்தின் இன்னொரு மகளைத் திருமணம் செய்துள்ளார் ராமலிங்கத்தின் மகன்.

இந்த சுப்பிரமணியமும் ராமலிங்கமும்தான் டெண்டர்களை எடுத்து பழனிசாமிக்கு பண சப்ளை செய்து கொண்டு வருகிறார்கள். இது யாருக்குமே தெரியாது என்பது போல யோக்கியர் வேஷம் போட்டுக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. அரசாங்க கஜானாவை சம்பந்தி, சம்பந்திக்கு சம்பந்தி என்று முறைப்படி பங்கு வைத்தவர்தான் பழனிசாமி.

இந்த ராமலிங்கத்தின் வீட்டில்தான் கர்நாடக வருமான வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினார்கள். இதற்குப் பிறகுதான், பாஜகவின் பாதம் தாங்க ஆரம்பித்தார் பழனிசாமி. அதன்பிறகுதான் சசிகலாவுக்குத் துரோகம் செய்ய ஆரம்பித்தார் பழனிசாமி. அதன் பிறகுதான் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சிக்குள் இணைக்க சம்மதித்தார் பழனிசாமி. அதன் பிறகு தான் அதிமுகவை, பாஜகவின் கிளைக் கழகமாக ஆக்கினார் பழனிசாமி.

அதாவது எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை அடமானம் வைத்தார். ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட கட்சியைக் குத்தகைக்கு விட்டார். திருட்டுத்தனம் செய்து, திருட்டுத் தனமாகப் பிடிபட்டவர், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள லஞ்சம் கொடுப்பதைப் போல அதிமுகவைத் தூக்கிக் கொடுத்துவிட்டார். இதுதான் பழனிசாமியின் துரோக வரலாறு.

இந்த துரோகப் பழனிசாமியை கோட்டையை விட்டு துரத்துவதற்குத் தமிழக மக்கள் சபதம் எடுத்துவிட்டார்கள். அதனுடைய அடையாளம்தான் திமுகத்தின் முன்னணி தளகர்த்தர்கள் அனைவரும் தேர்தல் பிரச்சாரம் செய்யச் செல்லும் இடமெல்லாம் மக்கள் தேனீக்களைப் போலக் கூடுகிறார்கள்.

இதைப் பார்த்து பயத்தில் நடுங்கிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. அந்த பயத்தில் ஊர் ஊராகப் போய் உளறிக் கொண்டு இருக்கிறார். பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடே போராடிக் கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில விவசாயிகளும் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு விவசாயி மட்டும் அந்தச் சட்டங்களை ஆதரித்துப் பேசிக் கொண்டு இருக்கிறார். அவர்தான் எடப்பாடி பழனிசாமி.

பாஜக ஆளும் மாநிலத்தின் முதல்வர் கூட பழனிசாமி அளவுக்கு அந்தச் சட்டங்களை ஆதரிக்கவில்லை. மூன்று வேளாண் சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர் போல உளறிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. அந்தச் சட்டத்தில் என்ன குறைபாடு இருக்கிறது? என்று நிருபர்களைப் பார்த்துக் கேட்கிறார். நான் விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன் என்கிறார்.

அவருக்கு நான் சொல்வது, முதல்வர் நீங்கள் டெல்லி செல்லுங்கள். அங்குப் போராடிக் கொண்டு இருக்கும் விவசாயிகளிடம் உங்கள் விளக்கத்தைச் சொல்லுங்கள். பிரதமர் மோடிக்கே நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் பழனிசாமியை அனுப்புங்கள் என்று சொல்லிக் கொள்கிறேன். அந்த அளவுக்கு வேளாண் சட்டங்களைக் கரைத்துக் குடித்துவிட்டார் பழனிசாமி. குறைந்த பட்ச ஆதார விலை என்பதுதான் விவசாயிகள் எதிர்பார்ப்பது. அது சட்டத்தில் இருக்கிறதா? இல்லை.

குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து வாங்கித்தர பழனிசாமியால் முடியுமா? விவசாயிகளோடு போடப்படும் ஒப்பந்தம் மீறப்பட்டால் நீதிமன்றம் செல்ல முடியுமா? முடியாது. ஒப்பந்தம் மீறப்பட்டால் வழக்குப் போடலாம் என்று சட்டத்தில் சேர்க்க பழனிசாமியால் முடியுமா? முக்கியமான உணவுப்பொருள்கள் அனைத்தையும் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

அதனால் யாரும் எந்தப் பொருளையும் பதுக்கலாம் என்பதுதான் இன்றைய நிலைமை! அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் உணவுப் பொருள்களை மீண்டும் சேர்க்க வைக்க பழனிசாமியால் முடியுமா? புதிய மின்சாரச் சட்டத்தால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்பது விவசாயிகளின் பயம். இலவச மின்சாரம் ரத்து ஆகாது என்று பழனிசாமியால் சொல்ல முடியுமா? இவை எதற்காவது பழனிசாமியால் உத்தரவாதம் தர முடியுமா? இது எதுவும் பழனிசாமியால் முடியாது.

