வெளிநாடு வாழ் தமிழர்களின் சிக்கலை தீர்த்தவர்!! சுஷ்மா சுவராஜ்க்கு ராமதாஸ் இரங்கல்!! - Seithipunal
Seithipunal


சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் நேற்றிரவு காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

பாரதிய ஜனதா கட்சியில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ். ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தில் பிறந்த சுஷ்மா சுவராஜ் கல்லூரி படிப்புகளை முடித்த பின்னர் உச்சநீதிமன்ற  வழக்கறிஞராக பணியாற்றினார். நெருக்கடி நிலை காலத்தில் அப்போதைய தொழிற்சங்கத் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கைது செய்யப்பட்டு, கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போது, அவருக்காக உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட வழக்கறிஞர்கள் குழுவில் சுஷ்மாவும் இடம்பெற்றிருந்தார். பின்னர் ஜெயப்பிரகாஷ் நாராயண்  தொடங்கிய இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்ற அவர், தமது 25-ஆவது வயதில் ஹரியானா மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். 27-ஆவது வயதில் அம்மாநில ஜனதா தலைவராக நியமிக்கப்பட்ட சுவராஜ், 41-ஆவது வயதில் மத்திய அமைச்சராகவும், தில்லி மாநில முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

வாஜ்பாய், அத்வானி, மோடி உள்ளிட்ட தலைவர்களின் நம்பிக்கைக்குரியவராக சுஷ்மா திகழ்ந்தார். அரசியலில் மிக உயர்ந்த பதவிகளை அடைந்த போதிலும் எளிமையாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொண்டார். வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா பதவி வகித்த கடந்த 5 ஆண்டுகளில்,  வெளிநாடுகளில் தமிழர்கள் சிக்கலில் தவிப்பதாக டுவிட்டர் மூலம் செய்தி தெரிவித்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட நாடுகளின் வெளியுறவுத்துறையினரைத் தொடர்பு கொண்டு, மீட்க நடவடிக்கை எடுத்தார்.

2014-ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில், இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு விசாரணை நடத்தக்கோரி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா கடுமையாக எதிர்த்தது. இதையடுத்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் பா.ம.க. குழு 16.07.2014 அன்று சுஷ்மா சுவராஜ் அவர்களை தில்லியில் சந்தித்து பேசியது. அதன்  பயனாக அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா வெளியேறிவிட்டது. அவரது மனிதநேயத்துக்கு இன்னும் ஏராளமான உதாரணங்களைக் கூறலாம்.

சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இரு ஆண்டுகளுக்கு முன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். நேற்று காலை வரை திடமாக இருந்து காஷ்மீர் சிக்கல் உள்ளிட்ட அரசியல் மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்து வந்த சுஷ்மா சுவராஜ், நேற்றிரவு காலமாகி விட்டார் என்பதை நம்ப முடியவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramadossCondolences to susma swaraj


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->