இருக்கன்குளம் சம்பவம் : திமுக அரசு மக்களுக்குத் தரும் விடியலா இது., வெட்கக்கேடு - சீமான் கொந்தளிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடந்தேறும் வளக்கொள்ளைகளை வேடிக்கைப் பார்ப்பதும், அதனைத் தடுத்து நிறுத்தும் அதிகாரிகளை நெருக்கடிக்குள்ளாக்கி, பணியிடமாற்றம் செய்வதும்தான் திமுக அரசு மக்களுக்குத் தரும் விடியலா? வெட்கக்கேடு! இதனை இம்மண்ணையும், மக்களையும் நேசிக்கும் இனமானத்தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் கண்டன அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரிகளிலிருந்து முறைகேடாகக் கற்களை வெட்டி, கேரளாவுக்குக் கடத்திய கனிமவளக்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுத்த துணை ஆட்சியர் மற்றும் மாவட்டக்காவல்துறை கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்துள்ள திமுக அரசின் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது. மண்ணின் வளங்களைக் காக்க வேண்டிய அரசே கொள்ளையர்களுக்கு ஆதரவாக நின்று, நேர்மையாகச் செயல்படும் அரசு அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து பந்தாடுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

திருநெல்வேலி மாவட்டத்தின் இராதாபுரம், இருக்கன்குளம், கூடங்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள கல்குவாரிகளிலிருந்து கற்கள் அளவுக்கதிகமாக வெட்டியெடுக்கப்பட்டு, கேரளாவில் கட்டப்பட்டுவரும் விழிஞ்சியம் துறைமுகத்திற்காகக் கடத்தப்பட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட சோதனையில் 4.04 இலட்சம் கன மீட்டர் அளவிற்கு முறைகேடாகக் கனிமவளங்கள் வெட்டியெடுக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்துக் கனிமவளக்கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்களைச் சிறைபிடித்து, கனிமவளக்கொள்ளையில் ஈடுபட்ட கல்குவாரி நிறுவனத்திற்கு 20 கோடி ரூபாய் அளவிற்குத் தண்டமும் அரசு அதிகாரிகளால் விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், நேர்மையாகச் செயல்பட்டு அத்தகைய நடவடிக்கைகளை எடுத்த துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்டக்காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோரைத் திடீரென திமுக அரசு இடமாற்றம் செய்திருப்பது அதிகாரத்திமிராகும். 

கனிமவளக்கொள்ளையர்களுக்காக நேர்மையான அதிகாரிகளை இடமாற்றம்செய்து, வளைந்து கொடுக்கும் திமுக அரசின் செயல் வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றிவைத்த மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும்.

மேலும், இக்கனிமவளக்கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதற்காக விரைவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரையும் மாற்றவிருப்பதாக வெளியாகும் செய்திகள் வளக்கொள்ளையர்களின் வளவேட்டைக்கு வெளிப்படையாகத் துணைபோகும் ஆளும் திமுக அரசின் இழிநிலையையே காட்டுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மலைகளை வெட்டி, கேரள மாநிலத்திற்குக் கடத்துவதைத் தடுத்துநிறுத்த தவறிய திமுக அரசு, தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் கனிமவளக்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்திருப்பது அரசின் மக்கள்விரோதப்போக்கையே வெளிக்காட்டுகிறது. 

தமிழகத்தில் நடந்தேறும் வளக்கொள்ளைகளை வேடிக்கைப் பார்ப்பதும், அதனைத் தடுத்து நிறுத்தும் அதிகாரிகளை நெருக்கடிக்குள்ளாக்கி, பணியிடமாற்றம் செய்வதும்தான் திமுக அரசு மக்களுக்குத் தரும் விடியலா? வெட்கக்கேடு! இதனை இம்மண்ணையும், மக்களையும் நேசிக்கும் இனமானத்தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

ஆகவே, தென்மாவட்டங்களிலிருந்து கேரள மாநிலத்திற்கும், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கும் முறைகேடாக நடைபெறுகின்ற கட்டுக்கடங்காத கனிமவளக்கொள்ளையை ஆளும் திமுக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், கனிமவளக் கொள்ளைக்கு எதிராக நேர்மையாகச் செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டுள்ள பணியிடமாற்ற நடவடிக்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SEEMAN SAY ABOUT NELLAI SP CHANGE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->