பிறகு எதற்காக இந்தச் சட்டத்தை ஆதரிக்க வேண்டும்? அவர் தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விவசாயிகளை அடமானம் வைக்கிறார். கட்சியை அடமானம் வைக்கிறார். ஆட்சியை அடமானம் வைக்கிறார். இவருக்கு இதனால் எந்த இழப்பும் இல்லை. ஆனால் இழப்பு யாருக்கு? விவசாயிகளுக்கு அல்லவா. தொழிலாளர்களுக்கு அல்லவா. தமிழக மக்களுக்கு அல்லவா?

ஒரு தனிமனிதனின் சுயநலத்துக்காக நாட்டை அடமானம் வைப்பதை அனுமதிக்கலாமா? கூடாது என்பதற்காகத்தான் நாம் கூடியிருக்கிறோம். தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்கிற விவசாயியால் இந்த நாட்டு விவசாயம் அடைந்த பயன் என்ன? அதனை அவரால் சொல்ல முடியுமா? குற்றம் காண முடியாத அளவுக்கு அப்பழுக்கற்ற அரசாங்கமா இது? நான் இதுவரை கேட்ட எந்தக் கேள்விக்காவது முதல்வரோ, அமைச்சர்களோ பதில் சொல்லி இருக்கிறார்களா?

எடப்பாடி தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை மறுத்தாரா இதுவரை? ஓ.பன்னீர்செல்வம் மறுத்தாரா? வேலுமணி, தங்கமணி ஆகிய ஊழல் மணிகள் மறுத்தார்களா? விஜயபாஸ்கர் மறுத்தாரா? பாரத் நெட் டெண்டர் உதயகுமார் மறுத்தாரா? ராஜேந்திர பாலாஜி மறுத்தாரா? இந்த ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகள் குறித்து மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்ட புகார்கள் இதுவரை மறுக்கப்பட்டதா? இல்லை.

பிறகு எப்படி பிரஸ் மீட் நடத்துகிறீர்கள்? ஊழல் கறை படிந்த முகத்தை உங்களால் எப்படி ஊர் ஊராகக் கொண்டு போய் காட்ட முடிகிறது? அதிமுகவை பாஜகவுக்கு குத்தகைக்கு விட்ட பிறகு எம்ஜிஆர் நினைவிடத்துக்கும், ஜெயலலிதா நினைவிடத்துக்கும் போய் உங்களால் எப்படி மலர் வளையம் வைக்க முடிகிறது?

அண்ணா சொன்னது அவர் காலத்தோடு முடிந்துவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி கொடுத்த பிறகும், உங்கள் கட்சிக்கு எதற்கு அண்ணா பெயர்? எதற்காக கொடியில் அண்ணா படம்?

ஒரு கொள்ளைக் கும்பல், அதிமுகவை வளைத்துக் கொண்டு விட்டது. தங்களது தலையைக் காப்பாற்றிக் கொள்ள அதிமுகவை அடகு வைத்துவிட்டது என்பதை உண்மையான அதிமுக தொண்டர்கள் உணர்ந்தாக வேண்டும்.

அதிமுகவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு அவமானச் சின்னம் யார் என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான். அவரது ஊழலைப் பற்றிக் கேள்வி எழுப்பினால் அதற்குப் பதில் சொல்ல திராணி இல்லாத பழனிசாமி, 2-ஜியைப் பற்றிப் பேசுகிறார்.

பழனிசாமி ஏன் இப்படி உளறுகிறார் என்றால், தான் இந்த நாட்டின் முதல்வர் என்பதைக் காட்டிக் கொள்கிறார். அதனால் எதையாவது உளறுகிறார். தனது உளறல்கள் மூலமாக நானும் ஊருக்குள் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்ளத் துடிக்கிறார்.

ஒரு முதல்வர் என்றால் தனது திட்டங்களின் மூலமாக பெயர் பெற வேண்டும். செயல்களின் மூலமாக பாராட்டைப் பெற வேண்டும். ஒரு முதல்வர் என்றால் அவருக்குத் தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். ஒரு கனவு இருக்க வேண்டும். சிந்தனைத் திறன் இருக்க வேண்டும். மக்கள் மீது பற்றும் அன்பும் இருக்க வேண்டும். புதியதை உருவாக்க வேண்டும்.

பழனிசாமி என்றால் எம்ஜிஆருக்கு துரோகம் செய்தவர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர். நம்பிக்கைத் துரோகத்தின் அடையாளம். இந்த அதிமுக காலத்தில்தான் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்துக்குள் வருமான வரிச் சோதனை நடந்தது. இவர்கள் ஆட்சிக்காலத்தில்தான் தலைமைச் செயலாளரே சிக்கினார். டிஜிபியே சிக்கினார். அதிமுக கேபினெட்டில் இருந்த அனைவரும் சிக்கினார்கள் என்பது தான் வரலாற்றில் பொறிக்கப்படும்.

இவை எல்லாம் பழனிசாமிக்கு வேண்டுமானால் அவமானமாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றுக்குக் களங்கம், அவமானம். இந்த அவமானத்தை களங்கத்தைத் துடைக்கும் தேர்தல்தான் வருகிற சட்டப்பேரவைத் தேர்தல். தமிழகத்துக்கு இவர்களால் ஏற்பட்ட அவமானம் துடைப்போம், தமிழகம் தலைநிமிர திமுக ஆட்சியை அமைப்போம்'' என்று முக ஸ்டாலின் அந்த கூட்டத்தில் உரையாற்றினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin ramanadhapuram meetting speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->