சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்க வைத்து அரசியல் வணிகம் செய்வதா? பாஜகவுக்கு சீமான் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில், சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்க வைத்து அரசியல் வணிகம் செய்வதா? என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கணடனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அசாம் மாநிலத்தில் பெய்த அதிகப்படியான மழைப்பொழிவால் 30 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பெரும்வெள்ளம் காரணமாக, 45 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு, 80க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து, அம்மாநிலமே பேரிடரில் சிக்கித் தவிக்கிற சூழலில், சிவசேனா கட்சியைச் சேர்ந்த மராட்டிய மாநில சட்டமன்ற உறுப்பினர்களை அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் தங்க வைத்து ஆட்சிக்கலைப்புக்கான முன்னெடுப்புகளைச் செய்து வரும் பாஜக ஆட்சியாளர்களின் கொடுங்கோல் செயல்பாடுகள் வெட்கக்கேடானவையாகும். 

மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம்பேசி தன் பக்கம் ஈர்ப்பதும், மாநில அமைச்சரவையைச் சீர்குலைத்து, தனது அதிகார வலிமையைக் கொண்டு கலைப்பதும், மாநிலக்கட்சிகளைப் பிளவுப்படுத்தி, பலவீனப்படுத்துவதுமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் பாஜகவின் எதேச்சதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

அதுவும் வெள்ளத்தாலும், பேரழிவாலும் பாதிக்கப்பட்டு நிற்கிற அசாம் மாநிலத்தில் இத்தகையக் கேலிக்கூத்துகளை அரங்கேற்றுவது துளியும் மக்கள் நலனற்ற கொடுங்கோல்தனத்தின் உச்சமாகும். 

மானுடக்கூட்டம் வெள்ளப்பேரழிவில் சிக்கி, அன்றாடத்தேவைகளுக்கும், அத்தியாவசிய இருப்புகளுக்குமாக வாழ்க்கைப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் துயர்நிறைந்த அசாம் மாநிலத்தில், சிவசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்க வைத்து, அவர்களைக் கண்காணித்து வரும் பாஜகவின் தலைவர் பெருமக்கள் தங்களது அதிகாரப்பரவலாக்கலுக்கான இலாப நட்டக்கணக்கீடுகளையும், பதவிப்பேரங்களையும், அரசியல் வணிகங்களையும் கொஞ்சமும் நாணமின்றி செய்து வருவது ஏற்கவே முடியாத மிக இழிவான அரசியலாகும்.

மனிதர்களைச் சாகடித்து, மதத்தை வளர்ப்பதும், குடிகளைப் பாழ்படுத்தி ஆட்சியை நிறுவுவதுமான மாந்தநேயமற்ற இச்செயல்பாடுகளாலேயே, பாஜக எனும் அரசியல் இயக்கத்தையும், அதன் இந்துத்துவக் கோட்பாட்டையும் மானுட விரோதிகளென எச்சரிக்கிறோம்!

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman say about shivshena issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->