என்னை தனியேவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா? - சீமானின் நெஞ்சில் இடியாய் பாய்ந்த மறைவு..! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மாமா!

உங்களது பிரிவு மாபெரும் இருட்டுக்குள் என்னை தள்ளிவிட்டிருக்கிறது. என் வாழ்நாளின் பல தருணங்களில் சொல்வழியே, செயல்வழியே நம்பிக்கை அளித்து வழிநடத்திய நீங்கள் நட்ட நடுவழியில் தவிக்கவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா?

நீங்கள் இல்லாத இவ்வாழ்வினை எப்படி வாழப்போகிறேன்?

என் வாழ்வின் அனைத்துப்பொழுதுகளிலும் நீங்கள்தானே மாமா நிறைந்து இருக்கிறீர்கள்! உங்களைப் போன்று என்னை உணர்ந்தவர் யாருண்டு மாமா?

நான் மேடையேறியப் பொழுதுகளிலிருந்து உங்கள் விரல் பிடித்துதானே மாமா நான் வழிநடந்திருக்கிறேன்!

என் வாழ்க்கையின் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளிலும் கூடவே இருந்திருக்கிறீர்கள்!

எனது சுக துக்கங்களில் பங்கெடுத்திருக்கிறீர்கள்!

நீங்கள் பொருளாதாரத்தில் உயர்ந்திருந்த பொழுதில், 'நான் இருக்கிறேன் மருமகனே!' என நம்பிக்கை அளித்திருக்கிறீர்கள்! பொருளாதாரத்தில் வீழ்ந்த காலக்கட்டத்திலும் "எப்படியாவது தேறி வந்து விடுவேன் மருமகனே! நீ துணிந்து நில்" என ஒவ்வொரு நொடியும் தேறுதல் வார்த்தைகள் பேசி கண்ணின் இமை போல என்னை காத்திருக்கிறீர்கள்!

நாம் தமிழர் என்கின்ற இந்த மாபெரும் இயக்கத்தை உருவாக்க நாம் முடிவு செய்தபோது, நீங்கள் தானே மாமா எனக்கு முதுகெலும்பாய் மாறி நின்றீர்கள்! இப்போது என்னைவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா?

ஈழ விடுதலைக்களத்தில், தமிழ்த்தேசியப் பயணத்தில் எண்ணற்றோர் சமரசமடைந்து மெளனித்தபோதும் நீங்கள் என்னோடு இருந்து நாம் செல்கின்ற திசை சரியென உலகுக்கு உணர்த்தினீர்களே மாமா! உளவியல் பலமாய், உற்ற துணையாய் எப்போதும் இருந்தீர்களே மாமா! இப்போது எங்கே சென்றீர்கள்?

இனத்திற்காக பொல்லாத பொடா சட்டத்தின் கீழ் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைவாசம்! இனமான பணிகளுக்கென எவர் வந்தாலும் அள்ளி அள்ளிக்கொடுத்த வள்ளலைப் போன்ற வாழ்க்கை என எந்த சூழ்நிலையிலும் தமிழினத்தையும், தமிழ் மொழியையும் பற்றி சிந்திக்காமல் நீங்கள் இருந்ததில்லையே மாமா!

இப்போது என்னை மட்டும் தனியே விட்டு தூரம் போய்விட்டீர்களே மாமா!

நோயுற்ற பொழுதுகளிலும்கூட மருத்துவமனையிலிருந்து அலைபேசி வழியாக காணொளி அழைப்பு பேசியபோது வலது கரம் உயர்த்தி நம்பிக்கையோடு புன்னகைத்தீர்களே மாமா! அந்தப் புன்னகையை இனி நான் எங்கு காண்பேன்?

எப்படியும் நீங்கள் திரும்பி வந்து விடுவீர்கள் என்றுதானே நான் காத்திருந்தேன்! இப்படி என்னை ஏமாற்றிவிட்டு சென்றீர்களே மாமா!

உங்கள் மருமகனை முதல்முறையாக காத்திருக்க வைத்துவிட்டு, தாயற்றப் பிள்ளை போல தவிக்க விட்டுவிட்டு எங்கே சென்றீர்கள்‌ மாமா?

போராட்டமென்றதும் முதல் ஆளாய் களத்தில் நிற்பீர்களே! இனி எங்கு உங்களைக் காண்பேன்?

'மருமகனே' எனும் அந்தக் குரலை இனி எப்படி கேட்பேன்?

'இறுதிவரை களத்தில் நிற்போம் மருமகனே!' என நெஞ்சார சொல்வீர்களே! இப்படி பாதியிலேயே விட்டுவிட்டு போய்விட்டீர்களே மாமா?

'மருமகனே' என நீங்கள் அழைக்கும்போதெல்லாம் உங்கள் அன்பின் நிழல்பட்டு சிலிர்த்திருக்கிறேனே மாமா! அதுவெல்லாம் கனவாய் காற்றில் கரைந்துவிடுமா மாமா?

தனியே கண்கலங்கி துடிக்கிறேன் மாமா! தேற்ற நீங்கள் இல்லை!

மனம் கலங்கி நான் தவித்த பொழுதுகளிலெல்லாம் ஆறுதல் வார்த்தைகளால் நெஞ்சம் நிறைத்து தேற்றுவீர்களே மாமா! இப்போது நீங்கள் அழுகையைத் தந்து மீள முடியாத் துயரில் ஆழ்த்தி சென்றுவிட்டீர்களே மாமா!

