நம்பிக்கை இழந்து போன ஸ்டாலின்! சிறப்பான ஒருவரை எதிர்பார்க்கும் திமுக!  - Seithipunal
Seithipunal


"தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்களையும், வாக்குப்பதிவு மையங்களையும் முழுமையாக பாதுகாத்திட, மாநில சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரி ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கோவையிலிருந்து 50 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கும், 20 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் அதிகாரிகள் மற்றும் பல மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் இருப்பதை தேர்தல் ஆணையம் சம்பந்தமே இல்லாததைப்போல கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

போட்டியிடும் வேட்பாளர் அல்லது அவருடைய முகவருக்குத் தெரிவிக்காமல் ஒரு தொகுதியிலிருந்து இன்னொரு தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றக் கூடாது என்று தெளிவான தேர்தல் ஆணைய விதிமுறைகள் இருந்தும்- அதை அப்பட்டமாக மீறி காலில் போட்டு மிதிக்கும் வகையில், தேர்தல் அதிகாரிகள் ஏதோ சில வேட்பாளர்களின் ஏஜென்ட்டுகள் போல, நடந்து கொள்கிறார்கள். அதைத் தட்டிக் கேட்க வேண்டிய தலைமைத் தேர்தல் அதிகாரியோ தேர்தல் அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சப்பைக் கட்டுக் கட்டி பேட்டிகளை வெளியிடுவதில் மட்டுமே அக்கறை காட்டுபவராக இருக்கிறார்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டது குறித்து செய்தி வெளியானவுடன் “மறு வாக்குப் பதிவிற்காக எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம்” என்று கூறும் தலைமைத் தேர்தல் அதிகாரி, “எத்தனை இடங்களில் மறு வாக்குப்பதிவு என்றால் அதைத் தேர்தல் ஆணையம் தீர்மானிக்கும்” என்று நழுவுகிறார். தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் மறு வாக்குப் பதிவு கோரி கொடுத்த தி.மு.க.வின் மனுவிற்கு இதுவரை எவ்வித தீர்மானமான உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை கோவையில் இருந்து தேனிக்கு மாற்றியது ஏன்?

மறு வாக்குப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் அதன் பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்குப் பதில் உத்தரவே வராத நிலையில் ரகசியமாக வாக்குப் பதிவு இயந்திரங்களை தேனிக்கு கொண்டு சென்றது ஏன்?

வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் குறித்து தி.மு.க. தரப்பில் புகார் கொடுக்கப்பட்டவுடன் இன்று பேட்டியளித்துள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி “தவறு செய்த 46 வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று புதிய “விளக்கம்” கொடுக்கிறார். 46 வாக்குச்சாவடி அதிகாரிகள் தவறு செய்திருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிந்தவுடனோ அல்லது இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனிக்கு மாற்றப்படும் வரையிலோ தலைமைத் தேர்தல் அதிகாரி வெளிப்படையாக அறிவிக்காதது ஏன்?

துணை முதலமைச்சரின் மகன் தேனி தொகுதியில் போட்டியிடுவதால், குறிப்பாக வாரணாசியில் பிரதமரைச் சந்தித்த பிறகு அ.தி.மு.க அரசுக்கும் - தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தைகள் என்ன?

எந்த அடிப்படையில் 46 வாக்குச்சாவடி அதிகாரிகள் தவறு செய்திருக்கிறார்கள் என்று அறிக்கை கொடுத்தார்?

“மறு வாக்குப் பதிவுக்கு பரிந்துரைத்த இடங்களை விட அதிக இடங்களில் கூட தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம்” என்று தலைமை தேர்தல் அதிகாரி இப்போது கூற வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?

தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரைக்காமல் தேர்தல் ஆணையமே நேரடியாகத் தலையிட்டு இதுவரை மறு வாக்குப் பதிவு நடத்த உத்தரவிட்டுள்ள இடங்கள் எத்தனை?

ஆகவே தலைமைத் தேர்தல் அதிகாரியின் நேற்றைய பேட்டியும், இன்றைய பேட்டியும் “புதிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம்” தேர்தலில் புதிதாக ஒரு “முறைகேட்டிற்கு” அடித்தளம் அமைத்துக் கொடுப்பது போலவே அமைந்துள்ளது. இதை எந்த ஒரு ஜனநாயகத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சென்னை குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய அந்த பழைய ஞாபகத்தில், சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு வழி காட்ட வேண்டிய இந்த பொறுப்பிலும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி திரு சத்யபிரதா சாஹூ செயல்படுகிறாரோ என்ற வலுவான சந்தேகத்தை “அர்த்த ராத்திரியில்” வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றமும், அதைத் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாக அவர் அளிக்கும் பேட்டிகளும் உறுதிபடுத்துகிறது. இவர் மீது உள்ள நம்பிக்கையை திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழக எதிர்க்கட்சிகளும் முற்றிலுமாக இழந்து விட்டன.

ஆகவே, தேர்தல் ஜனநாயகத்தில் விபரீத விளையாட்டுக்களை நடத்திட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு வாய்ப்புகள் ஏற்பட்டுவிடாமல் தடுக்க தலைமைத் தேர்தல் ஆணையர் உடனடியாக தலையிட்டு தேனிக்கு மாற்றப்பட்ட 50 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் ஈரோட்டுக்கு அனுப்பப்பட்ட 20 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக உடனடியாக திரும்பப் பெறப்பட உத்தரவிட வேண்டும். இதற்கு காரணமான அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வேட்பாளர் அல்லது அவர்களின் முகவர்களுக்கு தெரிவிக்காமல் எந்த வாக்குப் பதிவு இயந்திரங்களையும் இனி எந்தத் தொகுதிக்கும் மாற்றக் கூடாது என்றும் அறிவுறுத்த வேண்டும்.

இதுவரை மறு வாக்குப் பதிவிற்கு தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ள விவரங்கள் குறித்தும், அவர் கூறும் 46 வாக்குச்சாவடிகளில் தவறு என்ன என்பது பற்றிய விவரங்கள் அனைத்தையும் வெளியிட வேண்டும். ஆளுங்கட்சியின் தலையீடுகளின் காரணமாக, தமிழகத்தில் நிகழும் முறைகேடுகளுக்கு இடையே தலைமைத் தேர்தல் அதிகாரி தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு மிகவும் தடுமாறி நிற்கிறார் என்பது நன்கு தெரிகிறது. ஆகவே, எஞ்சியிருக்கும் நாட்களுக்கு உடனடியாக “மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி” ஒருவரை நியமித்து, தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு இயந்திரங்களையும், வாக்குப் பதிவு மையங்களையும் முழுமையான அளவிற்கு பாதுகாத்திட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin need special officer for election missions safety


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->