தமிழ்நாட்டில் ஹைடிரோகார்பனா, எச்சரிக்கும் ஸ்டாலின்! தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


"வறட்சி, குடிநீர்ப் பஞ்சம் என்று தமிழகம் தத்தளித்துக்கும் நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி தந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"விழுப்புரம், புதுவை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனம், அமெரிக்க நிறுவனம், ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய பா.ஜ.க அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி டெல்டா பகுதியில் 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு இந்த நிறுவனங்களுடன் அக்டோபர் 2018-ல் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி வேதாந்தா நிறுவனத்திற்கு 274 கிணறுகளும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு 67 கிணறுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்போதே வேளாண்மைக்கு நேரும் பெரும் பாதிப்பை உணர்ந்து இதற்கு தமிழக விவசாயிகளின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

மேற்கண்ட கிணறுகள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியில் உள்ள காரைக்கால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களிலும் ஒதுக்கப்பட்டு - சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றுவதாக வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.

தமிழக விவாசாயிகளின் கருத்துக்களை முன்கூட்டியே கேட்காமல் அலட்சியப்படுத்திவிட்டு, வேளாண்மைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை உருவாக்கும் இந்தத் திட்டங்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு கொடுத்த அனுமதியை அனைத்து தரப்பு மக்களும் எதிர்த்தனர். ஆனால், இந்த அழிவுத் திட்டங்களை எதிர்க்கத் துளியும் துணிச்சல் இல்லாத “எடுபிடி அ.தி.மு.க அரசு” தொடர்ந்து தமிழக விவசாயிகளை திட்டமிட்டு வஞ்சித்து வதைத்து வருகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களையும் விவசாயிகளும், பொதுமக்களும் ஆங்காங்கே நடத்தினாலும் மத்திய ஆட்சியிலிருந்து விடை பெறப்போகும் பிரதமர் திரு நரேந்திர மோடியும் கண்டு கொள்ளவில்லை. இங்கே ஆட்சியை விட்டு விரைவில் அனுப்பப்படவிருக்கும் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்ற நேரத்தில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது தேர்தல் விதிமுறை மீறல்.

ஆனால் அ.தி.மு.க-வின் ஆத்மார்த்த “கூட்டணிக் கட்சியான” பா.ஜ.க. தலைமையிலான அரசு, வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு புதிதாக விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்ட சுற்றுப்புறச்சூழல் அனுமதியும் கொடுத்து விட்டு, மக்களிடம் கருத்தும் கேளுங்கள் என்று ஒப்புக்காக ஒரு வெற்று நிபந்தனையை விதித்து தமிழக விவசாயிகளின் வயிற்றில் ஓங்கி அடித்துள்ளது. விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் வறட்சி, குடிநீர்ப் பஞ்சம் என்று காவிரி டெல்டா பகுதிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட மக்களும் தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், வீட்டுக்குப் போகும் நேரத்தில் கூட தமிழக மக்களுக்கு வேதனை தருவோம், துரோகம் செய்வோம் என்று இப்படியொரு அபத்தமானதும் ஆபத்தானதுமான அனுமதியை பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க அரசும் கைகோர்த்து அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே, மத்தியில் புதிய அரசு அமையும் வரை வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்ட அளிக்கப்பட்டிருக்கும் அனுமதியையும், அதன் மீதான தொடர் நடவடிக்கைகளையும் மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். மத்திய பா.ஜ.க. அரசு, வேதாந்தா நிறுவனத்துடன் உள்ள நெருக்கத்தின் காரணமாக, ஒருவேளை நிறுத்தி வைக்க மறுத்து பிடிவாதமாக இருந்தால், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமே நேரடியாகத் தலையிட்டு இந்த அனுமதியை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காவிரி டெல்டா மண்டலம் பாலைவனம் ஆவதைத் தடுக்க, தமிழக அரசே இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக கடிதம் எழுதி, இந்தத் திட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, மக்கள் போராட்டத்துக்கு வித்திட வேண்டாமென எச்சரிக்க விரும்புகிறேன்" என ஸ்டாலின் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin condemns central govt for hydrocarbon projects


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->