‘ஜீ தமிழ்’ விவகாரம் : பாஜக அரசுக்கு சீமான் விடுத்த கண்டனம்.! - Seithipunal
Seithipunal


‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுப்பதா? அதிகாரப்பலம் கொண்டு ஊடகங்களை அச்சுறுத்தி, அடக்கியாள முற்படுவதா? என்று பாஜக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில்,"ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியொன்றில் சிறுவர்கள் இருவர் மோசமான ஆட்சியாளர் குறித்து மன்னர், அமைச்சர் வேடமிட்டு, பகடி செய்ததற்காக அத்தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தலும், மிரட்டலும் விடுக்கும் பாஜகவின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பாஜகவின் ஆட்சி குறித்து அந்நிகழ்ச்சியில் நேரடியாக விமர்சிக்கப்படாதபோதும்கூட அத்தொலைக்காட்சியின் மீது அதிகாரத்தின் மூலம் அடக்குமுறையை ஏவிவிடத்துடிக்கும் பாஜகவின் செயல்பாடு கருத்துரிமை மீதானக் கோரத்தாக்குதலாகும்.

கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் போன்ற கருத்தாளர்களும், செயற்பாட்டாளர்களும் கொலை செய்யப்படுவதும், ஆனந்த் டெல்டும்டே, வரவர ராவ், ஸ்டோன் சுவாமி போன்ற சமூகச்செயற்பாட்டாளர்கள் கொடுஞ்சட்டங்களின் மூலம் பிணைக்கப்படுவதும், ஊடகங்கள் வெளிப்படையாக அச்சுறுத்தப்படுவதுமான நிகழ்வுகள் நாட்டின் சனநாயகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

ஏழு ஆண்டுகால பாஜகவின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட கொடும் சட்டங்கள், பேரழிவுத்திட்டங்களின் விளைவினால் நாட்டு மக்கள் வாடி வதங்கிக்கொண்டிருக்கையில், அதுகுறித்த அறச்சீற்றத்தையும், உள்ளக்குமுறலையும் வெளிப்படுத்தவும் தடையிடுவார்களென்றால், நடப்பது மன்னராட்சியா? மக்களாட்சியா? எனும் கேள்வி எழுகிறது. இது மக்களாட்சித் தத்துவத்திற்கெதிரான மாபெரும் சனநாயகப்படுகொலை; கருத்துச்சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் அரசப்பயங்கரவாதம்.

இதனை ஒருபோதும் அனுமதிக்கவோ, சகித்துக்கொள்ளவோ முடியாது. அதிகாரப்பலம் கொண்டு ஊடகங்களை அடக்கியாள முற்படும் பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு எனது வன்மையான எதிர்ப்பினைப் பதிவுசெய்கிறேன்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman say about zee tamil bjp issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->