பொங்கிவரும் என் கண்ணீரின் ஊடே எந்த இலட்சியத்திற்காக இவ்வாழ்வில் நமது கரங்கள் ஒன்று சேர்ந்ததோ? அந்த இலட்சியம் வெல்ல நான் உயிர் உள்ளவரை உழைப்பேன் என உங்கள் பேரன்பு முகம் நினைத்து உறுதி ஏற்கிறேன் மாமா!

நீங்கள் சுவாசித்த காற்று இன்னும் இந்த மண்ணில்தான் உலவிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையோடு, எமது உணர்வாக, எமது விடுதலை கனவாக நிறைந்திருந்து நீங்கள் என்னை வழி நடத்துவீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் மாமா. மீளாத் துயருடன் உங்கள் மருமகன் சீமான் " கூறியுள்ளார்.

மேலும், ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது பற்றிய சிறுகுறிப்பு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியும், மாநில ஒருங்கிணைப்பாளருமான ஐயா ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்கள் (வயது 60) பிறந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அந்தனப்பேட்டை எனும் சிற்றூராகும். 1974 – 82 காலக்கட்டத்தில் திருவாரூரில் வணிக நிறுவனம் நடத்தி அங்கேயே வளர்ந்தவர் என்பதால் இவருக்கு, திருவாரூர் நன்கு அறிமுகம். தமிழ்த்தேசிய அரசியல் கருத்துகள் நிறைந்த ‘தமிழ் முழக்கம் வெல்லும்‘  இதழைப் பல ஆண்டுகளாக நடத்தியவர்.

ஈழத்தின் மீதும் தலைவர் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்ட சாகுல் அமீது அவர்கள், 2002ஆம் ஆண்டு, தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கிளிநொச்சியில் உலகச் செய்தியாளர்களுக்கு அளித்த. நேர்காணலைத் திறனாய்வு செய்வதற்காக, சென்னை ஆனந்தா திரையரங்கில் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக, ‘பொடா‘ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஏறத்தாழ 17 மாதங்கள் சிறைக்கொட்டடியில் வதைப்பட்டார். அதே ஆண்டின் தொடக்கத்தில் ஐயா பழ.நெடுமாறன் எழுதிய, ‘தமிழீழம் சிவக்கிறது’ எனும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகத் தனது வணிகக் கிடங்கில் வைத்திருந்ததால், தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பல்வேறு தமிழ்த்தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னையொரு தமிழ்த்தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டு உறுதியாக களத்தில் நின்றதனால் இவரது தொழில்கள் முடக்கப்பட்டு, பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்தார். தமிழ் இனத்தின் மீதும் மொழியின் மீதும் இருந்த தணியாத பற்றினால் பாரிய இழப்புகளைச் சந்தித்தபோதும் அதனைத் துளியும் பொருட்படுத்தாது தமிழ்த்தேசியக் களத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் பேராளுமை.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி மற்றும் இயக்கத் தலைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். இராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு விசாரிக்கப்பட்ட மிக முக்கியத் தமிழ்த்தேசியவாதிகளில் சாகுல் அமீதும் ஒருவர்.

நாம் தமிழர் கட்சியின் தொடக்கக் காலத்திலிருந்தே தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர். காவிரி உரிமை மீட்புப் போராட்டம், மீத்தேன்-ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரானப் போராட்டங்கள் உள்ளிட்ட மண்ணின் உரிமைகளுக்கானப் போராட்டங்களிலும் தமிழர் வாழ்வாதாரப் போராட்டங்களிலும் நாம் தமிழர் கட்சியை முன்னின்று நடத்தியவர். மாநில ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்று கட்சி கட்டமைப்புப் பணிகளில் திறம்பட செயலாற்றியவர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றி நாம் தமிழர் கட்சிக் கொள்கைகளைப் பரப்பியவர்.

அண்மையில் கஜா புயலில் சிக்குண்டு பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கஜா புயல் துயர் துடைப்புப் பணிகளில் முன்னின்ற களப்பாணியாளர்களில் சாகுல் அமீது அவர்களும் ஒருவர்.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக 2016 சட்டமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியிலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியிலும் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றார். எதிர்வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பெருவாழ்வை தமிழீழ விடுதலைக்காகவும், தமிழ்த்தேசிய உணர்வெழுச்சிக்காகவும், தமிழர்களின் நலவாழ்வுக்காகவும் அர்ப்பணித்து தனது வாழ்நாள் முழுவதையும் இன மீட்சிக்கான போராட்டக் களத்திலும், சிறைக் கொட்டடியிலும் கழித்தவர் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்று (19-09-2020) மாலை 06 மணியளவில் உயிரிழந்தார்.

ஐயா சாகுல் ஹமீது அவர்களின் இறுதிச்சடங்கு இன்று (20-09-2020) காலை 11 மணியளவில் சென்னை இராயப்பேட்டை பள்ளிவாசல் மயானத்தில் நடைபெறவிருக்கிறது. அவரது மறைவையொட்டி மாநிலம் முழுவதும் ஒரு வாரத்திற்கு கட்சி நிகழ்வுகள் யாவும் ரத்து செய்யப்படுகிறது. மாவட்ட/தொகுதி அலுவலகங்களில் துயரம் கடைபிடிக்கும் விதமாக கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டுமென்றும், தனிநபர் இடைவெளியோடும் உரிய பாதுகாப்போடும் நாம் தமிழர் உறவுகள் ஐயாவின் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் " என்று கூறப்பட்டுள்ளது..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman Regret about Sagul Hameed Passed Away


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->