400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள பெருந்துயரம்! தமிழக அரசுக்கு சீமான் வைத்த கோரிக்கை! - Seithipunal
Seithipunal


காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள குருங்குடி கிராமத்தில் காந்திமதி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் நடைபெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட 9 பெண்கள் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயற்றேன். 

ஆற்ற முடியாதப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன். பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் ஏற்படும் வெடிவிபத்தில் மனித உயிர்கள் மலிவாக உயிரிழப்பது வாடிக்கையான ஒரு செய்தியாக மாறிவிட்டது. இதில் விபத்து எனும் போர்வைக்குள் அரசும், அதிகாரிகளும் ஒளிந்துகொள்கிறார்கள். விதி மீறலும், பாதுகாப்பின்மையும்தான் பெரும்பாலும் இதுபோன்ற உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைகிறது என்பதை ஒருபோதும் மறுக்க முடியாது. இந்த பட்டாசு விபத்துகள் இன்று நேற்றல்லாது பல ஆண்டுகளாக தொடர்வதுதான் பெரும் வேதனைக்குரியச் செய்தியாகும்.

கடந்த 2005ஆம் ஆண்டு சிவகாசி மீனாம்பட்டியில் நடந்த விபத்தில் 20 பேர்; 2009ல் சிவகாசி நமஸ்கரித்தான்பட்டியில் நடந்த விபத்தில் 18 பேர்; 2010ல் சிவகாசியில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர்; 2011ல் சனவரி மாதம் விருதுநகரில் நடந்த விபத்தில் 7 பேர்; அதே ஆண்டு ஏப்ரலில் நடந்த விபத்தில் 2 பேர்; சூன் மாதம் தூத்துக்குடியில் நடந்த விபத்தில் 4 பேர்; 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலிப்பட்டியில் நடந்த விபத்தில் 40 பேர்; அதே ஆண்டில் டிசம்பரில் சேலம் மேச்சூரில் நடந்த விபத்தில் 10 பேர்; 2013ஆம் ஆண்டு சிவகாசி, நாரணபுர விபத்தில் 6 பேர், 2016ஆம் ஆண்டு மார்ச்சில் சிவகாசி, காரிசேரியில் நடந்த வெடி விபத்தில் 3 பேர்; சூன் மாதம் சிவகாசி, பூலாவூரணியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர்; சூலை மாதத்தில் சிவகாசி வெம்பக்கோட்டை சங்கிபாண்டிபுரம் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர்; அக்டோபரில் விழுப்புரம் மாவட்டம், வானூர் துருவை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர், சிவகாசியில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர், கோவையில் நடந்த வெடிவிபத்தில் ஒருவர், 2017 மார்ச் சிவகாசி விபத்தில் 5 பேர், 2018 சிவகாசி காக்கிவாடன்பட்டி விபத்தில் 3 பேர், 2019 பிப்ரவரி திருநெல்வேலி விபத்தில் 6 பேர், 2020 பிப்ரவரி சாத்தூர் விபத்தில் ஒருவர் என கடந்த 17 ஆண்டுகளில் நடந்த பட்டாசு ஆலைகளிலும் கடைகளிலும் கிடங்குகளிலும் ஏற்பட்ட வெடிவிபத்துகளில் மட்டும் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள பெருந்துயரம் இப்போதுவரை நீண்டுகொண்டே வருகிறது.

உரியப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும், அடிப்படை விதிகளும் காற்றில் பறக்கவிடப்படுவதும், அதனை அதிகாரிகள் அலட்சியப்போக்கோடு கையாளுவதும், பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் நடந்தேறும் இவ்விதக் கோர விபத்துகளின் வீரியம் தெரிந்தும் கண்டும் காணாதிருக்கும் அரசின் மெத்தனமும்தான் இத்தனை உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது.

ஆகையினால், இந்த வெடி விபத்துகள் இனியும் தொடராமல் இருக்க அரசானது உடனடியாகத் தலையிட்டு உரிய நீதிவிசாரணை செய்ய வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் இருக்கும் பட்டாசு ஆலைகள், பட்டாசு கடைகளின் பாதுகாப்பை சோதனைசெய்து உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இறந்துபோனவர்களின் குடும்பத்திற்கு தலா 10 இலட்சம் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் எனவும், அப்பகுதி மக்களுக்குப் பாதுகாப்பான மாற்றுத்தொழில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கோருகிறேன்" என்று அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman rquest to tn govt for kurungudi fire accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->